நயன்தாராவுடன் போட்டி போட நிக்கி கல்ராணி தயக்கம்!
நிக்கி கல்ராணியின் சொந்த ஊரு பெங்களூரு. முதலில் கன்னடப் படங்களில்தான் கணக்கைத் தொடங்கினார். அப்புறம் மலையாளக் கரையோரம் ஒதுங்கி, அங்கிருந்து தமிழுக்கு வந்தார். இப்போது அவரது கவனம் முழுக்கவே கோலிவுட்டில்தான். எனவேதான் எழும்பூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாட்டை வாங்கி குடியேறி இருக்கிறார். இவரோடு இவரது அக்காவும், கன்னட நடிகையுமான சஞ்சனா கல்ராணி மற்றும் பெற்றோர் குடியிருக்கிறார்கள்.
கொக்கி போட்டு எந்தக் கேள்வி கேட்டாலும், எதிலும் மாட்டிக் கொள்ளாமல் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக பதிலளிக்கிறார் நிக்கி. அவருடனான கலகலப்பான கலந்துரையாடலின் சில பகுதிகள் :“திடீர்னு நிறைய படங்களில் நடிக்கிறீங்க போலிருக்கே? பின்னணியில் பலத்த சிபாரிசு இருக்குமே?”
“ரசிகர்கள்தான் என்னை இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சிபாரிசு செய்யுறாங்க. மலையாளத்தில் கிரிக்கெட் வீரர் சாந்துக்கு ஜோடியா ‘டீம் 5’ படத்தில் நடிக்கிறேன். பைக் ரேஸ் பத்தின படம். தமிழில் ஆதிக்கு ஜோடியா ‘மரகத நாணயம்’, விக்ரம் பிரபுவோட ‘நெருப்புடா’, லாரன்ஸ் மாஸ்டரோட ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ஜீவாவுக்கு ஜோடியா ‘கீ’, கவுதம் கார்த்திக்கோட ‘ஹர ஹர மகாதேவகி’ன்னு ரொம்ப பிஸியா நடிச்சிக்கிட்டிருக்கேன்.”
“கிளாமருன்னா நிக்கின்னு ஆயிடிச்சி...”
“அப்படியெல்லாம் இல்லை. சினிமாவுக்கு வந்திருக்கிற இந்த குறுகிய காலத்துலேயே எந்த நடிகையும் ஏத்துக்க பயப்படுற ஒரு கேரக்டர்லே ‘மரகத நாணயம்’ பண்ணுறேன். என்ன கேரக்டருன்னு இப்போ சொல்ல மாட்டேன். படம் வந்தப்புறம் பார்த்து தெரிஞ்சுக்கங்க. ‘மொட்ட சிவா கெட்ட சிவா’வில் துறுதுறு ரிப்போர்ட்டர் கேரக்டர். என்னோட பேவரைட்டான ஏரியாவான ரொமாண்டிக் காமெடியில் ‘ஹர ஹர மகாதேவகி’ன்னு செலக்ட் பண்ணித்தான் நடிக்கிறேன்.”
“பாலிவுட்டில் உங்களை கூப்பிடலை போலிருக்கே?” “நான் போக ஆசைப்படலை. முதல்லே கூரை ஏறுவோம். அப்புறம் கோழி பிடிப்போம். என்னோட முழு கவனமும் இப்போ தென்னிந்திய சினிமாவில்தான் இருக்கு.”
“உங்க அக்கா சஞ்சனாவோட சேர்ந்து நடிப்பீங்களா?”
“தெலுங்குலேயும், கன்னடத்துலேயும் அக்கா ரொம்ப பிஸி. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும்னுதான் ஆசை. வாய்ப்பு வரணுமே. ரெண்டு பேருக்குமே ஈக்குவலான ஸ்கோப் இருக்குற கேரக்டரும், கதையும் அமைஞ்சதுன்னா நடிப்போம். வீ ஆர் வெயிட்டிங்.” “முளைச்சு மூணு இலை விடலை. அதுக்குள்ளே சொந்தப்படம் தயாரிக்கப் போறீங்களாமே?”
“ஆசைப்பட்டா தப்பா? அது என்னோட எதிர்கால திட்டம். இப்போதைக்கு நடிப்புதான்.” “வில்லியா நடிக்க மறுத்துட்டீங்களா?”“இப்போ நடிக்கிற ஒவ்வொரு படத்திலுமே வித்தியாசமான கேரக்டர்தான். இடையிலே வில்லியா நடிக்க கேட்டாங்க. ஆட்சேபணை எதுவுமில்லைன்னாலும், அதிலே நடிச்சேன்னா மத்தப் படங்களோட கேரக்டர் பாதிக்கப்படும். ஆடியன்ஸ் விரும்பி ரசிக்கிற ஹீரோயினாதான் இப்போதைக்கு நடிப்பேன்.”
“கிளாமரில் நயன்தாராவுக்கு போட்டியா களமிறங்குவீங்களா?” “பிகினி டிரெஸ் போட்டது அவரோட விருப்பம். அது பற்றி நான் கமெண்ட் பண்ண மாட்டேன். ஆனா, அவரளவுக்கு என்னாலே பண்ண முடியாது. இப்போ மட்டுமில்லே. எப்பவுமே ஓவர் கிளாமர் செய்ய மாட்டேன். பேமிலி ஆடியன்ஸ் அத்தனை பேரும் என்னை ரசிக்கிற மாதிரி ஹோம்லியா செய்யதான் ஆசை.”
“உங்களுக்கு யார் இன்ஸ்பிரேஷன்?” “வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உழைச்சு முன்னேறுகிற ஒவ்வொருத் தரும் எனக்கு இன்ஸ்பிரேஷன்தான். ஆனா, நடிப்பு விஷயத்துலே நான் யாரையும் பின்பற்ற விரும்பலை. தனித்துவமா இருந்தாதான் சினிமாவுலே ஜெயிக்க முடியும்.” “எப்போ கல்யாணம்?
எனி லவ் அஃபயர்?” “என்னடா இது.. ‘வண்ணத்திரை’ இன்னும் இந்தக் கேள்வியை கேட்கலை யேன்னு நெனைச்சேன். சினிமா நடிகைன்னா இந்தக் கேள்வியை கேட்டுத்தான் ஆகணுமா? வேற கேரியரில் இருக்கிற எந்தப் பெண்ணிடமாவது இப்படி கேட்பீங்களா? காதல், கல்யாணத்தை பத்தி இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை.”
-தேவராஜ்
|