காதல் 75% ஹாரர் 25% ‘தகடு’ ஃபார்முலா!



ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது ‘தகடு’. காட்டினை களமாக வைத்து வரலாற்றுப் பின்னணியில் சொல்லப்படும் கதையென்று சொல்கிறார் டைரக்டர் தங்கதுரை.

“நீங்க சொல்றதே குழப்பமா இருக்கே?”“காடுகளை மையமா வெச்சி உருவாகியிருக்கும் பயணக்கதை இது. பொதுவாவே காடுன்னா இயற்கை அழகும், வனப்பும்தான் நினைவுக்கு வரும். அதில் ஒளிந்திருக்கும் ஆபத்தையும் ‘தகடு’ எடுத்துக் காட்டும்.”
“வரலாற்றுப் பின்னணின்னு சொன்னீங்க?”

“யெஸ். இந்தப் படத்தை எப்படி வகைப்படுத்தி சொல்லுறதுன்னு எனக்கே குழப்பமாதான் இருக்கு. இப்போதைக்கு ஹாரர் கலந்த காதல் கதைன்னு வெச்சுக்கங்க. பொதுவா காதல் படங்களுக்கெல்லாம் ஒரு பின்னணிக்கதையும், களமும் இருக்கும்.

இதோட பின்னணியா வரலாற்றை வெச்சிருக்கேன். சமீபத்தில் வரலாற்றுக் காதல் படம் எதுவும் வந்ததா எனக்கு நினைவில்லை. அப்படி ஏதாவது வந்திருந்தாலும் அதில் ஆவி, பேய்னு இருக்கும். இது முழுக்க முழுக்க காதல்தான். காதல் 75% ஹாரர் 25%.”

“வரலாறுன்னா காஸ்ட்யூம்ஸுக்கே பட்ஜெட் எகிறுமே?”
“உண்மைதான். பதினாறாம் நூற்றாண்டில் நடக்குற கதை. உடைகள் மட்டுமின்றி பேக்டிராப்பிலும் ஹிஸ்டரியை கிரியேட் பண்ணணும். ஆர்ட்டிஸ்ட் எல்லாம் அபாரமா ஒத்துழைச்சாங்க. காலையிலே 4 மணிக்கே மேக்கப் போட ஆரம்பிச்சி 8 மணிக்கெல்லாம் ரெடி ஆயிடுவாங்க. பட்ஜெட்டை விடுங்க. இந்த உழைப்புக்கான மதிப்பை எப்படி மதிப்பிட முடியும்?”
“ஹீரோ, ஹீரோயின்?”

“ஹீரோ தீபக்ராஜ் ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரியா வர்றாரு. போலீஸ் கனவில் இருக்கிறவங்களுக்கு சில லட்சியங்கள் இருக்குமில்லையா, அதையெல்லாம் ஸ்க்ரீனில் எங்க ஹீரோ செய்வாரு.

ஹீரோயின் சனம் ஷெட்டிக்கு இளவரசி ரோல். இவங்க நடிப்பில் நாலஞ்சி படம் வெளிவந்தும், இன்னும் இவங்க திறமை குடத்திலிட்ட விளக்கா இருக்கு. இந்த ரோல், அவங்க நடிப்புத் திறமையை பேசுறதா இருக்கும். ஹீரோ போலீஸ், ஹீரோயின் இளவரசின்னு சொல்லுறப்போ உங்களுக்கு குழப்பமாத் தான் இருக்கும். படம் பாருங்க. வித்தியாசமான எங்க கான்செப்டுலே தெளிவாயிடுவீங்க.”“ஹீரோவுக்கு ஏதோ விபத்துன்னு சொன்னாங்களே?”

“உங்க காதுவரைக்கும் விஷயம் வந்துடிச்சா? ஒக்கேனக்கல் பக்கத்துலே மஞ்சுமலைன்னு ஒரு பகுதி. அங்கே டாப் ஆங்கிளில் ஒரு சீன் ஷூட் செய்யணும். ஒரு மரம், மலையை தாண்டி பள்ளத்தாக்கில் கிளை விட்டிருந்தது. அந்த மரத்தில் தீபக்ராஜ் தொங்கியபடி நடிக்கணும். அவரே ரிஸ்க் எடுத்து பண்ணுறேன்னு சொல்லிட்டாரு.

நாங்க ஷூட் பண்ணிக்கிட்டிருக்கிறப்பதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. திடீருன்னு மரக்கிளை, தீபக்கோட வெயிட்டு தாங்காம முறிய ஆரம்பிச்சிடிச்சி. கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலையில் இருந்த தீபக்கை கஷ்டப்பட்டு மீட்டோம். நெனைச்சாலே நெஞ்சுலே கெதக்குன்னு ஆகுற இன்சிடென்ட் அது.”

“முதன்முதலா படம் இயக்கறீங்க. அனுபவம் எப்படி இருக்கு?”“உண்மையை சொல்லணும்னா எனக்கு இயக்கம் என்பது பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல. நான் யாரிடமும் உதவியாளரா வேலை பார்த்ததில்லை. கண் பார்த்தா கை செய்யும்னு சொல்லுவாங்களே, அது மாதிரி தொழில் கத்துக்கிட்டவன். இந்தப் படத்தில் என்னென்ன நிறை, குறைகள்னு விமர்சகர்களும், ரசிகர்களும் சொன்னாங்கன்னா அதை கேட்டுட்டு எதையும் மறுக்காம அடுத்த படங்களில் சரி செஞ்சிப்பேன். தரமான படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.”

- சுரேஷ் ராஜா