எளிய சொற்களின் காதலன்! கவிஞர் யுகபாரதி



நா.முத்துக்குமார், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பழசான பராமரிக்கப்படாத ஒரு மிதிவண்டியில் என்னைச் சந்திக்க வந்திருந்தான். பத்திரிகையில் வெளிவந்திருந்த என்னுடைய சிறிய கவிதை ஒன்று அவனுக்குப் பிடித்திருந்தது. அந்தக் கவிதையைப் பாராட்டி தேநீர் வாங்கிக்கொடுத்தான்.

தேநீரை மட்டுமே வாங்கித்தரும் வசதிதான் அப்போதிருந்தது. அந்தத் தேநீரில் நிறைவடையும் மனம்தான் எனக்கும் இருந்தது.முத்துக்குமார் என்னைச் சந்திக்க வந்தபோதே எழுத்தாளர் சுஜாதாவால் அவனுடைய தூர் கவிதை சிலாகிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், பரவலான கவனிப்பைப் பெற்றிருந்த கவிஞனாக அவன் இருந்தான். அவன் அளவுக்கு எழுதவோ அறிமுகமோ பெற்றிராத என்னை அவன் சந்திக்க வந்தது ஒருவிதத்தில் எனக்குப் பெருமையாய் இருந்தது.

‘வீரநடை’ திரைப்படத்தில் அவன் பாடல் எழுதிய செய்தியை அறிவுமதி அண்ணனுக்குப் பிறகு அவன் பகிர்ந்துகொண்டது என்னிடம்தான். ஹைக்கூ உத்திகளை திரைப்பாடலில் எழுதியிருக்கிறேன் என்று வரிகளை வாசித்துக் காட்டினான். அப்போதுவரை கூட நான் திரைப்பாடல் எழுதுவது குறித்து யோசித்திருக்கவில்லை. நீயும் திரைப்பாடல் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

தனக்குத் தெரிந்த இயக்குநர், தயாரிப்பாளர்களிடம் எல்லாம் எனக்காக என் கவிதைத் தொகுப்பைக் கொடுத்து பேசுவதாகவும் சிபாரிசு செய்வதாகவும் உறுதியளித்தான். ஓரிருவரை சென்று பார்க்கவும் ஏற்பாடு செய்தான். அந்தச் சமயத்தில் திரைப்பாடல் துறையில் முன்னணி பாடலாசிரியராக இருந்துவந்த கவிஞர் வாசனைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம்.

ஒருகட்டத்தில் வாசன் மஞ்சக்காமாலையால் மரணமுற்ற செய்தியை எனக்கும் சரவணனுக்கும் (இயக்குநர் ராஜுமுருகனின் சகோதரன்) சொன்னவன் அவன்தான். அதே மஞ்சக்காமாலை, அதே செய்தி அவனைப்பற்றியும் வருமென்று அப்போது நாங்கள் நினைத்திருக்கவில்லை.

போதும் என்று அவன் எதையும் நிறுத்தத் தெரியாதவன். இரண்டுமுறை தேசிய விருது வாங்கினான். இரண்டு முறையும் வாழ்த்துச் சொல்ல அழைக்கையில், “எப்போடா நீ தேசிய விருது வாங்குவ?” என்றுதான் கடிந்துகொண்டான்.

“நீ விடமாட்ட போலிருக்கே?” என்று சொன்னதற்கு, “உனக்காக வேணும்னா, இந்த வருசம் எழுதாம இருக்கட்டுமா?” என்றான். அடுத்தவருக்காக எதையும் விட்டுத்தரத் துணிவது அவனுடைய இயல்பு. எங்கு என் பெயரைப் பார்த்தாலும் அவனிடமிருந்து அழைப்பு வரும்.

சமீபத்தில் கூட ஒரு வார இதழில் வெளிவந்திருந்த என்னுடைய கவிதையைக் குறித்தும் பகிர்ந்துகொண்டான். “ஃபுல் ஃபார்ம்ல இருக்குடா... அசத்து” என்றான். பெரும்பாலும் ஒலிப்பதிவுக் கூடங்களில்தான் எங்கள் சந்திப்புகள் நிகழ்ந்துவந்தன.

அவனும் நானும் இணைந்து எழுதிய பல படங்களில் அவனை நானும் என்னை அவனும் ரசித்துக்கொண்டே இருந்தோம். பாரதி.... என்ன எழுதினான் என இசையமைப்பாளர்களிடம் நச்சரித்து பாடலை ஒலிக்கக் கேட்டு, “கேட்டேண்டா... நல்லா எழுதியிருக்க...” என்று சொல்வான்.

அவன் என்னை எங்கேயும் போட்டியாளனாகக் கருதவே இல்லை. அவனை போட்டியிட்டு ஜெயிக்க முடியாது என்பதால் நான் ஜெயிப்பதற்கான வாய்ப்புகளை அவன் ஏற்படுத்த எண்ணினான். என்னையும் ஒரு தம்பியாகவே வரித்துக்கொண்டான். ஆதவனுக்கு (முத்துக்குமார் மகன்) ஊதா கலரு ரிப்பன் ரொம்ப புடிச்சிருக்குடா என்று கைபேசியைக் கொடுத்து பேச வைத்தான்.

வெள்ளப் பாதிப்புக்காக சன் டிவி, என்னையும் அவனையும் இணைந்து ஒரு பாடல் எழுதக் கேட்டபோது ஆதவனையும் அழைத்துவந்து, இவன் தான்டா உன் மாமன் என்று கட்டித்தழுவினான். திரைப்பாடல் வரலாற்றில் அவன் பெயர் அழிக்க முடியாத இடத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

ஆழமாகவும் வேகமாகவும் அவன் எழுதும் அழகை அருகிருந்து பார்க்கையில் வாசிப்பு ஒரு படைப்பாளனை எவ்வளவு நேர்த்தியாக்கும் என அறிய முடியும். பறவைகள் மீது அவனுக்கு தீராத காதல். பறந்துகொண்டே இருப்பது அவனுக்குப் பிடித்திருந்தது. பழசான மிதிவண்டி யில் தொடங்கி உலகத்திலுள்ள பல விமானங்களில் அவன் பறந்திருக்கிறான்.

ஒரு பறவைக்கு நிகரான சிறகுகள் தனக்கும் கிடைக்க வேண்டும் என அவன் விரும்பியது, இவ்வளவு சீக்கிரம் பறந்துபோகத்தானா என நினைக்கையில் அழாமல் இருக்க முடியவில்லை. பட்டாம்பூச்சிகளை விற்கத் தொடங்கியவன் கடைசியில் தானுமொரு பட்டாம்பூச்சியாக மாறிவிட்டதை விதி என்பதா? விருப்பம் என்பதா?

ஏய் முத்து..... நீ செய்றது சரியில்லடா என சொல்லிக்கொண்டே இருந்தேன்.‘ஆயிரத்து சொச்சஅசைவு களுக்குப் பின்அடங்கிவிட்டதுபாட்டியின் பாம்படம்’என்றொரு கவிதையில் எழுதியிருப்பான். பாட்டியின் பாம்படத்தைப் போலவே தன்னையும் அவன் மரணத்தில் அடக்கிக் கொண்டுவிட்டான்.

செய்றது சரியில்லடா என்று சொல்லிய என்னை செஞ்சது சரியில்லடா என்று சொல்லும் நிலைக்குத் தள்ளிவிட்டான். என்வரையில், முத்துக்குமார் தன் ஆரோக்கியத்தில் அவ்வளவு அக்கறை காட்டுபவனில்லை. விட்டேத்தியான மனமும் அவசரமும் அவனை ஆட்கொண்டிருந்தன. சதா சிந்தனை உளைச்சலுக்குள் அவன் சிக்குண்டிருந்தான். படைப்பு மனம் அவனைத் துரத்திக்கொண்டே இருந்தது.

பழசான மிதிவண்டியில் வந்து என்னையும் என் கவிதைகளையும் மரியாதை செய்த ஒருவனுக்கு மின் மயானத்தில் இறுதி மரியாதை செய்ய நேர்ந்த கொடுமையைவிட மரணம் ஒன்றும் அவ்வளவு அவலமில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

அவனே எழுதியது போல மனம் என்பது பைத்திய எண்ணங்களின் தொகுப்பு, காற்றில் மிதக்கும் தூசிகளுக்கு திசை என்பது இல்லை. அவன் நம்மை தூசியாக்கிவிட்டு காற்றாக தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்துவிட்டான். அவன் வேடிக்கை காட்டுவதற்கும் பார்ப்பதற்கும் பிரியப்பட்டவன். இப்போதுதான் புரிகிறது அவன் காட்டியதும் பார்த்ததும் வேடிக்கை இல்லையென்று.

காரியங்களில் அவன் காட்டிய அவசரம் மரணத்திலும் என்னும்போதுதான் அவனை மன்னிக்க முடியவில்லை. இதிலும் அவன் என்னை, எங்களைத் தோற்கடித்துவிட்டான். கடல் தாண்டும் பறவைக்கு கண்டங்கள் எதுவுமில்லை என்று எழுதியவன் வேறு என்ன செய்வான்?

- (முகநூலில் கவிஞர்
யுகபாரதி எழுதிய அஞ்சலிக் குறிப்பின் சுருக்கமான வடிவம்)