சிவலிங்கா



பேய் ஹிட்!

ஒரு கொலைக்குற்றத்தை துப்பறியும் சி.பி.சி.ஐ.டி ஆபீசர் ராகவா லாரன்ஸின் மனைவி ரித்திகா சிங்கின் உடலுக்குள் ஒரு ஆவி குடியேறுகிறது. கொலையாளி எப்படி கண்டுபிடிக்கப்படுகிறான்? ஆவி வெளியேறியதா? என்பதை தேவையான மசாலாக்களை கலந்து தந்திருக்கிறார்கள்.

துறுதுறு போலீஸ் ஆபீசர் கதாபாத்திரத்தில் கம்பீரமாக வலம் வருகிறார் ராகவா லாரன்ஸ். பல்வேறு வகைகளில் விசாரணையை முடுக்குவது, வழக்கம்போல பேய்க்கு பயப்படுவது, கால்களை வளைத்து ரணகள ஆட்டம் போடுவது என அசத்துகிறார். மனைவியை ‘வாங்க, போங்க’ என்று அழைத்து, தாய்க்குலங்களின் பாராட்டைப் பெறுகிறார். தனக்குள் புகுந்த ஆவியுடன் கைகோர்த்து அடிக்கும் உச்சக்கட்ட அடிதடி அதிரடி. வழக்கம்போல ரஜினி புராணமும் பாடுகிறார்.

இயல்பான தோற்றத்துக்கும், ஆவி உடலுக்குள் ஏற்படும் மாற்றத்துக்கும் வேறுபாடு காட்டி நடித்திருக்கிறார் ரித்திகா சிங்.

கதையின் மைய கதாபாத்திரம் சக்திவேல் வாசு. அறிமுகமான அடுத்த நிமிடங்களிலேயே கொலை செய்யப்படுகிறார். பின்வரும் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் மனம் கவர்கிறார். காதல் கைகூடாது என்ற நிலை வரும்போது கனமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

சந்தேகப்படும்படியான கதாபாத்திரங்களில் ராதாரவியும் ஜெயப்பிரகாஷும் நேர்மையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். பட்டுக்குஞ்சம் கதாபாத்திரத்தில் திருந்திய திருடனாக வருகிறார் வடிவேலு. பல இடங்களில் பல்லை பதம் பார்க்க வைக்கிறார். ஊர்வசியிடம் செய்துகாட்டும் திருட்டு டெமான்ஸ்ட்ரேஷன் ஹைலைட்.

அறுசுவை அன்னலட்சுமியாக அலப்பறை செய்கிறார் ஊர்வசி. அவருக்கு கணவர் வேலை செய்பவராக  டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் வருகிறார். இடைவெளிக்குப்பின் நடிக்க வந்தாலும் பானுப்ரியாவிடம் அப்படியே இருக்கிறது நடிப்பு.  சக்திவேல் வாசுவின் காதலியாக வரும் சாராவிடம் எதார்த்த நடிப்பு இருக்கிறது.

 கொலைக்கு ஒரே சாட்சியான சாரா என்கிற புறாவும் முக்கிய பங்கு வகித்துள்ளது. அனல் அரசு, தளபதி தினேஷ், மாஸ் மாதா அமைத்திருக்கும் சண்டைக்காட்சிகளில் வேகமும் விறுவிறுப்பும்  களைகட்டுகிறது.விவேகாவின் வரிகளுக்கு வெரைட்டியான டியூன் போட்டு வசீகரிக்கிறார் எஸ்.எஸ்.தமன். சர்வேஷ் முராரியின்  ஒளிப்பதிவு படத்தை பிரமாண்டமாக்குகிறது. ‘சந்திரமுகி’யைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் பேயை வெற்றி பெற வைத்திருக்கிறார் இயக்குநர் பி.வாசு.