நிசப்தம்



மவுனத்தின் அலறல்

சிதைக்கப்படும் சிறுமியின் கதை.  நேர்த்தியான திரைக்கதை  மூலமாக சொல்ல வேண்டிய கருத்தை தெளிவாகச் சொல்லி சமூகத்தை சிந்திக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மைக்கேல் அருண்.தத்தமது வேலைகளில் கவனமாக இருக்கும் பெற்றோரால் குழந்தையுடன் நேரம் செலவழிக்க இயலாமல் போகிறது.

தனியாக பள்ளிக்குச் செல்லும் வழியில், கயவன் ஒருவனால் குழந்தை கசக்கி எறியப்படுகிறது. அதன் பிறகு மருத்துவ சிகிச்சை, கோர்ட், வழக்கு, ஊடகங்களின் தொல்லை, பெற்றோரின் பரிதவிப்பு, குற்றவாளிக்கு கிடைக்கும் தண்டனை என சமூக அக்கறையோடு சப்தம் போடுகிறது ‘நிசப்தம்’.

அப்பா அம்மாவாக அஜய்- அபிநயா நடித்திருக்கிறார்கள். வேலைப்பளு காரணமாக மகளைப் புறக்கணித்தவர்கள், அந்தக் கொடுமையான கட்டத்துக்கு மேல், அவளைக் கவனிப்பதையே முழு நேர வேலையாகக் கொள்வது பரிதாபமான காட்சிகளாக விரிகின்றன. அஜய்யும் அபிநயாவும் போட்டிபோட்டுக்கொண்டு பாசம் காட்டுகிறார்கள். நிறைவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

 பாதிக்கப்படும் சிறுமி கதாபாத்திரத்தில் சாதன்யா நடித்துள்ளார். முன்னணி நடிகைகளே ரகசியமாக வெட்கப்படும் அளவுக்கு அப்படியொரு உணர்வுகளை அள்ளிக் கொட்டுகிறார். “நீங்க ரெண்டு பேரும் பிஸியா இருப்பீங்கன்னு தெரியும். அதனாலதான் 100க்கு போன் பண்ணினேன்” என்று சொல்லும்போது கண்கலங்க வைக்கிறார்.

கொடூரனாக காட்டப்படும் நடிகர் சரியான தேர்வு. கண்களிலேயே அவ்வளவு வன்மம் காட்டுகிறார். துணை கமிஷனராக நடித்திருக்கும் கிஷோர் வழக்கம்போல அசத்தல் உழைப்பை வழங்கியிருக்கிறார்.நீதிபதியாக வரும் ராமகிருஷ்ணா, வக்கீலாக நடித்திருக்கும் டைரக்டர் ஏ.வெங்கடேஷ், ஹம்ஸா, பழனி மற்றும்  ருத்து ஆகியோரும் தேவையான நடிப்பை திகட்டாமல் தந்திருக்கிறார்கள்.

எஸ்.ஜே ஸ்டார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எளிமையான சிறப்பு. ஷான் ஜெஷீல் அமைத்திருக்கும் பின்னணி இசை  கதைக்கு சிறப்பு சேர்க்கிறது.
நா.முத்துக்குமாரின் பாடல்களில் எளிமையும் வலிமையும் கை கோர்க்கின்றன. சிறுமிகளுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் வன்முறைகள், சமூகத்தைச் சீரழிக்கும் மதுக்கடைகள் ஆகியவற்றை சாட்டை எடுத்து விளாசி சமூக சேவை செய்திருக்கிறார் இயக்குநர் மைக்கேல் அருண்.