உள்ளத்தில் நல்ல உள்ளம்



ஹீரோயினிஸம்

ஒரு பெண்ணுக்கு அழகு மட்டுமே இருந்தால் அவள் அழகி, அவ்வளவுதான். அழகுடன் கருணையும் இருந்தால் அவள் தேவதை. அப்படி ஒரு தேவதைதான் ஹன்சிகா. மும்பையில் இருந்து வந்திருக்கும் இந்த தேவதை நடித்திருக்கும் படங்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் அவரின் கருணை அதிகம். அவருக்கு நெருக்கமானவர்கள், அவரிடம் பணியாற்றுபவர்களிடம் கேட்டால் நிறைய சொல்வார்கள். வெள்ள நிவாரணத்துக்கு 15 லட்சத்தை அள்ளிக் கொடுத்தது, சாலையோரம் விபத்தில் சிக்கிக் கிடந்தவரை தன் காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தது என அவை சிறிதும் பெரிதுமாக நிறைய இருந்தாலும் அவரை நிஜ ஹீரோயினாக தனித்து காட்டும் அம்சம் அவர் 24 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதுதான். அைதவிட அவர்களை வளர்க்கும் விதம் இன்னும் பெரியது.



ஒரு ஆதரவற்ற இல்லத்தில் வளரும் குழந்தைகளில் 24 பேரின் செலவு என்னுடையது என்று சொல்லி அதற்காக சில லட்சங்களைக் கொடுத்து விட்டு ஹன்சிகா ஒதுங்கியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. தன் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் தானே தத்தெடுக்கிறார். தானே வளர்க்கிறார். தன் பராமரி–்ப்பில் வைத்திருக்கிறார். ஒவ்வொரு பிறந்த நாளையும் அவர்களுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார். ஆண்டுக்கு ஒரு முறை ஒரு வாரம் அவர்களை சுற்றுலா அழைத்துச் செல்கிறார். அவர்களில் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்றால் மும்பைக்கு ஓடோடிச் சென்று பார்க்கிறார். 24 வயதில் அவருக்குள் இருக்கும் புனிதமான தாய்மனது பூத்துக் குலுங்குகிறது. அதனாலேயே அவர் இன்னும் அழகாகத் தெரிகிறார்.

பொதுவாக நடிகைகள் தங்களின் சுய விளம்பரத்துக்காக, புகழுக்காக இப்படி சில காரியங்களைச் செய்வதுண்டு. ஆனால் ஹன்சிகாவை அந்த வட்டத்துக்குள் திணிக்கவே முடியாது. காரணம், அவர் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பது அவர் நடிகையான பிறகு அல்ல. அவர் பிறந்த காலத்திலிருந்தே. ஆம்... ஹன்சிகா பிறந்து அவரது முதல் பிறந்த நாள் வந்தபோது அவரது தாய் டாக்டர் மோனா ஒரு குழந்தையைத் தத்தெடுத்தார். இரண்டாவது பிறந்த நாளின் போது இரண்டாவது குழந்தையைத் தத்தெடுத்தார். இப்படி வளர்ந்து 24வது பிறந்த நாளில் 24வது குழந்தையைத் தத்தெடுத்தார்.



அம்மாவின் பராமரிப்பில் இருந்த குழந்தைகள் ஹன்சிகா சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து அவரது வருமானத்தில் பராமரிக்கப்பட்டார்கள். இப்போது ஹன்சிகாவின் குழந்தையாக மாறியிருக்கிறார்கள். “இதுவரை நான் சம்பாதித்த பணத்தில் என் குழந்தைகளுக்கென்று ஒரு இல்லம் கட்டுவதற்காக மும்பை புறநகரில் ஒரு இடம் வாங்கியிருக்கிறேன். அதில் அவர்களுக்கு இல்லம் கட்ட இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும். இல்லம் கட்டிய பிறகு நிறைய குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க வேண்டும். இதுதான் என் வாழ்க்கை லட்சியம்” என்கிறார் ஹன்சிகா. “16 வயதினிலே... 17 பிள்ளையம்மா தாலாட்டு பாடுகிறேன் தாயாக நான் நினைத்து...” என்று ஒரு சினிமா ஹீரோயினுக்கு எழுதிய பாடல் இந்த நிஜ ஹீரோயினுக்கும் பொருந்தும்.

-மீரான்