கடம்பன்



காடுதான் எங்க வீடு!

வனத்தையே சாமியாக மதித்து வாழும் காட்டுவாசிக் கூட்டத்துக்கும், அந்த வனத்திலிருக்கும் வளங்களை சட்டவிரோதமாக களவாட முயற்சிக்கும் கார்ப்பரேட் ரவுடிகளுக்கும் இடையே நடக்கும் போராட்டமே கதை.டைட்டில் கதாபாத்திரத்தில் கடம்பனாகவே வாழ்ந்திருக்கிறார் ஆர்யா. திடகாத்திர உடல்வாகு, திமிரான பார்வை என காட்டுவாசியை கண்முன் நிறுத்துகிறார்.

 உயிரைப் பணயம் வைத்து எடுத்து வந்த தேனை ஊர் மக்களுக்கு பிரித்துக் கொடுக்கும் காட்சியில் சோசலிசம் சொல்கிறார். துரத்தித் துரத்தி காதலிக்கும் கேத்தரின் தெரஸாவிடம், பிடிகொடுத்தபிறகு காதலில் பின்னியெடுக்கிறார்.

அறக்கட்டளை என்ற போர்வையில் உதவி செய்ய வந்தவர்களின் பின்னால், ஒரு சமூக விரோதக் கூட்டம் இருக்கிறது என்பதை அறிந்தபிறகு அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அதிரடி. ‘காட்ட காப்பாத்தணும்னு நினைக்கிற நாங்க காட்டுமிராண்டினா, கடைசி வரை அப்படியே இருந்துட்டுப் போறோம். இந்தக்காட்டுல கடைசியா ஒருத்தன் இருக்கற வரைக்கும் இங்கிருந்து உங்களால ஒரு கைப்பிடி மண்ணக்கூட அள்ளிட்டுப்போக முடியாது’ என்று பேசும்போது கைதட்டல்களைக் கவர்ந்து கொள்கிறார்.

காட்டுவாசிப் பெண்ணாக வரும் கேத்தரின் தெரஸாவின் மேக்கப் பளிச்சென்று வெளியே தெரிகிறது. உருகி உருகி காதலிப்பது மட்டுமே அவரது முழுநேர வேலையாக இருக்கிறது. காட்டு வளத்தைச் சுரண்ட முயலும் வில்லனாக தீப்ராஜ் ராணா வருகிறார். பிரமாதமாக திட்டம் போட்டு  பரிதாபமாக தோற்றுப்போகும் கதாபாத்திரம்.

ஒய்.ஜி.மகேந்திராவும் மதுவந்தியும் நம்பிக்கைத் துரோகிகளாக வருகிறார்கள். ‘புள்ளகுட்டி மாரியப்பன்’ கதாபாத்திரத்தில் வரும் முருகதாஸ், பிஞ்சுக்குழந்தையைப் பறிகொடுத்தபோது கலங்க வைக்கிறார். மூப்பன் கதாபாத்திரத்தில்  ஆர்யாவின் அப்பாவாக நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார் சூப்பர் சுப்பராயன்.

ஆர்யாவின் அறிமுகக் காட்சியிலேயே, ‘யாருய்யா கேமராமேன்?’ என்று கேட்க வைக்கிறார் எஸ்.ஆர். சதீஷ்குமார். காட்டுக்குள் நடத்தப்பட்ட அவரது ஒளிவேட்டை நல்ல விருந்து.யுகபாரதியின் வரிகளில் காதல், குழு கொண்டாட்டம், சோகம் என அத்தனை ரகமும் அழகு. ‘ஒத்தப் பார்வையில்’, ‘சாமக்கோடங்கி’ பாடல்கள் சிறப்பு.

பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் புதுவேகம்  காட்டியிருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. திலீப் சுப்பராயனின் காட்டுத்தனமான சண்டைக்காட்சிகள் அதிரடி. வனவளம் காப்போம் என்கிற அவசிய கடமையை அக்கறையோடு வலியுறுத்தியிருக்கிறார் இயக்குநர் ராகவா.