நோக்கத்தை நோக்கி தியாகம்!



சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்! மாணவன் 35

சில வாரங்களாக வரிசையாக ‘தியாகம்’ வந்து கொண்டே இருக்கிறது.ஒரு கதைக்கு ‘தியாகம்’ அவ்வளவு முக்கியமா என்று கேட்டால், ‘ஆமாம்’.தியாகம் என்பது காதல் மாதிரி உலகளாவிய மனித உணர்வு. யுனிவர்சலான ஒரு தீம் பிடித்துவிட்டால், உங்கள் கதை ரீமேக் ரைட்ஸிலும் துட்டை அள்ளும் என்பது கூடுதல் அட்வான்டேஜ்.

எல்லோருக்கும் நல்லது நடக்கும் என்கிற பட்சத்தில் சுயநலத்தை மறந்து பொதுநலத்துக்காக ஹீரோ, தன் வாழ்வின் முக்கியமான நபரையோ, பெரும் பணத்தையோ, பதவியையோ தியாகம் செய்கிறார் என்றால் அவர் நிஜமாகவே தியாகிதானே? தியாகிகளை பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா?

ஹாலிவுட்டின் சூப்பர்மேன்களை பாருங்களேன். உலகத்தைக் காப்பாற்றுவதற்காக (!) தங்கள் காதலியையோ, சொந்த வாழ்க்கையையோ தியாகம் செய்தவர்களாக இருப்பார்கள்.ஆனால்-தியாகம் செய்ய உங்கள் ஹீரோ சூப்பர்மேனாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.‘காதலுக்கு மரியாதை’ படத்தில் விஜய்க்கும் ஷாலினிக்கும் தெய்வீகக் காதல்.

அந்த காதல் நிறைவேறும் பட்சத்தில் இரண்டு குடும்பங்களுக்குமே சங்கடம் எனும்போது, தாங்கள் நேசிக்கும் குடும்பத்தாருக்காக உயிரினும் மேலான தங்கள் காதலையே இருவரும் தியாகம் செய்கிறார்கள்.காதலுக்காக உயிரைக் கொடுத்த காதலர்களையே ‘அம்பிகாபதி’ காலத்தில் இருந்து பார்த்துவந்தவர்கள் நாம். காதலுக்காக காதலை தியாகம் செய்து ‘காதலுக்கு மரியாதை’ செலுத்தியதால்தான் அந்தப் படத்தையே இருநூறு நாட்களுக்கு ஓடவைத்தோம்.

இயக்குநர் ஃபாசில் புத்திசாலி.காதலர்களின் தியாகத்தோடு படத்தை முடித்துவிடவில்லை. விஜய்க்கும், ஷாலினிக்காகவும் அவர்களது குடும்பத்தினர் தங்களது கலாச்சாரம், மரபு, மதம் அத்தனையையும் தியாகம் செய்ய முன்வருகிறார்கள் என்று குடும்பங்களுக்கு மரியாதை ஏற்படுத்தினார்.

இப்படியாக பரஸ்பரம் ஒவ்வொரு கேரக்டரும் ஒருவருக்கு ஒருவர் தியாகம் செய்துகொள்ள ஒரு முழுமையான ஃபீல்குட் படம் பார்த்த உணர்வு ஒவ்வொருவருக்கும் தோன்றியது.

அடுத்த வாரமும் நாம் இன்னொரு தியாகத்தைத்தான் பார்க்கப் போகிறோம். ‘தியாகம்’ என்கிற வார்த்தையை சினிமாவுக்கு கதை எழுத விரும்புகிறவர்கள் மனசுக்குள் போட்டு தியானம் செய்வது மாதிரி உருட்டிக்கொண்டே இருப்பது அவசியம். ஏனெனில் தியாகம் செய்யும் கேரக்டர்களை நீங்கள் படைக்கும்போதுதான், படம் பார்ப்பவர்கள் விழியோரத்தில் தேங்கும் நீரை துடைத்துக்கொள்ளும் நெகிழ்ச்சியை உருவாக்குகிறீர்கள்.

(கதை விடுவோம்)