நடிகர் திலகத்தின் பேரன்னா சும்மாவா?



‘வீர சிவாஜி’ சீக்ரட்ஸ்!

‘வீரசிவாஜி’யை தமிழர்கள் பார்த்ததில்லை. ஆனாலும், அந்தப் பெயரைக் கேட்டாலே சிலிர்க்கிறார்கள். காரணம், தமிழர்களின் பெருமை சிவாஜி கணேசன். பராசக்தி கணேசனை, சிவாஜி கணேசனாக்கிய பாத்திரமே வீரசிவாஜிதான். சிவாஜியின் பேரன் விக்ரம்பிரபு ஹீரோவாக நடிக்க ‘வீர சிவாஜி’ என்கிற டைட்டிலைவிட வேறென்ன பொருத்தமாக இருக்க முடியும்?

“ஒரு கதைக்கு எந்த மாதிரி நடிகர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், பட்ஜெட் தேவையோ, அது இருந்தாலே போதும். அப்படத்தின் பிரமாதமான வெற்றியை பூஜை போட்ட முதல் நாளிலேயே உறுதி செய்துவிடலாம். இதெல்லாம் சரியாக அமையாமல் ‘ஹைப்’ மூலமாக வெற்றிபெற நினைப்பது குறுக்குவழி. இந்த வழியில் போனால் எப்போதாவதுதான் இலக்கினை அடைய முடியும்” என்று தத்துவார்த்தமாக மோவாயைத் தடவிக்கொண்டே பேசத் தொடங்கினார் ‘வீரசிவாஜி’ படத்தின் இயக்குநர் கணேஷ் விநாயக்.

“‘வீரசிவாஜி’க்கு தேவையான எல்லாமே உங்களுக்கு அமைஞ்சிருக்கா?”

“தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் அப்போது ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார். அவரிடம் இந்த கதையை சொன்னேன். ‘நல்லாருக்கு. இந்தப் படம் ரிலீஸ் ஆனதுமே தொடங்கிடலாம்’னு சொன்னார். அந்தப் படம் மாபெரும் வெற்றியடைஞ்ச தெம்புலே இதை ஆரம்பிச்சிருக்கோம். ஹீரோ விக்ரம்பிரபு. ஜான்விஜய், யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘ரோபோ’ சங்கர்னு பெரிய பட்டாளம். கூடுதல் அட்ராக்‌ஷனா ‘பேபி’ ஷாம்லியை, முதன்முறையா ‘குமாரி’ ஷாம்லியா தமிழில் அறிமுகப்படுத்தறோம்.



படத்தோட ஒவ்வொரு பிரேமையும் முன்னாடியே பக்காவா மூளைக்குள்ளே ப்ளூப்ரிண்ட் போட்டுட்டேன். எந்த எந்த சீன் எப்படி எப்படி வரணும்னு சகாக்கள் கிட்டே சொன்னதுமே உற்சாகமா உயிரைக் கொடுத்து வேலை பார்க்குறாங்க. இந்தப் படத்தோட வெற்றியின் பெருமை எங்க யூனிட்டில் இருக்கிற எல்லாரையுமே சாரும். ரொம்ப சீக்கிரமா படத்தோட எண்பது சதவிகித படப்பிடிப்பை முடிச்சிட்டோம். இன்னும் கொஞ்சம் படமாக்க வேண்டியிருக்கு. மழையெல்லாம் முடிஞ்சதுமே முடிச்சிடுவோம்.”

“‘வீரசிவாஜி’ன்னு பிரும்மாண்டமா டைட்டில் வைக்க காரணம்?”

“நடிப்புலக இமயம் சிவாஜி சாரோட பேரன் நடிக்கிறாருங்கிற ஒரு காரணமே போதுமில்லையா? ஆனால், வேற காரணங்களும் இருக்கு. இப்பவே சொன்னா நல்லா இருக்காது. படம் பார்க்கிறப்போ ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் இருக்கணுங்கிறதுக்காக அந்த விஷயங்களை சொல்ல முடியலை. சாரி.”

“ஒன்லைனில் உங்க படத்தோட கதையை சொல்லுங்களேன்?”

“ஹீரோவுக்கும் ஒரு குழந்தைக்குமான பாசப்பிணைப்புதான் கதை. அதுக்காக சென்டிமென்டுலே ஒவ்வொரு சீனா நெஞ்சை நிறைக்கப்போறோம்னு இல்லை. பக்கா கமர்ஷியலா காதல், ஆக்‌ஷன், சென்டிமென்ட், காமெடின்னு எல்லாமே சரிவிகிதத்தில் கலந்த நல்லதொரு ஃபேமிலி என்டெர்டெயினரா இந்தப் படத்தை எடுத்திருக்கோம். எல்லா வயதினருக்குமான படமாகவும் இது இருக்கும். முன்னாடி பார்த்த எந்தப் படத்தின் சாயலும் இருக்காதுன்னு உறுதி கொடுக்கறேன்.”

“விக்ரம் பிரபுவுக்கும் உங்களுக்கும் கெமிஸ்ட்ரி எப்படி?”

“டான்ஸ் புரோகிராம் ஜட்ஜ் மாதிரி பேசுறீங்களே பாஸ்? ‘அன்னை இல்லம்’ வாரிசோட வேலை பார்க்குறப்போ இருமடங்கு பொறுப்பு ஜாஸ்தி ஆயிடுது. அவரும் அப்பா, தாத்தான்னு அவரோட குடும்ப பாரம்பரியத்தோட பெருமையை நிலைநிறுத்தணுங்கிற கடமையை மறக்காதவர். படத்துலே அவரோட கேரக்டருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து அழுத்தம் கொடுத்து நடிச்சிருக்காரு. நடனக் காட்சிகள்தான் அவரை பெண்டு நிமிர்த்திடிச்சி.

ஒருபோதும் சோர்வடையாம எத்தனை டேக் கேட்டாலும் எங்களுக்கு திருப்திவரும் வரைக்கும் ஆடினாரு. ஓப்பனிங் சாங் நல்லா பேசப்படும். படத்தின் பெரும்பகுதி வெளிப்புறப் படப்பிடிப்புதான். கேரவன் வசதிகூட வேணாம்னு சொல்லிட்டாரு. ஒரு ஹீரோங்கிற அந்தஸ்தை என்னைக்குமே வெளிக்காட்டிக்காம அசிஸ்டன்ட்  டைரக்டர் மாதிரி உழைக்கிறாரு. நடிகர் திலகத்தோட பேரன்னா சும்மாவா?”



“‘தல’யோட மச்சினிச்சி....”

“ஆமாங்க. எங்களாலே அவங்க தமிழில் அறிமுகமாகிறது எங்களுக்கு இன்னும் கூடுதல் பெருமை. அஜித்சாரின் ரசிகர்கள் ஷூட்டிங்குக்கு போற இடமெல்லாம் வந்து ரொம்ப அக்கறையா பேசுறாங்க. கதை ஷாமிலிக்கு பிடிச்சிருந்தது என்பதைவிட இந்தப் படத்தை அவங்க ஒப்புக்க வேற ஒரு ‘சீக்ரட்’டும் உண்டு. அது என்னன்னா விக்ரம்பிரபுவோட சிஸ்டரும், ஷாமிலியும் ஸ்கூல் பிரண்ட்ஸ். அதனாலே சின்ன வயசுலேருந்தே ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகமானவங்க. ஸோ, இவரு ஹீரோங்கிறதுனாலே எந்த தயக்கமும் இல்லாம ஒத்துக்கிட்டாங்க. பாண்டிச்சேரி கல்ச்சர் ஸ்டோரி என்பதால் மாடர்ன்லுக்கில் வருவாங்க. அஞ்சலி பாப்பாவா இவங்களை பார்த்தவங்களுக்கு அசத்தல் ஹீரோயினா பார்க்குறப்போ உற்சாகம் பிச்சிக்கும்.”

“மற்ற டெக்னீஷியன்ஸ்?”

“ஒளிப்பதிவாளர் சுகுமாரோட வேலையைப் பத்தி சொல்லவே வேண்டியதில்லை. விக்ரம் பிரபுவும் இசையமைப்பாளர் இமானும் ஏற்கனவே ஹிட் ஆன காம்பினேஷன்.”

- சுரேஷ்ராஜா