புரட்சி செய்!



சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்! மாணவன் 24

“நாட்டுலே எதுவுமே சரியில்லைங்க” என்று புலம்பக் கூடியவர்கள்தான் தொண்ணூறு சதவிகித சாமானியர்கள்.“சரிங்க. இதையெல்லாம் சரி பண்ணுறதுக்கு என்னதான் தீர்வு?” என்று கேட்டீர்களேயானால், “லஞ்சம் வாங்குறவனை தூக்குலே போடணும், பொண்ணுங்களை கிண்டல் பண்ணுற பொறுக்கிப் பசங்களை கல்லால் அடிச்சிக் கொல்லணும்” என்பது மாதிரியான எளிமையான தீர்வுகளைச் சொல்லுவார்கள்.

கல் எடுத்துக் கொடுத்து ‘வாங்க அடிக்கலாம்’ என்று கூப்பிட்டால், ‘அவசரமா வேலை இருக்கு’ என்று இடத்தை உடனே காலி செய்துவிடுவார்கள்.இவர்களை திருப்திப்படுத்ததான் புரட்சிகரமான கதையம்சம் கொண்ட படங்கள் வருகின்றன.

லஞ்சம் வாங்குகிறவர்களுக்கு கருட புராணத்தின்படி தண்டனை, சட்டத்தை கொண்டு மக்களை ஏமாற்றுபவர்களை அதே சட்டத்துக்கு விளையாட்டு காட்டி ஆப்பு அடிப்பது போன்ற கதைகள் படங்களாக வரும்போது தம்மால் நேரடியாக செய்ய முடியாத காரியங்களை திரையிலாவது நாயகன் செய்கிறானே என்று இவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

திரைப்படங்களுக்கு கதை எழுத விரும்புகிறவர்கள் முதலில் இதுபோன்ற மக்களையும், அவர்களது எண்ண ஓட்டத்தையும்தான் ஸ்டடி செய்ய வேண்டும்.மற்ற கதைகளை எழுதும்போது கதையின் மையம், அதற்கு ஒரு நாயகன், அவனுக்கு ஒரு பிரச்னை என்று  கதையை பின்ன வேண்டும்.

புரட்சிகரக் கதைகளை படமாக்க விரும்புபவர்கள் முதலில் ஒரு பிரச்னையை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த பிரச்னைக்கு காரணமான வில்லனை பிடித்துவிட்டால் போதும். அவனை எதிர்க்கப் போகும் ஹீரோ போலீஸா அல்லது சாதாரண பிக்பாக்கெட் திருடனா, இல்லையென்றால் ‘அந்நியன்’ படத்தில் வருவதைப் போன்ற அம்பியா என்பதைஅடுத்து முடிவெடுத்துக் கொள்ளலாம்.

பொதுவாக அரசாங்கம் சரியில்லை, அரசியல்வாதிகள் மோசம் என்பதைபோல ஆளும் வர்க்கத்துக்கு எதிராக இந்தக் கதைகளை புனைவதே பாதுகாப்பான அம்சம். ஏனெனில் மக்களைப் பொறுத்தவரை பொற்கால ஆட்சி நடந்தாலும்கூட திருப்தியாக உணரமாட்டார்கள். அவர்களுக்கு இருக்கும் சிறுசிறு குறைகளைக் கூட பூதாகரமாக நினைப்பார்கள். அவர்களுடைய ஈகோவை திருப்திப்படுத்த வேண்டுமானால், எல்லா சக்திகளும் நிறைந்த நாயகன் அரசு என்கிற மாபெரும் இயந்திரத்தை எதிர்த்து வென்றால்தான் வேலைக்கு ஆகும்.

மாறாக ஓர் ஊரின் பண்ணையாரையோ, ஒரு கம்பெனி முதலாளியையோ எதிர்த்தால், ஹீரோவுடைய கெத்து அந்தளவுக்கு பிக்கப் ஆகாது.தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவது பிரச்னைக்கு உரியதாக இருக்கிறது.

ஜல்லிக்கட்டை முடக்க ஒரு சர்வதேச சதி, இதற்கு நம் உள்ளூர் அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் துணை போகிறார்கள். மாடு பிடிக்கும் மன்னாரு என்கிற ஹீரோ, ஐ.நா. சபை லெவலுக்கு போய் வெல்லுகிறான் என்று கதை எழுதிப் பாருங்களேன். இப்போதிருக்கும் சென்டிமென்டான சூழலுக்கு பிச்சிக்கொண்டு போகும்.

ஆனால்-இதுபோன்று சமூகப் பிரச்னைகளை படமாக்குவதில் ஒரு பெரிய பிரச்னை இருக்கிறது. உங்கள் படம் வெளிவரும்போது இந்தப் பிரச்னை ஒன்றுமேயில்லை (அதைவிட பெரிய பிரச்சினை வந்துவிட்டது) என்று ஆகிவிட்டால், படு ஊத்தலாக ஆகிவிடவும் வாய்ப்பிருக்கிறது.

எனினும்-ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை நாயகன் புரட்சி செய்யும் கதைகள் பெரும்பாலும் வெற்றியையே எட்டியிருக்கின்றன என்பதால், நீங்கள் தைரியமாக புரட்சி செய்யலாம்.

(தொடரும்)