திரும்பி வந்துட்டேன்னு சொல்லு! சின்னிஜெயந்த் ரீ-என்ட்ரி



ரஜினி படத்தில்தான் அறிமுகமானார். ரஜினி மாதிரியே ஸ்டைல், குரல் அத்தனையையும் மிமிக்ரி செய்வார். ரஜினியோடு இணைந்து காமெடியில் கலக்கிய ‘ராஜா சின்ன ரோஜா’, சின்னிஜெயந்தின் திரைவாழ்வில் ஒரு மைல்கல்.

பல்வேறு காரணங்களால் தமிழ் சினிமாவில் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம்பெற்றுவிட்ட தீவிரமான ரஜினி ரசிகரான சின்னிஜெயந்த், அதிரடியாக ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.“திரும்பி வந்துட்டீங்க....”

“ஹா... ஹா... ஹா... வேற எங்கே போயிடப் போறேன். ‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ படத்துலேதான் நான் மீண்டும் நடிக்க வந்ததா எல்லாரும் நினைக்கிறாங்க. கைவசம் அரைடஜன் படங்களுக்கும் மேலே இருக்கு. எல்லாருக்கும் லைஃபில் ஒரு பெரிய கேப் விழும். அப்பவும் சோர்ந்துபோயிடாமே ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ன்னு உழைச்சுக்கிட்டே இருக்கிறவங்கதான் மீளமுடியும்.

நான் ஃபீல்டுக்கு வந்து முப்பத்திரெண்டு வருஷம் ஆகுது. 1984ல் ரஜினிசாரோட ‘கை கொடுக்கும் கை’ படத்தில்தான் ஒருமாதிரி வில்லத்தனமான காமெடி ரோலில் அறிமுகமானேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு 350க்கும் மேலே படங்களில் நடிச்சிருக்கேன். ஒரு காலத்தில் ஹீரோவோட ஃப்ரெண்ட்ஸுன்னா கண்டிப்பா அதில் எனக்கு ஒரு ரோல் இருக்கும். இந்தியில் கூட ‘சச்சா பியார்’னு ஒரு படம் பண்ணினேன். அது ரிலீஸ் ஆகலை.”

“இப்போ என்னென்ன படங்கள் நடிக்கறீங்க?”“டைரக்டர் பிரபு சாலமன் சாருக்குதான் தேங்க்ஸ் சொல்லணும். என்னோட தோற்றத்தை முழுசா மாத்தி, அவரோட தயாரிப்பில் ‘சாட்டை’ அன்பழகன் இயக்குகிற ‘ரூபாய்’ படத்தில் நடிக்க வெச்சிருக்காரு. இதுலே ஹீரோயின் ஆனந்திக்கு அப்பாவா, இட்லிக்கடை நடத்துற கேரக்டர் பண்ணுறேன். இந்த கேரக்டருக்கு அமிதாப் சாரை இன்ஸ்பிரேஷனா வெச்சி என்னோட கெட்டப்பை சேஞ்ச் பண்ணியிருக்கேன்.

இது தவிர்த்து, ‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’, ‘வகுப்பறை’, ‘கத்தி சண்டை’, ‘7 நாட்கள்’, ‘முத்துராமலிங்கம்’ உள்ளிட்ட நிறைய படங்கள் பண்ணுறேன்.”“டைரக்டர் சின்னிஜெயந்தை மீண்டும் எப்போ பார்க்கலாம்?”(கையெடுத்து கும்பிடுகிறார்)“மூணு படம் பண்ணினேன். ‘உனக்காக மட்டும்’, ‘கானல் நீர்’, ‘நீயே என் காதலி’.

எல்லாரும் நல்ல படங்கள்தான் டைரக்ட் பண்ணினேன்னு பாராட்டுறாங்க. பாராட்டு மட்டுமே படைப்பாளிக்கு போதாதே! இப்போதைக்கு நடிப்புதான்னு முடிவு பண்ணிட்டேன். காலம் நம்ம தலையிலே என்ன எழுதிவெச்சிருக்கோ அதுபடி நடக்கும்.”

- தேவராஜ்