ரூபாய் பிரச்சினை உச்சத்தில் இருக்கும்போது ரிலீஸ் ஆகிறது ‘ரூபாய்’!



“நல்ல கருத்துள்ள படங்களைக் கொடுத்தால் ஆடியன்ஸ் ஏற்றுக் கொள்வதில்லை என்று சினிமாவில் சிலர் சொல்வதுண்டு. என்னுடைய அனுபவம் அதை தவறு என்று நிரூபித்திருக்கிறது. நல்ல ஆசிரியர்கள்தான் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும் என்கிற கருத்தை ‘சாட்டை’ மூலமாக சொல்லியிருந்தேன். ஜனரஞ்சகமாக சொல்லப்பட்ட அந்த மெசேஜை மக்கள் நன்கு வரவேற்றிருக்கிறார்கள். அடுத்து நான் இயக்கியிருக்கும் ‘ரூபாய்’ படமும் அதுபோன்ற ஒரு முக்கியமான கருத்தை விவாதமாக மக்களிடம் ஏற்படுத்தும்” என்று நிதானமாக பேசத் தொடங்குகிறார் இயக்குநர் அன்பழகன்.

“உங்க படத்தோட தலைப்புதான் இப்போ டாக் ஆஃப் இந்தியா...”“இந்த ரூபாய் நோட்டுப் பிரச்சினையெல்லாம் வர்றதுக்கு முன்னாடியே ‘ரூபாய்’னு எங்க படத்துக்கு தலைப்பை வெச்சிட்டோம் சார். பணம் என்கிற கான்செப்ட் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அது மக்களோடு இரண்டறக் கலந்த விஷயம். இப்போ திடீர்னு உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டு செல்லாதுன்னு அறிவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பா பேசுறாங்களே தவிர, எப்பவும் மக்கள் பணம் பற்றி சிந்திச்சிக்கிட்டேதான் இருக்காங்க.

‘சாட்டை’ முடிச்ச கையோடு ‘ரூபாய்’ படத்தோட ஸ்க்ரிப்டை எழுத ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட ஒண்ணரை வருஷ உழைப்பை இந்தப் படத்தோட எழுத்து எடுத்துக்கிச்சு. இப்போ திரும்பின பக்கமெல்லாம் மக்கள் ரூபாய் பற்றி பேசிக்கிட்டிருக்கிறப்போ எங்க ‘ரூபாய்’ வெளிவருவது தற்செயலானதுதானே தவிர, திட்டமிட்டு செஞ்சதில்லை.”

“இந்தப் படத்துலே என்ன மெசேஜ் சொல்ல வர்றீங்க?”

“ஆசைதான் துன்பத்துக்கு காரணம்னு அத்தனை மகான்களும் சொல்லிட்டாங்க. நாங்க குறிப்பா பணத்தாசை, இப்போதைய சமூகத்தீமைகளுக்கு ஆணிவேரா இருக்கிறதைப் பத்தி அலசுறோம்.

பணம் மட்டும் ஒரு மனுஷனுக்கு திருப்தி தந்துடாதுன்னு எந்த ஏழையாவது சொல்லுறானா? பணரீதியா தன்னிறைவு பெற்றவர்கள்தான் இப்படியெல்லாம் தத்துவம் போதிப்பாங்க. அப்படி பணக்காரனுக்கு பணத்தாலே நிம்மதியில்லைன்னு அதையெல்லாம் தூக்கி ஊருக்கு கொடுத்துட்ட வரலாறு எங்காவது உண்டா?

இப்படியாக பணம் பத்தி மக்கள் கிட்டே என்னவெல்லாம் ‘மித்’ இருக்குன்னு எங்க படம் விவாதிக்குது.”

“படத்தோட கதை?”

“தேனியிலே லாரி டிரைவர்களாக இருக்கும் சந்திரன், கிஷோர் ரெண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள். அவங்களுக்குன்னு உலகத்துலே இருக்கிற ஒரே சொத்து அவங்க லாரி மட்டும்தான். ஒரு பெரிய சவாரி எடுத்துக்கிட்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வர்றாங்க.
ஊர் திரும்புறப்போ அவங்களுக்கு ஏற்படுற ஒரு சின்ன பணத்தாசையில் ஏகப்பட்ட பிரச்சினைகளுக்குள்ளே சிக்கிக்கிறாங்க. அதிலே இருந்து மீண்டு ஊர் போய் சேர்ந்தாங்களா என்பதுதான் கதை.”

“உங்க முந்தைய படத்தில் கதறக் கதற கருத்து சொன்னீங்க...?”

“சிலபேர் அப்படிதான் சொல்லுறாங்க. ஆனா, படம் பார்த்த சாமானிய மக்கள் அத்தனை பேரும் ஹேப்பி. குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் வாத்தியார்கள் பலரும் என்னை தேடிவந்து அந்தப் படம் பத்தி மணிக்கணக்கா பேசியிருக்காங்க.இந்தப் படத்துலே அவ்வளவு தீவிரமான பிரச்சாரம் இருக்காது.

காதல், காமெடி, திரில்லர்னு விஷுவலா ரொம்ப ஜாலியா ஃபீல் பண்ணுறதுக்கு நிறைய விஷயங்கள் வெச்சிருக்கோம். ‘சாட்டை’ படத்தின் கதை முழுக்கவே ஒரு பள்ளியை களமாகக் கொண்டது. ஆனா, இதில் சென்னை, மூணாறு, மறையூர், தேனின்னு நிறைய லொக்கேஷன்களுக்கு கதை டிராவல் ஆகுது.”

“யாருக்குமில்லாத சமூக சிந்தனை உங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு அதிகமா இருக்கு?”

“அய்யோ, என்னை என்னவோ புரட்சிவீரன் மாதிரி சித்தறிக்கறீங்களே? சமூகம் குறித்து எல்லாருக்கும் இருக்கும் ஆதங்கம்தான் எனக்கும் இருக்கு. அதை வெளிப்படுத்தற மீடியமா சினிமாவை நான் யூஸ் பண்ணிக்கிறேன். என் படத்தோட கதை முதலில் என்னை தாக்கத்துக்கு உள்ளாக்கணும்.

அப்போதான் அதில் முழுமையா ஈடுபட முடியுது. மக்களோட வாழ்க்கைக்கு அந்நியமான விஷயங்களை முடிஞ்சவரை ஒதுக்கிடுவேன். ‘சாட்டை’ மாதிரி கதையை எடுத்துக்கிட்டுப் போனா, பல தயாரிப்பாளர்கள் மிரளுறாங்க. சரின்னு பக்கா கமர்ஷியலா ஒரு லைன் சொன்னோம்னா, உங்க கிட்டே இருந்து ‘சாட்டை’யைத்தான் எதிர்பார்க்கிறோம்னு பல்டி அடிக்கிறாங்க. ‘ரூபாய்’ படத்துலே ரெண்டு அம்சத்தையும் பேலன்ஸ் பண்ணி செஞ்சிருக்கேன்.”

“சந்திரன் - ஆனந்தி, கெமிஸ்ட்ரி எப்படி?”

“கதைக்கு பொருத்தமா அமைஞ்சிருக்காங்க. பரணி எனும் லாரி டிரைவரா சந்திரன் பக்காவா ஃபிக்ஸ் ஆயிட்டாரு. பாமரப் பெண்ணா இருந்தாலும் அறிவுக்கூர்மை மிக்க பெண்ணா ஆனந்தி வர்றாங்க. இவங்களுக்குள்ளான காதல் எபிசோட் நல்லா வந்திருக்கு. ஹரீஷ் உத்தமன் வில்லனா வந்து சைலண்டா மிரட்டுறார்.

சந்திரனுக்கு ஃபிரெண்டா கிஷோர் ரவிச்சந்திரன், முக்கியமான ஒரு வேடத்தில் சின்னி ஜெயந்துன்னு.. இந்த ஐந்து பாத்திரங்களை வெச்சிதான் திரைக்கதை டிராவல் பண்ணுது. அஞ்சு பேருமே முழு ஸ்க்ரிப்ட்டையும் படிச்சிட்டு வொர்க்‌ஷாப், டெஸ்ட் ஷூட்டுன்னு ஒத்துழைச்சாங்க. அதுக்கப்புறம்தான் ஃபைனல் ஷூட்டிங் போனோம்.”

“ரொம்ப நாள் கழிச்சி சின்னி ஜெயந்த்?”

“படத்துலே இவரோட கேரக்டர் தள்ளுவண்டி கடைக்காரர். கதையை எழுதிக்கிட்டிருக்கிறப்பவே இவரோட முகம்தான் அந்தப் பாத்திரத்துக்கு செட் ஆகும்னு தோணிச்சி. அவர் படம் நடிச்சி ரொம்ப நாளாவுதே, ஒத்துப்பாரான்னு சந்தேகத்தோடு போய்தான் கேட்டேன்.

 குங்கும ராஜன் என்கிற அந்த கேரக்டருக்குள் நான் கதை சொல்லுறப்பவே மாறிட்டாரு. சந்தோஷமா ஒத்துக்கிட்டாரு. ஹீரோயினுக்கு அப்பாவா வருகிற சின்னிஜெயந்தோட பழைய பாடிலேங்குவேஜ், டயலாக் டெலிவரி எல்லாமே மாறி ரொம்ப ஃப்ரெஷ்ஷான நடிப்பை மிகச்சிறப்பா கொடுத்திருக்காரு.”

“மத்த டெக்னீஷியன்ஸ்?”

“மியூசிக் இமான். சொல்லணுமா என்ன? முளைப்பாரி திருவிழாவை மையப்படுத்தி ஒரு பாட்டு. நாங்க ஷூட் பண்ணின லொக்கேஷனில் இருந்த ஊர் மக்களையே முளைப்பாரி வெக்கச் சொல்லி படமாக்கினோம். ரகளையா வந்திருக்கு.

மொத்தம் நாலு பாட்டு. எல்லாத்தையும் யுகபாரதி எழுதியிருக்காரு. ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் என்னோட ஜூனியரான இளையராஜாதான் ஒளிப்பதிவு. அவர் ரவிவர்மன் கிட்டே தொழில் கத்துக்கிட்டவரு. நல்ல எக்ஸ்பீரியன்ஸ்ட் ஹேண்ட் பண்ணினமாதிரி பளிச்சின்னு பண்ணிக் கொடுத்திருக்காரு.”

“உங்க குரு பிரபுசாலமன் என்ன சொன்னாரு?”

“இந்தப் படத்தை ஆரம்பிக்கிறப்பவே சொன்னாரு, ‘உனக்கு ‘சாட்டை’யில நல்ல பேரு கிடைச்சிருக்கு. ‘ரூபாய்’லே வெற்றிகரமான டைரக்டர்னு பேரு எடுக்கணும்’னு. அவரு ‘தொடரி’ வேலைகளில் பிஸியா இருந்தப்பவும், அடிக்கடி என் படத்தைப் பத்தி விசாரிச்சி ஊக்கப்படுத்தினாரு.

‘கொக்கி’யில் தொடங்கி ‘மைனா’ வரை அவரிடம் வேலை பார்த்திருக்கேன். அவரோட பேரைக் காப்பாத்தணும் என்கிற உணர்வே என்னை நல்ல திசையில் நடத்திச் செல்லுது. சமீபத்தில் சார், ‘ரூபாய்’ பார்த்துட்டு திருப்தியா உணர்ந்தார். அதைவிட எனக்கு வேறென்ன சந்தோஷம் வேணும்?”

- சுரேஷ்ராஜா