மாநகரம்



மலைக்கவைக்கும் மாநகரம்!

இயந்திர வாழ்க்கைக்கு தாலி கட்டிக் கொண்டவர்களான மாநகரவாசிகளின் விதிதான் கதை. டைட்டிலில் தொடங்கி எண்ட் கார்ட் வரை இருக்கையின் நுனிக்கு வந்துவிடக்கூடிய அளவுக்கு கூரான திரைக்கதையோடு களமிறங்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
சென்னைக்கு வேலை தேடி வருகிறார் ஸ்ரீ.

வாடகைக் கார் ஓட்டி பிழைப்பு நடத்துகிறார் சார்லி. கோபக்கார இளைஞரான சுந்தீப் கிஷன், ஐடி கேர்ள் ரெஜினாவை லவ்வுகிறார். இந்த நால்வருமே ஆளுக்கு ஒரு பிரச்னையை சந்திக்கிறார்கள். அந்த பிரச்னையில் இருந்து வெளியே வரும் அவர்களுக்கு மாநகரம் எப்படிப்பட்ட விதியை தீர்மானித்திருக்கிறது என்பதே கிளைமேக்ஸ்.

அப்பாவி கிராமத்து இளைஞன் வேடத்துக்கு அசலாக பொருந்துகிறார் . நகரவாசிகளின் மீது ஒரு கிராமத்தானுக்கு இருக்கும் நம்பிக்கையின்மையை அழகாக வெளிப்படுத்துகிறார். முரட்டு இளைஞனாக சுந்தீப் கிஷனுக்கு டெய்லர் மேட் ரோல். அம்மாவிடம் யதார்த்தம் பேசும்போதும் சரி, காதலியிடம் நியாயம் பேசும்போதும் சரி, நடிப்பில் வித்தியாசம் காட்டி ஜமாய்க்கிறார்.

அழகான ரெஜினாவுக்கு அதிக வாய்ப்பில்லை.
சிரிப்பு தாதாவாக வரும் ராம்தாஸ் விறுவிறுப்பான திரைக்கதையில் ஆங்காங்கே மொளகா வெடி வெடிக்கிறார். ‘அந்தமானுக்கு எந்த பஸ் போகும்?’ என்றெல்லாம் கேட்பது டூமச். அப்பாவி குடும்பத்தலைவராக சார்லியின் தவிப்பு நம்மை பதட்டப்பட வைக்கிறது. தாதாவாக வரும் மதுசூதனின் கண்களில் ரெளத்ரம் பறக்கிறது.

“சென்னை சிட்டிக்கு பொழப்பு தேடி வரவங்க இந்த ஊரை திட்டிக்கிட்டேதான் இருப்பாங்க. ஆனா ஒருத்தனும் இந்த ஊரை விட்டு போக மாட்டானுங்க’’ என்பது மாதிரி இயல்பான வசனங்கள் மாநகரவாசிகளின் மனதைத் தைப்பது நிச்சயம். இசையமைப்பாளர் ஜாவேத் ரியாஸ் கதைக்கு தேவையான விறுவிறுப்பை கொடுத்திருக்கிறார். அசத்தலான ஒளிப்பதிவு மூலம் இரவையும் பகலாகக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார்.

எந்த இடத்திலும் லாஜிக் இடிக்குதே என்று நினைக்க முடியாத அளவுக்கு மிக நேர்த்தி யாக கதை சொல்லியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். முதல் படமே அவருக்கு முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் அடுத்தகட்டம் ஆரோக்கியமானதாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் லோகேஷுக்கு Big salute!