பழிக்குப் பழி!



சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்! மாணவன் 20

‘Thirty six dramatic situations’ வகையில் மூன்றாவதாக நாம் காணப் போவது ‘பழிக்குப் பழி’ ரக கதைகள்.உண்மையில் உதாரணம் சொல்லாமலேயே வாசகர்களுக்கு இந்த சூழல் புரிந்திருக்கும். மனிதன், கதைகளை புனையத் தொடங்கிய காலத்திலிருந்தே பழிதீர்க்கும் கதைகள் தொடங்கிவிட்டன.

தமிழில் வலுவாக ஆக்‌ஷன் சினிமாக்கள் எடுக்கப்படத் தொடங்கிய எழுபதுகளிலும், எண்பதுகளிலும் பல கதையாசிரியர்களுக்கு கைகொடுத்தது இவ்வகை கதைகளே.ஜெய்சங்கரை பரபரப்பான வெள்ளிக்கிழமை ஹீரோ ஆக்கியதும், ரஜினிகாந்தை, கமல்ஹாசனை, விஜயகாந்தை, சத்யராஜை என்று நம் காலத்தின் ஆக்‌ஷன் ஹீரோக்களை திரைத்துறையில் வளர வைத்ததும் இவ்வகை கதைகளே.

ரஜினி முதன்முதலாக ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தோடு களமிறங்கிய ‘பைரவி’யே பழிக்குப் பழி கதைதான்.ரஜினி தன்னுடைய தங்கை கீதாவை சிறுவயதிலியே பிரிந்து விடுகிறார். தன் முதலாளி காந்துக்கு விசுவாசமான அடிமையாக வளர்கிறார். பெண் பித்தரான காந்தோ கண்ணில் படும் பெண்களின் கற்பையெல்லாம் சூறையாடுகிறார்.

அதுபோல ஒருமுறை கீதா, அவருடைய காமப்பசிக்கு பலியாகிறார். தன்னுடைய தங்கைதான் கீதா என்பதை அறியாமலேயே இதற்கு ரஜினி துணை போகிறார். உண்மை அறிந்தபிறகு கீதாவை மணமுடிக்கும்படி ஸ்ரீகாந்தை வேண்டுகிறார்.

ஸ்ரீகாந்தோ தட்டிக் கழிப்பதோடு மட்டுமின்றி ரஜினி மீதே கற்பழிப்பு புகாரைச் சொல்லி உள்ளே தள்ளுகிறார். கீதாவும் போலீஸில் சொல்லிவிடாமல் இருக்க, அவரையும் கொன்றுவிடுகிறார். ஜெயிலில் இருந்து தப்பிக்கும் ரஜினி, தன்னுடைய தங்கையை நாசப்படுத்திக் கொன்ற வில்லன் ஸ்ரீகாந்தை பழிவாங்குவதே ‘பைரவி’ படத்தின் கதை.

தமிழில் மட்டுமின்றி இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பாகுபாடின்றி எல்லா மொழிகளின் சூப்பர் ஸ்டார்களுக்குமே பிரேக் கொடுத்த கதை   யாக ஏதோ ஒரு ‘பழிக்குப் பழி’ கதைதான் இருக்கும்.

குடும்ப உறுப்பினர்களில் ஒருவரையோ, மொத்தக் குடும்பத்தையோ வில்லன் கொன்று விடுவான். ஹீரோ எப்படி பழிவாங்குகிறான் என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லிவிட்டால் மினிமம் கேரண்டி ஹிட் கொடுத்துவிடலாம். ஆனால், ரசிகர்களுக்கு அலுக்காத மாதிரி விதவிதமாகப் பழிவாங்குவதில்தான் இந்த வகை கதைகளில் சுவாரஸ்யத்தைக் கூட்ட முடியும்.

(தொடரும்)