ஆம்புலன்ஸ் சைரன் கேட்டா ஒதுங்கு! ‘சைவ கோமாளி’ தரும் மெசேஜ்



‘கில்லி’, ‘குருவி’, ‘புதிய கீதை’, ‘வேட்டைக்காரன்’ என்று விஜய் நடித்த படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்தவர் சுரேஷ் சீதாராம். இயக்குநர் தரணியின் மாணவர். ‘சைவ கோமாளி’ என்கிற வித்தியாசமான டைட்டில் கொண்ட படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். “கரம் மசாலா படங்களில் பணியாற்றியவர் எந்த மாதிரியான படத்தை எடுத்திருக்கிறார்?” என்கிற கேள்வியோடு அவர் முன் நின்றோம்.

“வயசு வித்தியாசம் இல்லாம எல்லாரும் குடும்பத்தோட உட்கார்ந்து ரசிச்சிப் பார்க்கிற மாதிரியான படத்தைத்தான் எடுத்திருக்கேன். ஒவ்வொரு மனுஷனோட மனசும் இரண்டு பார்ட்டா பிரிஞ்சிருக்கு. அவனுக்குள்ளே குறைஞ்சபட்சம் ஒரு சைக்கோ, ஒரு கோமாளி குடியிருக்கான். எந்த சூழலில் இந்த தன்மைகள் அவனிடம் வெளிப்படுது, அப்படி வெளிப்படுத்தறவனை சமூகம் எப்படி நடத்துதுன்னு ஒரு சைக்கோ அனாலிசிஸ் பண்ணியிருக்கேன்.

அதே நேரம் தற்போது பேசப்படும் பொருளான பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு கண்டனம் தெரிவிக்கிற விதமான படமாகவும் இது இருக்கும். இதையெல்லாம் சொன்னா, ரொம்ப சீரியஸான படம்னு நெனைச்சுக்கப் போறீங்க. வழக்கமான காதல், காமெடி, சென்டிமென்டுக்கு இடையிலே இந்த விஷயங்களும் இருக்கு.”

“படத்துலே யாரு ‘சைவ கோமாளி’யா நடிச்சிருக்கிறது?”

“ரஞ்சித்துன்னு ஒரு புதுமுகம். பெங்களூர் பையன். ஆனா, தமிழில் டயலாக்குகளை அவ்வளவு அனாயாசமா பேசுறாரு. ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளரா இருந்தவர் என்பதால் கேமரா ஃபியர் கொஞ்சமும் இல்லை.”
“ஹீரோயின்?”

“ரெஹானா. பேருலே கொஞ்சம் இந்தி வாசனை அடிச்சாலும் பக்கா சென்னைப் பொண்ணு. ‘கம்பீரம்’ உள்ளிட்ட சில படங்களில் சைல்ட் ஆர்ட்டிஸ்ட்டா பண்ணியிருக்காங்க. மணிஷாஜித் என்கிற பெயரில் சில படங்களில் ஹீரோயினாவும் பண்ணியிருக்காங்க. இந்தப் படத்துலேருந்து ரெஹானாங்கிற பேருலே புதுசா லாகின் ஆகறாங்க.”

“மற்ற நட்சத்திரங்கள்?”

“ஆமாம். பொதுவா ஒரு படத்துலே ஐம்பது சதவிகிதத்துக்கும் மேலான காட்சிகளில் ஹீரோவை பார்க்கலாம். ஆனா, இந்தப் படத்துலே அவருக்கு மொத்தமே பதினஞ்சி சீன்தான். படம் முழுக்க ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும், ‘பவர் ஸ்டார்’ சீனுவாசனும்தான் வர்றாங்க. 108 ஆம்புலன்ஸ் க்ளீனரா ராஜேந்திரனும், அசிஸ்டென்ட் கமிஷனர் அக்னிபுத்திரனா பவர்ஸ்டாரும் பட்டையைக் கிளப்பியிருக்காங்க. ஆம்புலன்ஸ் டிரைவராக ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ராஜ்குமார் பண்ணியிருக்காரு.”

“படத்துல ஒரே ஒரு பாட்டுதானா?”

“படத்தோட ஹைலைட்டே விறுவிறுப்பான திரைக்கதை. அதை பாட்டுங்கிற ஸ்பீட் பிரேக்கர் போட்டு கெடுத்துடக் கூடாதுன்னு நெனைக்கிறேன். 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பாராட்டி ‘ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டா ஒதுங்கு, யம்மா ஹாஸ்பிட்டல் வந்துடுச்சு இறங்கு’ன்னு ஒரே ஒரு பாட்டை மட்டும் கணேஷ் ராகவேந்திரா இசையில் கானா பாலா பாடியிருக்காரு.”

“நீங்க கால்ஷீட் கேட்டா பெரிய ஹீரோக்களே கொடுப்பாங்களே?”

“உண்மை. ஆனா, இந்தக் கதைக்கு எனக்கு அவங்க தேவைப்படலை. அப்படி அவங்களை கமிட் பண்ணிக்கிட்டா இந்தக் கதையை எடுக்க முடியாது. எந்த காம்ப்ரமைஸும் இல்லாமே எடுக்க நினைச்சேன். அதுக்கு புதுமுகங்கள்தான் சரி. நான் எதிர்பார்த்ததைவிட படம் பிரமாதமா இருக்கு. இந்தப் படத்துலே வேலை பார்த்தவங்க எல்லாருமே தரணி சாரோட டீம்லே இருந்தவங்கதான். படத்தை தயாரிச்ச ஏ.சி.சுரேஷ், மகேஷ், சாய்மகேந்திரன் மூவருமே ஒரே காலேஜில் படிச்சவங்க.”

- சுரா