கமல் படத்தில் இளையராஜா!



‘அழகி’ படத்தில் நடித்திருந்த மாஸ்டர் சரவணன், இப்போது ‘விடாயுதம்’ என்ற படத்தில், ராம் சரவணன் என்ற பெயரில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

‘பஞ்சாமிர்தம்’ படத்தை தயாரித்த அபிராமி ராமநாதன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படம் தயாரிக்கிறார். இதில் ‘கயல்’ சந்திரன் ஹீரோவாக நடிக்கிறார். ஆர்.கே இயக்குகிறார்.

மலையாளம் மற்றும் தமிழில் டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் ‘அப்பா அம்மா விளையாட்டு’ என்ற படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜாவும் அவரோடு இணைகிறார்.



தமிழில் எஸ்.பி.ராஜகுமார் இயக்கத்தில், புதுமுகம் பரதன் ஜோடியாக ‘தூது’ படத்தில் நடித்தார், மலையாள நடிகை பாவனா என்கிற கார்த்திகா. சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில், பணப் பிரச்னை காரணமாக திடீரென்று ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. பிறகு மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படத்தில், நரேன் ஜோடியாக அறிமுகமானார் பாவனா. இன்றுவரை ‘தூது’ படம் ரிலீசாகவில்லை.

இசை அமைப்பாளர்கள் ஹீரோவாக நடிக்கும் சீசன் இது. விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார் வரிசையில் இப்போது தேவி பிரசாத் சேர்ந்துள்ளார். அவர் ஹீரோவாக அறிமுகமாகும் படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது. தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்க, தில் ராஜு தயாரிக்கிறார்.

- தேவராஜ்