காதலுக்கு வில்லன் காதலன்!



ஹைதராபாத்தின் ஹாட் நியூஸ் நாக சைதன்யா - சமந்தா ஜோடியின் ரொமான்ஸ்தான். ஆனால், சைதன்யாவின் அப்பா நாகார்ஜுனோ இதைப்பற்றி வெளிப்படையாக வாய் திறக்காமல், மகனை வைத்து படம் தயாரித்து வெளியிட்டு பெரிய ஹிட் கொடுத்திருக்கிறார்.

மனவாடுகள் தேசத்தின் சூப்பர்ஹிட்டான ‘ஒக்க லைலா கோஸம்’ இப்போது ‘லைலா ஓ லைலா’வாக தமிழ் பேச தயாராகியிருக்கிறது. கே.விஜயகுமார், இதன் கதையை எழுதியிருக்கிறார். தமிழில் ஸ்ரீலக்ஷ்மி ஜோதி கிரியேஷன்ஸ் வெளியிடுகிறது.

நாகசைதன்யாவுக்கு ஹீரோயினாக ‘முகமூடி’ படத்தில் நடித்த பூஜா ஹெக்டே. பிரபு, சுமன், சாயாஜி ஷிண்டே, நாசர், பிரம்மானந்தம், ஆசிஷ் வித்யார்த்தி என்று பெரும் நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உண்டு.பணக்கார வாலிபனான நாகசைதன்யாவுக்கு ஒரு பெண் மீது காதல். இவரது காதலை ஆரம்பத்தில் மறுக்கிறார் அந்த பெண்.

இவர் விரட்டி விரட்டி காதலிக்கும் அப்பெண்ணிற்கும், நாகசைதன்யாவிற்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. ஆனால், காதலில் விடாப்பிடியாக நின்ற நாகசைதன்யாவே அத்திருமணத்தைத் தடுத்து நிறுத்துகிறார். விருப்பப்பட்ட பெண்ணை அவரே மறுக்க என்ன காரணம் என்பது டோலிவுட் பாணி ட்விஸ்ட்.

“நாகார்ஜுன் என்றாலே தெலுங்கில் வசூல்ராஜா. அவர் நடித்த பெரும்பாலான படங்களில் காதலுக்கு முக்கியத்துவம் உண்டு. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் கூட ரொமான்ஸானதுதான். இப்போது அவரது மகன் நாகசைதன்யாவுக்கும் இதே இமேஜ் கிடைத்திருப்பது பெரிய ப்ளஸ். தெலுங்கில் வெற்றி கண்ட இப்படம், தமிழிலும் பெரும் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்கிறார் தயாரிப்பாளர் ஏ.என்.பாலாஜி.

- எஸ்ஸார்