பாட்டு என்னை படைப்பாளியா மாத்திச்சி! ‘465’ டைரக்டர் பரவசம்



கோலிவுட்டில் டைட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. வரிவிலக்கு தொடர்புடையது என்பதால், இந்த விஷயத்தில் ரிஸ்க் எடுக்க தயாரிப்பாளர்கள் விரும்புவதில்லை. எண்களில் தலைப்பு வைத்துவிட்டால் சேஃப். ஸாய் ஸத்யம் இயக்கும் படத்துக்கு ‘465’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே டைரக்டோரியல் டச் கொடுத்து அசத்தியிருப்பவரிடம் குட்மார்னிங் சொல்லி பேச்சுக் கச்சேரியை ஆரம்பித்தோம்.

“உங்களை எங்கேயும் பார்த்த ஞாபகமே இல்லையே? பர்ஸ்ட் லுக் வேற அசத்தலா வந்திருக்கு. நீங்க யார் கிட்டே வேலை பார்த்தீங்க?”“நான் ஒரு இன்டிபெண்டண்ட் டைரக்டர் சார். சின்ன வயசுலே இருந்தே சினிமா போஸ்டர்களை வேடிக்கை பார்க்குறது ரொம்ப பிடிச்ச பொழுதுபோக்கு. வீட்டுலே இருந்தா சூரியன் எஃப்.எம்.மில் பாட்டு கேட்டுக்கிட்டே இருப்பேன்.

அதுவும் நைட்டுலே யாழ் சுதாகர் தொகுத்து வழங்கும் பாடல்கள்தான் எனக்கு எனர்ஜி பூஸ்ட். நாள் முழுக்க வேலை வேலைன்னு பிஸியா இருந்துட்டு அக்கடான்னு படுக்கையிலே சாயுறப்போ மனசு அப்படியே லேசாயிடும்.

நான் சினிமாவை இப்படி யதார்த்தமாதான் கத்துக்கிட்டேன். தயாரிப்பாளரிடம் நாப்பதே நாளில் படத்தை முடிச்சிக் கொடுத்துடுவேன்னு சொன்னேன். அதே மாதிரியே செஞ்சிக் கொடுத்திருக்கேன். பாஸ்ட்டா எடுத்திருந்தாலும் பெஸ்ட்டா எடுத்திருக்கேன்னு பார்த்தவங்க சொல்லுறாங்க.”

“டைட்டில் வித்தியாசமா ‘465’ன்னு வெச்சிருக்கீங்க. என்ன மாதிரியான படம் இது?”

“கோடம்பாக்கமே அடுத்தடுத்து த்ரில்லர்னு வரிசை கட்டிக்கிட்டு நிக்குறப்போ நான் மட்டும் வேற டிராக்கில் டிராவல் பண்ணா நல்லா இருக்காது. ‘465’ம் த்ரில்லர்தான். இப்படியொரு படம் தமிழுக்கு புதுசு, தெலுங்குக்கு இளசு, உலக சினிமாவிலேயே ரவுசுன்னுலாம் உங்க காதுலே பூ சுத்த மாட்டேன்.

ஃப்ராங்கா சொல்லுறேன். கொரியன் டிவிடி வெச்சிக்கிட்டு சீன் எழுதாமே, நானே சிந்திச்சி எழுதின கதை. நம்ம எல்லோருடைய வாழ்க்கையிலும் கடந்துபோன சில அத்தியாயங்களைத்தான் கதைக்களனா வெச்சிருக்கேன். ஓவர் பில்டப் சுத்தமா இருக்காது. லாஜிக் மீறலும் இல்லாத மாதிரி பார்த்துக்கிட்டிருக்கோம். அதே சமயம் ‘அடுத்து என்ன.. என்ன?’ங்கிற ‘லப் டப்’ படம் பார்க்குற ஒவ்வொருத்தருக்கும் இருக்கும். சமீபத்தில் வெளிவந்த த்ரில்லரான ‘துருவங்கள் பதினாறு’க்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருப்பது எங்களுக்கு உற்சாகத்தை கொ
டுக்குது. நிச்சயம் ஜெயிப்போம்.”

“சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வர்றவங்க பொதுவா ஓவரா சீன் போடுவாங்க...”
“சுத்தி வளைச்சி எங்க ஹீரோவைப் பத்தி கேட்குறீங்கன்னு நெனைக்கிறேன். ‘465’ ஹீரோ கார்த்திக்ராஜ், சின்னத்திரை ஆக்டர்தான். ஆனாலும், பெரிய திரைக்கு பக்காவா செட் ஆகியிருக்கிறார்.

இவரை புக் பண்ணப்போ, என்னோட ப்ரெண்ட்ஸ் சிலர் கூட, ‘மச்சி... டிவி ஆர்ட்டிஸ்ட்டுன்னா மீட்டருக்கு மேலே பெர்ஃபார்ம் பண்ணுவாங்களேடா’ன்னு பயமுறுத்தினாங்க. ஆனா, படப்பிடிப்போட முதல்நாளே கார்த்திக் 4ஜி ஸ்பீடில் பிரிச்சி மேஞ்சிட்டார். குறிப்பா கிளைமேக்ஸில் உடலை வருத்தி, நான் என்னவெல்லாம் கேட்டேனோ அதையெல்லாம் திருப்தியா பண்ணிக் கொடுத்தாரு. க்ளைமேக்ஸை மட்டுமே மூணு நாள் நான்ஸ்டாப்பா ஷூட் பண்ணினேன். மனுஷன் கொஞ்சம் கூட டயர்ட்னஸ் காமிக்காம அசரடிச்சிட்டாரு. அவருக்கு பிரகாசமான எதிர்காலம் அமையும்னு நம்பறேன், நண்பனா வாழ்த்துறேன்.”

“ஹீரோயின் நிரஞ்சனா?”

“ஏற்கனவே ‘யாசகன்’, ‘சோன்பப்டி’ன்னு ரெண்டு படம் பண்ணிட்டாங்க. இந்தப் படத்துக்கு அப்புறம் ஒரு ரவுண்டு வருவாங்கன்னு சொல்லுறது க்ளிஷேவா இருந்தாலும், அதுதான் உண்மை. ஹீரோவுக்கு என்ன இம்பார்ட்டன்ஸோ, அதுவே ஹீரோயினுக்கும் இருக்கும். மனோபாலா உட்பட ஏராளமான நட்சத்திரப் பட்டாளத்தை நிறைச்சியிருக்கோம். இருந்தாலும் ஹீரோவையும், ஹீரோயினையும் சுத்திதான் கதை நகரும்.”
“மியூசிக்?”

“ஏ.ஆர்.ரஹ்மானோட இசைக்கல்லூரியில் பயின்ற சஷாங்க் ரவிச்சந்திரன், ஜெஸ் பேட்டர்சன் ரெண்டு பேரும் இணைஞ்சி மியூசிக் போட்டிருக்காங்க. இசைப்புயலோட மாணவர்கள் என்கிற அடையாளத்தை அழுத்தமா பதிச்சிருக்காங்க. ஃப்ரெஷ்ஷான டியூன் போட்டு துடிப்பான இசையை கொடுத்திருக்காங்க. ‘ராட்டினம்’, ‘கோ-2’ படங்களுக்கு கேமிரா ஒர்க் பண்ணிய பிலிப் ஆர்.சுந்தர்தான் எங்களுக்கும் வேலை பார்த்துக் கொடுத்திருக்காரு. ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’னு விஜய் ஆண்டனி படங்களுக்கு நறுக்குன்னு எடிட் பண்ணின ஜி.ராஜராஜன்தான் எங்களோட எடிட்டர்.

இப்படி சவுண்டான டெக்னிக்கல் பேக்கிரவுண்டு இருக்கிறதாலே படம் டெக்னிக்கலாவும் மிரட்டும். தயாரிப்பாளர் எஸ்.எல்.பிரபுதான் இந்தப் படத்துக்கு கதை எழுதியிருக்காரு. அவரும் ஒரு கிரியேட்டர்தான் என்பதால், என்னோட உணர்வுகளை புரிஞ்சுக்கிட்டு என்னை முழு சுதந்திரமா வேலை பார்க்க வெச்சாரு.”

 - சுரேஷ் ராஜா