உயிரைப் பணயம் வைத்து எடுக்கப்பட்ட உயிர்க்கொடி!



இப்போதெல்லாம் டைரக்டராக அறிமுகமாகும்போதே ஹீரோவாகவும் டூ இன் ஒன்னாக களமிறங்குகிறார்கள். ‘உயிர்க்கொடி’ மூலம் பி.ஆர்.ரவி ஹீரோ கம் டைரக்டராக அறிமுகமாகிறார். இவருக்கு படத்தில் ஜோடியாக நடிக்கும் அஞ்சனா நட்சத்திரா, ஏற்கனவே சில தெலுங்குப் படங்களில் நடித்திருக்கிறார். விக்னேஷ் பாஸ்கர் இசையமைக்கும் இப்படத்தில் தயாரிப்பாளர் ஜே.பி.அமல்ராஜும் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

ஹீரோவும் ஹீரோயினும் ஒருவருக்கு ஒருவர் முன்பின் அறிமுகமே இல்லாதவர்கள். இவர்கள் இருவரையும் மர்ம நபர் ஒருவர் கடத்தி ரகசிய இடம் ஒன்றில் சிறை வைக்கிறார். ஐந்து நாட்களுக்கும் இரவும் பகலும் சோறு தண்ணீர் இல்லாமல் தவிக்கும் இந்த இருவரின் உயிர்த்துடிப்புதான் படத்தின் கதையாம்.

எண்பதுகளின் பாடல்களை நினைவுபடுத்தும் வகையில் ‘பெங்களூரு கண்மணியே’, ‘கண்ணில் காவிரி ஏனோ’, ‘மங்களூரு மல்லிகையே மனசு மருகுதல் ஏனோ’ என்று மூன்று பாடல்களும் சூப்பர் மெலடியாக வந்திருக்கிறதாம்.பெங்களூர், ராமநாதபுரம், பொள்ளாச்சி, கோவா உள்பட ஏராளமான லொகேஷன்களில் ஐம்பத்தைந்து நாட்களில் இரண்டு கட்டமாக படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள்.

இருபது அடி ஆழத்தில் ஹீரோ, ஹீரோயின் தவிக்கும் க்ளைமாக்ஸ் காட்சி பரபரப்பாக பேசப்படும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளதாம்.  ஹீரோ, ஹீரோயின் இருவரும் மயக்க நிலையில் களைப்புடன் தோன்றும் காட்சிக்காக ஐந்து நாட்கள் திட உணவு சாப்பிடாமல் திரவ உணவுகளை மட்டும் எடுத்துகொண்டதால் நிஜமாகவே மயக்க நிலைக்கு போய்விட்டார்களாம். இருவருடைய நிலைமையும் சீரியஸானதால் ஆம்புலன்ஸை வரவழைத்து முதலுதவி கொடுத்தார்களாம்.

‘‘இதில் இப்போதுள்ள யதார்த்த வாழ்க்கையை பதிவு செய்துள்ளேன். துணிச்சலாக நிறைய விஷயங்களை சொல்லி யிருக்கிறேன். இந்தப் படத்தில் பிரபலமான நடிகர்களை நடிக்க வைக்க முயற்சி எடுத்தேன். வளர்ந்த நடிகர்களும் சரி, வளராத நடிகர்களும் சரி இந்தக் கதையில் நடிக்க தயக்கம் காண்பித்தார்கள். யாரும் முன் வராததால் நானே நடிக்க முடிவு செய்தேன்’’ என்கிறார் பி.ஆர்.ரவி.

- எஸ்