தமிழ் சினிமாவின் முதல் ஹீரோயின்!



ஹீரோயினிஸம்

தமிழ் சினிமாவின் முதல் ஹீரோயின் யார் என்று கேட்டால், சினிமாவின் வரலாறு அறிந்தவர்கள் அத்தனை பேருமே டி.பி.ராஜலட்சுமி என்று சுலபமாக சொல்லி விடுவார்கள். சினிமாவில் மட்டுமல்ல. நிஜவாழ்விலும் ஹீரோயினாக வாழ்ந்தவர் ராஜலட்சுமி.

இசைக்கு பேர்போன திருவையாறுதான் ராஜலட்சுமியின் சொந்த ஊர். அந்தக் கால மரபுப்படி அவருக்கு எட்டு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. வரதட்சணை பிரச்னை காரணமாக ஒன்பதாவது வயதிலேயே கணவரை விட்டு பிரிந்து பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த வயதிலேயே மகளுக்கு இப்படி ஆகிவிட்டதே என்கிற ஆற்றாமையாலேயே அவரது அப்பா காலமாகிவிட்டார்.

வீட்டில் கவலைமேகம் சூழ்ந்து சோகமழை பொழிந்து கொண்டிருந்த நிலையில் ஒரு நாள் அதிகாலை, ராஜலட்சுமியின் அம்மாவின் காதை கான இசை மழை நிறைத்தது. யார் பாடுகிறார்கள் என்று வீட்டுக்கு வெளியே திண்ணைக்கு வந்து பார்த்தார். அங்கே சப்பணமிட்டு ராஜலட்சுமி கம்பீரமாக பாடிக் கொண்டிருந்தார். தன் மகளுக்கு இப்படியொரு இசைத்திறமை இருப்பது அதுவரை அவருக்கே தெரியாது.

இவ்வளவு திறமை வாய்ந்த பெண்ணை வீட்டின் இருள் அறையில் அடைக்கக்கூடாது என்று முடிவெடுத்தார். அப்போது திருவையாறுக்கு வந்திருந்த சாம்பண்ணா நாடகக் குழுவில் இவரை ஒரு பாடகியாக பணிக்கு சேர்த்துவிட்டார். அம்மா - மகள் இருவருக்கும் சாப்பாடு, துணிமணி, தங்க இடம் என்று ஒப்பந்தத்தோடுதான் அங்கே சேர்ந்தார்கள்.

ஆரம்பத்தில் பாட்டு மட்டும் பாடிக்கொண்டிருந்தார். அப்போது நாடகத்தில் ஆண்கள் மட்டுமே நடிப்பார்கள். பெண் வேடங்களிலும் ஆண்களே மேக்கப் போட்டு நடிப்பது வழக்கம். நான் நடிக்கிறேன் என்று துணிச்சலாக ராஜலட்சுமி நடிக்க முன்வந்தார். அக்காலத்தில் இது பரபரப்பாக பேசப்பட்டது. தமிழின் முதல் படமான ‘காளிதாஸ்’ எடுக்கும்போது, பாடக்கூடிய நடிகைகளே இல்லை என்கிற நிலை இருந்தது.

பின்னணிப் பாடல் பதிவு செய்யக்கூடிய வசதி இல்லாத அந்தக் காலத்தில் படத்தில் நடிப்பவரே ‘லைவ்’வாக பாடவும் செய்ய வேண்டும். ராஜலட்சுமி பற்றி கேள்விப்பட்டு அவரை நடிக்க அழைத்தார்கள். இதன் மூலமாக தமிழ் சினிமாவின் முதல் பெண் நட்சத்திரமாக அவர் உருவெடுத்தார்.

அடுத்தடுத்து ‘வள்ளி திருமணம்’, ‘திரெளபதி’, ‘வஸ்திரா பரிணய்’, ‘குலசேகரா’ என்று ராஜலட்சுமி நடிப்பில் பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றன. வெறும் நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாமல் ‘மிஸ் கமலா’ என்கிற படத்தை இயக்கி, தயாரித்தார். இதன் மூலமாக தமிழின் முதல் பெண் இயக்குநர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, பாடலாசிரியர், பாடகி என்று அத்தனை ‘முதல்’ பட்டங்களையும் அள்ளினார். பின்னாளில் இவர் தியேட்டர் கூட கட்டினார்.

புராணப் படங்களிலும், நாடகங்களிலும் நடித்துவந்த டி.பி.ராஜலட்சுமி முதன்முதலாக இயக்க முடிவெடுத்த திரைப்படமான ‘மிஸ் கமலா’, ஒரு சமூகப்படம் என்பது ஆச்சரியம். ஒரு விதவையின் மறுமணம் பற்றி பேசிய புரட்சிப்படம். ராஜலட்சுமியின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்தவர்களுக்கு அவர் இந்தக் கதைக்கருவை எடுத்துக் கொண்டது ஏனென்று புரிந்தது. சினிமாவோடு தன்னை குறுக்கிக் கொள்ளாமல் இலக்கிய உலகத்திலும் தடம் பதித்தார். நிறைய நாவல்களும் எழுதினார்.

- மீரான்