புரட்சி செய்ய ரெடியா?



சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்! மாணவன் 8

வெல்ல முடியாததை வெல்லும் கதையை போனவாரம் பார்த்தோம்.அடுத்தது புதுப்பித்தல்...ஏற்கனவே நமக்கு மரபாக சொல்லப்பட்டவற்றை முற்றிலுமாக மறுத்து புதிய சிந்தனைகளை உருவாக்கும் கதை.

பெரும்பாலும் புரட்சிகரப் படங்களை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். எண்பதுகளில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சட்டத்திற்கு சவால் விட்டு எழுதி இயக்கிய படங்கள் இந்த ரகம்தான். அவரது சிஷ்யரான ஷங்கரும் இதே ‘புதுப்பித்தல்’ வேலையை தன்னுடைய படங்களில் செய்வதுண்டு.

பொதுவாக புதுப்பித்தலின் அவசியம்தான் என்ன? பழசாகிவிட்ட ஒன்று பழுது பார்க்க முடியாத சூழலில் அதை தூக்கியெறிந்துவிட்டு, அந்த இடத்தில் புதியதாக ஒன்றை நிறுவ வேண்டும்.இந்த வகை கதை சொல்லலில் பிரச்சினை என்னவென்று விஸ்தாரமாக முதலில் சொல்லிவிட்டு, அதன் பாதிப்புகளை உருக்கமான காட்சிகளில் எடுத்துக் காட்டி, கடைசியாக படைப்பாளி தன்னுடைய தீர்வினை முன்வைக்க வேண்டும்.

இயக்குநர் விக்ரமனின் கைவண்ணத்தில் 1994ல் வெளியான ‘புதிய மன்னர்கள்’, வணிகரீதியாக பெரிய வெற்றியைப் பெறாத திரைப்படம். ஆனால், இந்த ‘புதுப்பித்தல்’ வகை கதை சொல்லும் பாணியில் அது ஒரு டிரெண்ட்செட்டராக அமைந்தது.

‘ஏற்கனவே இருக்கும் அரசியல்வாதிகள் சரியில்லை. அவர்களால் மக்களுக்கு பயனேதுமில்லை. இளைஞர்களே அரசியலில் ஈடுபட்டு தமக்கான உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்’ என்று விக்ரமன் சொன்ன கதை அப்போது வேண்டுமானால் வெல்லாமல் இருந்திருக்கலாம். சில ஆண்டுகள் கழித்து இதே கருத்தை முன்வைத்து ‘தேசிய கீதம்’ என்று கதை சொன்னார் இயக்குநர் சேரன்.

அதுவும்கூட தோல்விப்பட பட்டியலிலேயே சேர்ந்தது.புரட்சிகரமான இதே கதைக்கருவை ஷங்கர், பிரும்மாண்டமான வடிவத்தில் ‘முதல்வன்’ என்கிற பெயரில் கொடுத்தபோது மக்கள் பேராதரவு அளித்தார்கள். மணிரத்னமும் கூட ‘ஆயுத எழுத்து’ என்று எடுத்தது இதே வகையில்தான்.

அமைப்புக்கு மாற்றாக புதிய அமைப்பு, ஆட்களுக்கு மாற்றாக புதிய ஆட்கள் என்று ‘புதுப்பித்தல்’ வகை கதை சொல்லலை எடுத்துக் கொண்டால், அதில் உச்சம் எட்டியது இயக்குநர் கே.வி.ஆனந்தின் ‘கோ’.ஆங்கிலத் திரைப்படமான ‘ஸ்டேட் ஆஃப் ப்ளே’ தாக்கத்தில் உருவான ‘கோ’, அரசியல் அதிகாரத்தை இளைஞர்கள் கைப்பற்ற தியாகம் செய்வதோடு மட்டுமின்றி, மரபான அரசியல்வாதிகளின் தில்லுமுல்லுகளையும் கற்றுத் தேற வேண்டும் என்று அதிரடியாக கதை சொன்னது.

நம்முடைய ஊரில் ‘புதுப்பித்தல்’ கேட்டகிரியில் இதுமாதிரி புரட்சிகரப் படங்கள்தான் பெரும்பாலும் சாத்தியம். ஏனெனில், இங்கே அறிவியல் புனைவு கதைகளுக்கு அவ்வளவு மார்க்கெட் இல்லை. ‘எந்திரன்’ மாதிரி கதைகள் மாமாங்கத்துக்கு ஒருமுறைதான் சாத்தியம். ஹாலிவுட்டிலேயே இந்த வகையை அல்வா மாதிரிதான் பயன்படுத்துகிறார்கள்.

உலகத்தின் expiry date நெருங்கிவிட்டது, அடுத்தது என்ன என்றெல்லாம் கதைவிட அவர்களால்தான் முடியும். அவர்களுக்குத்தான் அவ்வளவு கோடிகளைக் கொட்டி செலவு செய்து படமெடுத்து, லாபம் பார்க்கும் வகையிலான பெரிய வணிகச் சந்தையும் இருக்கிறது.

(கதை விடுவோம்)