ஆசை ஆசையாய் ரவிமரியா



டைட்டில்ஸ் டாக் 10

இந்த உலகத்துலே ஆசையில்லாத மனிதர்களே இல்லை. நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
எட்டாவது படிக்கிறப்போ ஸ்கூலில் நடந்த மோனோ ஆக்டிங் போட்டியில் ஆசையா கலந்துக்கிட்டேன். அந்த நாடகத்தில் நான் ராமராஜன் நடிச்ச ‘தங்கமடி தங்கம்’ படத்தில் லூஸ்மோகன் ஏற்று நடித்த வேடத்தைதான் நடிச்சி காண்பிச்சேன்.

ஒரிஜினலா லூஸ் மோகன் லுங்கி, பனியன் அணிந்து நடிப்பாரு. எங்கிட்டே பனியனும் இல்லே.  லுங்கியும் இல்லே. அப்போவெல்லாம் யாருங்க உள்பனியன் போடுவாங்க. அப்பாகூட வேட்டிதான் கட்டுவாரு. அப்போ எங்க வீட்டுக்கு மாமாவும், அவரோட பையனும் வந்திருந்தாங்க.

மாமாகிட்டே இருந்து லுங்கியும், மாமா பையன்கிட்டே இருந்து உள்பனியனும் வாங்கிக் கிட்டேன். ஒருமாதிரியா போட்டியில் நடிச்சி மூணாவது பரிசையும் வாங்கிட்டேன். மொத்தமா மூணு பேருதான் அந்தப் போட்டியிலே கலந்துக்கிட்டாங்க என்பது இதுவரைக்கும் நான் பொத்திப் பாதுகாத்த ரகசியம்.

ஒருவாரம் கழிச்சி பரிசளிப்பு விழா. பரிசு வாங்குறப்போ மேடையிலே சிறப்பு விருந்தினர்கள் முன்னாடி இதையே நடிச்சி வேற காட்டணும். பிரச்னை என்னன்னா, திடீர்னு எங்க மாமாவும், அவரோட பையனும் ஊருக்கு கிளம்பிப் போயிட்டாங்க. போனவங்க சும்மா போவக்கூடாதா? அவங்க லுங்கியையும், பனியனையும் எடுத்துக்கிட்டு போயிட்டாங்க.

வேறு வழியில்லாமே பரிசு வாங்குறதுக்காக பக்கத்து வீட்டு அங்கிள்கிட்டே லுங்கி வாங்கிக்கிட்டேன். அவரோட சைஸ் எனக்கு ஒத்துவராது என்பதால் பனியன் வாங்கிக்கலை. ஆக்சுவலா லுங்கி, பனியனுக்கு வறுமையெல்லாம் இல்லை. “எட்டாவதுதானே படிக்கிற? இப்போ உனக்கு எதுக்கு லுங்கி, பனியன்?”னு வீட்டிலே சிக்கன நடவடிக்கை.

கண்ணுலே எச்சிலைத் தடவிக்கிட்டு அழுற மாதிரி வீட்டுலே ஆக்டிங் கொடுத்து, “ஆசை ஆசையாய் ஒரு பரிசு வாங்கப் போறேன். அதுக்கு ஒரு பனியனுக்கு வக்கத்துப் போயிட்டேனா நானு?”ன்னு ஒப்பாரி வெச்சேன். ‘என்னடா இது ரோதனை’ன்னு எனக்கு ஒரு பனியன் வாங்கிக் கொடுத்தாங்க. அப்போ பனியனோட ரேட்டு ஆறு ரூபாய். அந்த பனியனோடதான் பரிசு வாங்கினேன்.

காப்பி கொடுக்கிற டபரா செட்டில் டம்ளர் மட்டும்தான் பரிசா கொடுத்தாங்க. என்னோட ஆசைக்கு கிடைச்ச டம்ளர் என்பதால், அதை உலகக்கோப்பையை ஏந்திய கபில்தேவ் கணக்கா ஏந்திக்கிட்டு வீட்டுக்கு வந்தேன். டம்ளரோட விலை ஒன்றரை ரூபாய் அல்லது ரெண்டு ரூபாயா இருக்கலாம்.

இந்த இன்சிடென்ட் ஏன் என் மனசுலே ஆழமா பதிஞ்சிடிச்சின்னா, நாம ஒரு விஷயத்தை ஆசைப்பட்டுட்டோம்னா, எந்த விலை கொடுத்தாவது அதை அடைஞ்சே ஆகணும்னு நெனைப்போம். இதுதான் சைக்காலஜி. ஹீரோவுக்கும் சரி, வில்லனுக்கும் சரி, ஆசை என்பது பொதுவான மனித உணர்வுதானே?

நான் வாழ்க்கையில் அதிகமா ஆசை வெச்சது அறிவியல் படிப்பு மேலேதான். பத்தாவது படிக்கிறப்போ நல்ல மார்க் எடுத்தேன். பிளஸ் ஒன்னில் பாட்டனி பாடப்பிரிவு கேட்டேன். பள்ளி நிர்வாகமும் ‘எஸ்.ரவி செலக்டட்டு சயின்ஸ் க்ரூப்பு’ன்னு வீட்டுக்கு ஒரு போஸ்ட் கார்டு போட்டுட்டாங்க.

அந்தக் கார்டை எடுத்துக்கிட்டு பிரெண்ட்ஸ்கிட்டே பெருமையடிக்க ஸ்கூலுக்கு போனேன். கிரவுண்டில் பசங்க விளையாட்டும் கும்மாளமுமா அரட்டை அடிச்சிக்கிட்டிருந்தாங்க. பயங்கர சவுண்டு. சத்தம் கேட்டு பாட்டனி மாஸ்டர் வெளியே வந்தாரு. அவரைப் பார்த்ததுமே எல்லாப் பயலும் எஸ்கேப் ஆயிட்டாங்க. நான் மட்டும் தனியா நின்னேன்.

“என்னடா சவுண்டு?”ன்னாரு.“நான் கத்தலை சார்”“நீயும்தானேடா அந்தக் கூட்டத்துலே இருந்தே?”ன்னு கேட்டுக்கிட்டே என் கையில் இருந்த கார்டை வாங்கிப் பார்த்தாரு.“சயின்ஸ் க்ரூப்பா? நீ என் கிளாஸுக்குதானே வருவே? அப்போ பார்த்துக்கறேன்”னு மிரட்டிட்டுப் போயிட்டாரு.

எனக்கு பயமாயிடிச்சி. உடனே ஹெச்.எம்.மை பார்த்து “எனக்கு சயின்ஸ் க்ரூப் வேணாம் சார். காமர்ஸ் கொடுங்க”ன்னு அடம் புடிச்சேன். “எல்லாப் பயலும் சயன்ஸ் கேட்கிறான், நீ என்னடா காமர்ஸ் கேட்குறே?”ன்னு கேட்டு ஆன் தி ஸ்பாட்டில் எழுதிக் கொடுத்துட்டாரு.

வீட்டுலே லாஜிக்கலா கொஸ்டின் பண்ணாங்க. “உனக்கு சயன்ஸ்தானே பிடிக்கும்? எதுக்கு காமர்ஸ் கேட்டு வாங்கி யிருக்கே?”வாத்தியாருக்கு பயந்த விஷயத்தை சொன்னா நம்ம இமேஜ் போயிடுமே?“காமர்ஸ் படிப்புக்குத்தான் பியூச்சராம்”னு ஒரு போடு போட்டேன்.
இப்படியாக ஒரு சயன்டிஸ்ட், சயன்ஸ் படிக்க ஆசைப்பட்டு முடியாம இப்போ சினிமா டைரக்டர் கம் ஆக்டர் ஆகி நிக்குறேன்.

பி.காம், எம்.ஏ. னு(சோஷியல் ஆர்ட்ஸ்) டாங்க. ரெண்டு பட்டம் வாங்கிட்டாலும் நாம அறிவியல் பட்டதாரி ஆகமுடியலையேன்னு மனசுக்குள்ளே அப்பப்போ வருத்தம் தோணத்தான் செய்யுது. நான் என்ன வேலை பார்க்க ஆசைப்பட்டேன், அது நிறைவேறிச்சான்னு அடுத்த வாரம் சொல்றேன்.

(தொடரும்)
எழுத்தாக்கம் : சுரேஷ்ராஜா