டூப்ளிகேட் சரக்கு வேண்டவே வேண்டாம்!
மெசேஜ் சொல்லுது பழைய வண்ணாரப்பேட்டை
விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ வெளியாகும்போது, அவரிடம் போஸ்ட் புரொடக்ஷன் தொழில் கற்றுக்கொண்ட மோகன்ஜி இயக்கும் ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படமும் ரிலீஸ் ஆகிறது.
இவரே கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கிறார். சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டையில் பிறந்து வளர்ந்தவர், தன்னுடைய சொந்தப் பகுதியின் பெயரிலேயே முதல் படம் எடுத்திருக்கிறார். யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லை. இன்டிபென்டன்ட் இயக்குநர் என்பதே தனக்கு பெருமை என்று பேசத் தொடங்கினார்.
“படம் லேட்டா ரிலீஸ் ஆகுறமாதிரி தெரியுது?”
“ரொம்பவே லேட்டு. வழக்கமான சின்ன பட்ஜெட் படங்களுக்கு வர்ற எல்லாப் பிரச்னையும் எங்களுக்கும் வந்தது. இப்போதான் தியேட்டர் கிடைச்சிருக்கு. சென்சார்லே பார்த்து பாராட்டி க்ளீன் யூ கொடுத்திருக்காங்க. தைரியமா ரிலீஸ் பண்ணுறோம். மக்கள் ஆதரிப்பாங்கன்னு நம்பிக்கை இருக்கு.”
“டைட்டில் ஓக்கே. கதை?”
“வடசென்னைன்னாலே அரசியலை தவிர்க்க முடியாது. இது பொலிடிக்கல் கிரைம் திரில்லர். அஞ்சு ஃப்ரெண்ட்ஸ். சம்பந்தமே இல்லாம அதில் ஒருத்தன் போலீஸ் கிட்டே மாட்டிக்கிட்டு படாதபாடு படுறான். அவனை இன்னொரு ஃப்ரெண்ட் களமிறங்கி காப்பாத்துறாரு. சம்பந்தமில்லாமே போலீஸ் ஏன் ஒருத்தனை குறிவெச்சி தூக்குதுங்கிறதெல்லாம் சஸ்பென்ஸ். என்னோட வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தைத்தான் ‘பழைய வண்ணாரப்பேட்டை’ ஆக்கியிருக்கேன்.”
“ஹீரோ?”
“பிரஜன். இவரை சன் டிவியில் பார்த்திருப்பீங்க. இந்தப் படத்துக்காக கிட்டத்தட்ட மூணு வருஷம் என் கூடவே இருக்காரு. இந்தக் கதையை எழுதினதுமே இந்த கேரக்டர் பிரஜனுக்குதான்னு மனசுலே பதிஞ்சிடிச்சி. படம் பார்க்குறப்போ நான் அவர் மேலே ஏன் இவ்வளவு நம்பிக்கை வெச்சிருக்கேங்கிறது உங்களுக்கு புரியும். அப்புறம் ரிச்சர்ட், போலீஸ் அதிகாரி வேடம் செஞ்சிருக்காரு. ‘ரேணிகுண்டா’ நிஷாந்துக்கும் லீட் ரோல்.”
“ஹீரோயின் அஷ்மிதா எப்படி?”
“பிரமாதப்படுத்தி இருக்காங்க. சோலோ சீனும் சரி, ஹீரோவோட காம்பினேஷன் சீனும் சரி, கண்ணுலே ஒத்திக்கலாம் என்பதைப்போல பளிச்சிட்டிருக்காங்க. மொத்தமே இருபத்தைஞ்சு நிமிஷம்தான் அவங்க வருவாங்க. எங்க படத்துக்கு அப்புறம் ‘அட்டி’யில் கமிட் ஆகியிருக்காங்க.”
“மத்த டெக்னீஷியன்ஸ்?”
“இருங்க. இன்னும் ஆக்டர்ஸையே சொல்லி முடிக்கலை. கருணாஸ் ஒரு முக்கியமான ரோல் பண்ணியிருக்காரு. வடசென்னை கதையா இருந்தாலும் நீங்க நினைக்கிற வயலன்ஸ், கட்டுமஸ்தான உடம்போட வில்லனெல்லாம் கிடையாது. பாடகர் வேல்முருகன், கானா பாலா, சேசு, கூல் சுரேஷ், ஜெயசூர்யான்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க.
இசையமைப்பாளர் ஜூபின், ஒளிப்பதிவாளர் பாருக், எடிட்டர் தேவராஜ், ஆர்ட் டைரக்டர் ஆனந்த்துன்னு கம்ப்ளீட்டா புது டீமோடுதான் வொர்க் பண்ணியிருக்கேன். இந்தப் படத்தோட பலமே டெக்னீஷியன்கள்தான். கதைக்கு என்ன தேவையோ, படத்துக்கு எது பலம் சேர்க்குமோ அதை மிகச் சரியாக பண்ணியிருக்காங்க. அவுட்புட்டும் அம்புட்டு சூப்பரா வந்திருக்கு.”
“அதெல்லாம் இருக்கட்டும். என்ன மெசேஜ் சொல்ல வர்றீங்க?”
“சரக்கு வேண்டாம் என்பதுதான் என் மெசேஜ். அதிலும் டூப்ளிகேட் சரக்கு வேண்டவே வேண்டாம் என்பதை அழுத்தமா சொல்லியிருக்கேன்.”
- சுரேஷ்ராஜா
|