சுசித்ரா கிளப்பிய சுனாமி!



ஹீரோயினிஸம்

வெள்ளிக் கொலுசு எழுப்பும் ‘ஜல் ஜல்’ என்கிற இனிமையான ஓசையை ஒப்பிடுமளவுக்கு வசீகரமான குரல் வளம். முற்றுப்புள்ளியே வைக்காமல் புள்ளி பிசகாமல் அருவியாய் அனாயாசமாய் கொட்டும் வார்த்தைகள். ஆங்கிலமும், தமிழுமாய் கொஞ்சி விளையாடும் தங்கிலீஷ் மொழிப்பிரவாகம். இதுதான் சுசித்ராவின் அடையாளம்.

அடிப்படையில் ரேடியோ ஜாக்கியாகத்தான் மக்களுக்கு அறிமுகமானார். அதன் பிறகு திரைப்படங்களில் பின்னணி பாடினார். ‘காக்க காக்க’ படத்தில் ‘உயிரின் உயிரே’, ‘ஜேஜே’ திரைப்படத்தில் ‘மே மாசம் 98ல் மேஜர் ஆனேனே’ பாடல்கள் மூலம் பிரபலமானார்.

‘மன்மதன்’ படத்தில் ‘என் ஆசை மைதிலியே’, ‘போக்கிரி’யில் ‘டோலு டோலுதான்’, ‘என் செல்லப்பேரு ஆப்பிள்’, ‘காளை’ படத்தில் ‘குட்டிப்பிசாசே’, ‘சிலம்பாட்டம்’ படத்தில் ‘வெச்சுக்கவா உன்னை மட்டும்’, ‘மங்காத்தா’வில் ‘வாடா பின்லேடா’ உள்ளிட்ட ஏராளமான சூப்பர்ஹிட் பாடல்களின் பெண்குரல் இவருடையதுதான். மாளவிகா, தமன்னா, நமீதா, ஸ்ரேயா, லட்சுமிராய் உள்ளிட்ட ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார். மணிரத்னம் இயக்கிய ‘ஆயுத எழுத்து’ மூலம் நடிகையாகவும் அறிமுகமானார்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக பாரதியார் பாடல்கள் அடங்கிய இசை ஆல்பம் ஒன்றினை வெளியிட்டார் சுசித்ரா. அதற்காக பிரஸ்மீட் நடந்தது. அதில் பத்திரிகையாளர் ஒருவர் முக்கியமான ஒரு கேள்வியை கேட்டார். “பாரதியார் பாடல்களைத்தானே ஆல்பமாக போட்டிருக்கிறீர்கள்! ஆல்பத்தின் முகப்பில் உங்கள் படம்தான் பெரியதாக இருக்கிறது.

பாரதியாரின் மீசையைக்கூட காணவில்லையே?”. இந்தக் கேள்வியைக் கேட்டதுமே சுசித்ராவின் கண்களில் கண்ணீர். “மன்னிச்சுடுங்கண்ணா. இந்தத் தப்பு எப்படி நடந்ததுன்னே தெரியலை. நான் உடனே சரி பண்ணிடறேன்” என்றார்.பின்னர் அந்தப் பத்திரிகையாளரிடம் தனிப்பட்ட முறையில் பேசினார். “அண்ணா, நல்லவேளையா நீங்க கவனிச்சு சொல்லிட்டீங்க. இல்லேன்னா ரொம்பப் பெரிய பாவத்துக்கு ஆளாயிட்டிருப்பேன். ஆல்பம் இன்னும் கடைக்கு போகலை. அதுக்குள்ளே வேற கவர் டிசைன் பண்ணிடறேன்” என்றுகூறி நன்றி தெரிவித்தார்.

சில நாட்களுக்குப் பின்பு அந்தப் பத்திரிகையாளரின் வீட்டுக்கு கூரியரில் அந்த ஆல்பம் வந்தது. முகப்புப் படத்தில் சுசித்ரா, தன் கைப்பட எழுதிய நன்றிக் கடிதம். ஆல்பத்தின் கவர் டிசைனில் கம்பீரமான பாரதியார்.சுசித்ராவின் நேர்மைக்கும், சுயமதிப்பீடு செய்துகொள்ளும் உயர்ந்த குணத்துக்கும் இந்த சம்பவம் ஓர் உதாரணம். துரதிருஷ்டவசமாக கடந்த சில நாட்களாக அவருடைய இமேஜ் தாறுமாறாக ஆகிவிட்டது. போதைக்கு அடிமையாகி விட்டார், ஆண் நண்பர்களோடு சுற்றித் திரிகிறார், கணவரை விவாகரத்து செய்கிறார், மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதைப்போல எத்தனை எத்தனையோ வதந்திகள்.

ஏதோ ஓர் இடத்தில், ஏதோ ஒரு வகையில், யாரோ ஒருவராலோ அல்லது பலராலோ அவர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது மட்டும் உண்மை. அது எந்தவிதமான பாதிப்பு என்பதைக் குறித்து இக்கட்டுரை எழுதப்படும் வரை அவர் மனம் திறந்து பேசவில்லை. ஆனால், பாதிக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. அவரை பாதிப்புக்கு உள்ளாக்கியவர்களை அவர் சக்திக்கு உட்பட்ட வகையில் வெளிப்படுத்த நினைத்திருக்கிறார். அதுதான் அவர் ட்விட்டரில் வெளியிட்ட படங்களுக்கு காரணமாக இருக்க முடியும் என்று சுசித்ராவுக்கு நெருக்கமான ஒரு பழைய நண்பர் சொல்கிறார்.

உண்மை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இந்த சம்பவம் காரணமாக நிதர்சனமான சில விஷயங்களை பட்டவர்த்தனமாகப் பேசியாக வேண்டிய தேவையிருக்கிறது.சுசித்ரா போன்ற ஹைப்ரொஃபைல் கொண்ட ஒருவருக்கே சினிமாத்துறை கொடுக்கக்கூடிய மரியாதையும், ஒழுக்க மதிப்பீடுகளும் இவைதான் என்றால் மற்றவர்களைப் பற்றி யோசிக்கவே தேவையில்லை. வாய்ப்புகள் கருதியோ, பயந்தோ பலரும் எதையும் வெளிப்படுத்துவதில்லை. விதியே என்று கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

அல்லது விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்கிறார்கள். சுசித்ரா இந்த மந்தையில் இருந்து விலகி, சினிமாவில் பெரிய இடங்களில் வீற்றிருப்பவர்களையே ‘உங்கள் யோக்கியதை தெரியாதா?’ என்று கேட்டு, அதற்குரிய ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறார் என்று இரண்டாம் மட்டத்தில் இருக்கும் நடிகை ஒருவர் பெருமையாக சொல்கிறார்.

ஆனால், சுசித்ராவோ, ட்விட்டரில் தன்னுடைய அக்கவுண்டை யாரோ ஹேக்கிங் செய்து இதுபோன்ற படங்களை வெளியிட்டிருப்பதாக மறுத்திருக்கிறார். தன் ட்விட்டர் அக்கவுண்டில் சொல்லப்பட்ட கருத்துகளும் தன்னுடையதல்ல என்கிறார்.

அந்தப் படங்களும் கருத்துகளும் வெளியிடப்பட என்ன காரணங்கள் இருந்ததோ, அதுபோல இப்போது மறுப்பதற்கும் ஏதேனும் மறைமுகமான காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை சுசித்ரா சொல்வதைப்போல அவரது ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக்கிங் செய்யப்பட்டிருக்கலாம்.
எனினும் சுசித்ராவை மையப்படுத்தி நடந்த இந்த நிகழ்வுகள் திரையுலகையே அசைத்துப் பார்த்திருக்கிறது என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.

இளமையின் துடிப்பிலும், புகழ்போதையிலும் தாறுமாறான நடத்தை கொண்டிருக்கும் பலருக்கும் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது. ‘சுசித்ரா செஞ்சதை மாதிரியே செய்வேன்’ என்று பாதிக்கப்பட்ட திரையுலகப் பெண்கள் நிமிர்ந்து எழவும் வகை செய்திருக்கிறது. அவ்வகையில் சுசித்ரா அறிந்தோ, அறியாமலோ ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

- மீரான்