தர்மதுரை



வைரமாய் மின்னுகிறார் தர்மதுரை!

ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றித் திரைப்படம் ‘தர்மதுரை’. அதே டைட்டிலை மீண்டும் எடுத்துக் கொண்டு, அதே மாதிரியான வெற்றியை விஜய் சேதுபதி - சீனுராமசாமி கூட்டணி மீண்டும் பெற்றிருக்கிறார்கள்.ஆண்டிப்பட்டி ஏரியாவின் குக்கிராமம் ஒன்றில் வசிக்கும் ராதிகாவுக்கு நான்கு மகன்கள்.

அதில் மூன்று பேர் வட்டியும் முதலுமாக ஃபைனான்ஸ் தொழிலில் கொழிக்கிறார்கள். இரண்டாவது மகன் விஜய் சேதுபதி மட்டும் ஊதாரித்தனமாக குடித்துவிட்டு, ஊர் சுற்றிக்கொண்டு குடும்ப மானத்தை கப்பல் ஏற்றுகிறார். சகோதரர்களுக்கு இதனால் அவர் மீது காண்டு. ஒருகட்டத்தில் வீட்டுச்சிறை வைத்து விஜய்சேதுபதியை ஒரு வழி செய்ய வேண்டுமென்று முயற்சிக்கிறார்கள்.

இந்த சதித்திட்டத்தைத் தெரிந்து கொள்ளும் ராதிகா, விஜய் சேதுபதியை தப்புவிக்கிறார். போகிறபோக்கில் தானே அறியாமல் சகோதரர்களின் பெரும் பணத்தையும் தன்னோடு எடுத்துச் சென்று விடுகிறார்.எப்படி இருந்த விஜய் சேதுபதி, இப்படி ஆனார் என்று ப்ளாஷ்பேக் ஓப்பன் ஆகிறது.

மருத்துவக் கல்லூரியில் அவர் படிக்கும்போது தமன்னாவும், சிருஷ்டி டாங்கேவும் அவருக்கு சக மாணவிகள். சிருஷ்டி அவரிடம் காதலைச் சொல்கிறார். தமன்னாவோ ‘இதயம்’ முரளி கணக்காக கடைசிவரை காதலைச் சொல்லாமல் பொத்தி வைக்கிறார். இப்படியாக பப்பி லவ் ஏக்கத்தோடு ப்ளாஷ்பேக் முடிகிறது.

இரண்டாம் பாதியில் சிருஷ்டியையும், தமன்னாவையும் தேடிச் செல்கிறார் விஜய்சேதுபதி. வாழ்க்கை ஒவ்வொருவரையும் ஒருமாதிரியாக புரட்டிப் போட்டிருக்கிறது. சின்சியரான டாக்டரான விஜய்சேதுபதியை, குடிகாரனாக பார்க்கும் தமன்னா அதிர்ச்சியடைகிறார். அவர் ஏன் இப்படி ஆனார் என்று இரண்டாவது ப்ளாஷ்பேக் ஓப்பன்.

கிராமம் ஒன்றில் மருத்துவப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் விஜய்சேதுபதிக்கு, கிராமத்துப் பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷ் மீது காதல். அது கல்யாணத்தில் முடியாதவகையில் சகோதரர்கள் செய்த துரோகத்துக்கு பழிவாங்கவே அவர் குடிகாரனாக மாறினார் என்று கதை போகிறது.

கதையைக் கேட்ட தமன்னா விஜய்சேதுபதிக்கு மறுவாழ்வு அளிக்க முயற்சிக்கிறார். தமன்னாவின் தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கலும் முடிவுக்கு வருகிறது. இருவரும் என்ன ஆகிறார்கள் என்பதே மீதிக்கதை.

சமீப காலத்தில் இவ்வளவு கதை சொன்ன படம் வேறெதுவும் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. இயக்குநர் சீனுராமசாமி தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் களமிறக்கி ரசிகர்களை உருக வைத்திருக்கிறார்.

விஜய்சேதுபதி இதுவரை நடித்த படங்களிலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய படமென்று இதை நிச்சயமாக சொல்லலாம். மூன்று விதமான வாழ்வு நிலைகளிலும் அவர் உடல் மொழியில் காட்டியிருக்கும் வேறுபாடு அட்டகாசம். காதல் காட்சிகளிலும் பின்னியிருக்கிறார். படம் முழுக்க ஏராளமான நட்சத்திரங்கள் வலம் வந்தாலும், துருவ நட்சத்திரமாக பிரகாசிக்கிறார் விஜய் சேதுபதி.

கவர்ச்சித் தாரகையாக இதுவரை அறியப்பட்ட தமன்னா, மிகவும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சில காட்சிகளே என்றாலும் சிருஷ்டி மனம் கவர்கிறார். மூன்றாவது நாயகியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கிராமத்துப் பெண்களுக்கே உரிய உடல்கட்டு, பேச்சு என்று யதார்த்தமாக வாழ்ந்திருக்கிறார். ராதிகா, ராஜேஷ் போன்ற மூத்த தலைமுறை கலைஞர்களின் அனுபவம் பளிச்சிடுகிறது.

கலகலப்புக்கு கஞ்சா கருப்பு.வைரமுத்து - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி உருவாக்கியிருக்கும் இசை ராஜாங்கம் பிரமாதம். ‘போய் வாடா’, ‘ஆண்டிப்பட்டி’ போன்ற பாடல்கள் காலாகாலத்துக்கும் கேட்கப்படும்.

காசிவிஸ்வநாதனின் படத்தொகுப்பு, ஆண்டிப்பட்டி கணவாயின் அழகை வாரி நமக்கு கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் ஆகியோரின் நேர்த்தியால் முழுமையான படமாக மலர்ந்திருக்கிறது ‘தர்மதுரை’.ஒரே படத்தில் ஏராளமான சமூகப் பிரச்சினைகளைத் தொட்டு மிகச்சிறந்த திரைப்படத்தை வழங்கியிருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி.