புதிய தொடர் வெயில் வசந்த பாலன்
டைட்டில்ஸ் டாக்
‘வண்ணத்திரை’ தொடர்கள் வாசகர்களிடம் மட்டுமின்றி, சினிமாத்துறையினரிடமும் எப்போதும் பெரிய வரவேற்பைப் பெறுவது வழக்கம். ‘டைட்டில்ஸ் டாக்’ என்கிற இந்த புதுமையான தொடருக்கும் அதே வரவேற்பு இருக்கும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமுமில்லை.
தாங்கள் இடம்பெற்ற படத்தின் ‘டைட்டில்’ ஒன்றையே தலைப்பாக எடுத்துக்கொண்டு, வாராவாரம் சினிமா பிரபலங்கள் கட்டுரை எழுதப் போகிறார்கள். வழக்கமாக சினிமாவை பற்றி பேசும் விஐபிகள், தங்கள் வாழ்வின் சில பகுதிகளை தொடர்புடைய டைட்டிலில் பேசப்போகிறார்கள் என்பதுதான் ‘டைட்டில்ஸ் டாக்’ தொடரின் விசேஷமே!
நான் பிறந்த ஊரான விருதுநகரை வெயில் நகர்னே சொல்லலாம். அந்தளவுக்கு வெயில் பின்னியெடுக்கும். வெளியே வந்தோம்னா, எப்பவும் உடம்புலே வெயில் பட்டுக்கிட்டே இருக்கும்.
இந்த சூடுக்கு பழகிப் போனதாலேயோ என்னவோ எங்க ஊர்க்காரங்களுக்கு குளிரும், மழையும் ஒத்துவரமாயே போயிடிச்சி. எங்கள் விளையாட்டெல்லாம் வெயில்லேதான். மெட்ராசு வந்து பார்க்குறப்போ எல்லாரும் தரை சுடும்னு செருப்பு போட்டிருக்கிறதைப் பார்க்குறேன். நாங்கள்லாம் சின்ன வயசுலே செருப்பே போட்டது இல்லே. தரை சுடுறதெல்லாம் எங்களுக்கு மேட்டரே இல்லே. ஸ்கூல் போறப்போ கூட வெறுங்காலில் நடைராஜா சர்வீஸ்தான்.
விருதுநகருக்கு வெயில் உகந்த பட்டிணம்னு இன்னொரு பேரு இருக்கு. ரொம்ப பேருக்கு தெரியாது. இதுக்கு என்ன காரணம்னா எங்களோட அம்மன். அந்த அம்மனோட பேரு வெயில் உகந்த அம்மன்.நான் சின்னப் பயலா இருந்தப்போ கூம்பு வடிவ ஸ்பீக்கர்தான் பேமஸ். இதை கட்டி திருவிழாக்களில் ‘சரஸ்வதி சபதம்’, ‘திருவிளையாடல்’ மாதிரி வசனத்துக்கு பிரபலமான படங்களோட ஒலிச்சித்திரத்தை ஒலிக்கச் செஞ்சி அதிர வைப்பாங்க.
ஒலிச்சித்திரம் போட்டாலே குஷி. உச்சி வெயிலிலே இந்த ஸ்பீக்கர் கட்டின கம்பத்துலே சாஞ்சிக்கிட்டு நானும், தம்பியும் கதை கேட்டுக்கிட்டு இருப்போம். இப்பவும் யாருக்காவது கதை சொல்லுறப்பவோ, கேட்குறப்பவோ மானசீகமா விருதுநகர் வெயில் என் மேலே அடிச்சிக்கிட்டே இருக்கு. அந்த வெயிலோட சூட்டை எந்த குளிரிலும் என்னாலே உணரமுடியுது.
எங்க ஊர்லேதான் மாட்டுக்கு லாடம் கட்டுற ஸ்பெஷலிஸ்ட் இருப்பாரு. சுத்து வட்டார கிராமங்களில் இருந்து லாடம் கட்ட படையெடுத்துக்கிட்டு வருவாங்க. மாட்டை படுக்கவெச்சி நம்ம ஸ்பெஷலிஸ்ட் லாடம் கட்டுறதை சின்னப் பசங்க சுத்தி நின்னு வெயில்லேதான் பார்ப்போம். இப்படியாக என் பால்யத்தை திரும்பிப் பார்த்தேன்னா, நான் நிழலில் இருந்த நேரத்தைவிட வெயிலில் காய்ஞ்ச காலம்தான் அதிகம்.
இதனாலேதான் என்னை வெயில் இப்பவும் சுடுறதில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் ‘இன்னிக்கு என்னா வெயில்’னு யாராவது சலிச்சிக்கிறப்போ எனக்கு காமெடியாதான் தெரியும். ‘இதெல்லாம் ஒரு வெயில்லா? எங்க விருதுநகருக்கு வாங்க’ன்னு கூப்பிடுவேன். எப்பவும் நான் வெயிலைப் பத்தி பெருமையா பேசுறது, சென்னையில் இருக்குறவங்களுக்கு ஆச்சரியத்தைதான் கொடுக்குது.
எப்பவும் கசகசன்னு இருக்குறதாலேயோ என்னவோ எங்களுக்கெல்லாம் சின்ன வயசுலே உள்ளாடைன்னாலே என்னன்னு தெரியாது. இப்போ நகரத்துலே கைக்குழந்தைகளுக்கு கூட பேம்பர்ஸ் பயன்படுத்துறாங்க. நாங்கள்லாம் ஒன்பதாவது, பத்தாவது படிக்கிறப்போதான் முதல் தடவையா உள்ளாடையே பயன்படுத்த ஆரம்பிச்சோம். இதை சொன்னா, என்னோட அசிஸ்டெண்ட்ஸ் எல்லாம் சிரிப்பாங்க.
வெயிலுக்கு பயந்து தொப்பி அணியறது, குடை பிடிக்கிறது மாதிரி பழக்கம் எனக்கு கிடையவே கிடையாது. என்னோட மண்டையை சூரியன் சுடணும், அப்போதான் எனக்கு சுறுசுறுப்பு எகிறும். வெயிலுக்கு பயந்து நிழலுக்கு ஓடின வரலாறு நமக்கு கிடையவே கிடையாது.
என்னோட படத்துக்கு ‘வாழிய நதி’ன்னுதான் டைட்டில் வெச்சிருந்தேன். அந்தப் படத்தோட தயாரிப்பாளரான ஷங்கர் சார், ‘இது சிறுகதை டைட்டில் மாதிரி இருக்கு. நல்லா ரீச் ஆகுற ஒரு டைட்டில் யோசி’ன்னு சொன்னாரு. அப்போ ‘வெயிலோடு விளையாடி’ பாட்டை ரெக்கார்ட் பண்ணியிருந்தோம். அதனாலே ‘வெயிலோடு விளையாடுவோம்’னு ஒரு டைட்டிலை பரிசீலனை பண்ணினோம். கடைசியில் ஷார்ட் அண்ட் ஹாட்டா ‘வெயில்’னு முடிவெடுத்தோம். டைட்டில் ஷங்கர் சாருக்கு ரொம்பப் பிடிச்சது.
ஆனா, ‘டைட்டிலுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்?’னு கேட்டாரு. ‘படத்துலே வெயில் ஒரு கேரக்டரா டிராவல் பண்ணுது சார்’னு அவருக்கு ஜஸ்டிஃபிகேஷன் கொடுத்தேன். படம் எடுக்குறப்போ முக்கியமான காட்சிகள் எல்லாமே செமத்தியான வெயிலில் நடக்குற மாதிரி அமைச்சோம். ‘அரவான்’ கூட பெரும்பாலான காட்சிகள் மொட்டைப்பாறை உச்சிவெயிலில்தான் படம் பிடிச்சோம்.
அதிகபட்சமா நான் வெயிலில் வேலை பார்த்தது ‘காதலன்’ படத்துக்குதான். கோதாவரி ஆத்தங்கரையோரம் ‘எர்ராணி குர்ரதாணி கோபாலா’ பாட்டோட சூட்டிங். அப்போ சூரியன் தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் ஆத்தங்கரையோர மணல் மீது காமிச்சாரு. டான்சர்ஸ் எல்லாம் தவியா தவிக்க ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாம் செருப்பு காலோடுதான் டான்ஸ் பண்ணாங்க. வெயில் வெறியனான நானோ அதை என்ஜாய் பண்ணி வேலை செஞ்சேன்.
அசிஸ்டெண்டா இருந்த காலத்துலே சைக்கிள்தான் நம்ம வாகனம். சென்னை முழுக்க வெயிலில் வேர்க்க விறுவிறுக்க சைக்கிள் மிதிச்சிருக்கேன். ‘இந்தியன்’ முடிஞ்சப்போ ஷங்கர் சார் டூவீலர் வாங்கிக் கொடுத்தாரு. ‘வெயில்’ பண்ணினதுக்கு அப்புறம் அவரேதான் காரும் வாங்கிக் கொடுத்தாரு. காரில் போனாலும் வெயில் என் மேலே படணும்னு கண்ணாடியை இறக்கியே வெச்சிருக்கேன்.
1992லே சினிமாவுக்கு வந்தேன். இன்னைக்கு என்னை நாலு பேருக்கு தெரியுதுன்னா அதுக்கு காரணம் ஷங்கர் சாரும், ‘வெயில்’ படமும்தான். வெயிலை நான் நேசிக்கிறதுலே ஆச்சரியம் என்ன இருக்கு?பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எங்க ஊருக்காரர்தான். எங்க ஊரு வெயிலை அனுபவிச்ச அவரு ‘வெயிலை கொண்டு வாருங்கள்’னு சிறுகதையே எழுதியிருக்காரு.
அவரோட எல்லாப் படைப்புகளிலும் வெயில் ஒரு கேரக்டரா இடம்பிடித்து இருப்பதை பார்க்கலாம். ‘நெடுங்குருதி’ன்னு ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அதிலும் வெயில் பட்டையைக் கிளப்பும். வெயில், எங்களோட கலாச்சார அடையாளத்துலே ஒண்ணு. அதை எதுக்காகவும் விட்டுக் கொடுக்கவே மாட்டோம். வெயிலால் எனக்கு அசவுகரியம்னு சொன்னா ஒண்ணே ஒண்ணுதான். சின்ன வயசுலே அடிக்கடி நீர்க்கடுப்பு ஏற்படும். சிறுநீர் கழிக்கிறப்போ எரியும்.
எழுத்தாக்கம் : சுரேஷ்ராஜா
|