குண்டா இருப்பதுதான் அழகு!



ஹன்சிகா அசத்துகிறார்!

‘குட்டி குஷ்பூ’ என்று செல்லமாக கோலிவுட்டில் அழைக்கப்படுபவர் ஹன்சிகா. புசுபுசு கன்னம், மைதா மாவு சருமம், குழந்தைச் சிரிப்பென்று தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமாகி இன்று கோலிவுட், டோலிவுட் இரண்டிலுமே இவரது கொடி உயரப் பறக்கிறது.

தன்னைப் பற்றி ஹன்சிகாவே சொல்கிறார்:

“நாலாவது படிக்கும் காலத்தில் இருந்தே கேமரா எனக்கு பழக்கமாயிடுச்சு. எங்க குடும்பம் சினிமா துறையைச் சார்ந்த குடும்பம் கிடையாது. அம்மா சரும நிபுணர், அப்பா தொழிலதிபர், அண்ணன். இது தான் எங்க குடும்பம். எனக்கு எல்லாமே என் அம்மா தான். எனக்காகவே என் பள்ளி பக்கத்தில் அவங்க கிளினிக் இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டாங்க. பள்ளி முடிஞ்சதும் நேரா கிளினிக் வந்திடுவேன். நான் கொஞ்சம் துறுதுறு டைப். அதுனாலேயே கிளினிக் வரும் எல்லாருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். அப்படி விளையாடிக் கொண்டு இருக்கும் போது தான் அம்மாவின் தோழி அருணா இரானி ஆண்ட்டி என்னை நடிக்கச் சொல்லி அம்மாவிடம் கேட்டாங்க. அம்மா ஒரே வார்த்தையா  ‘அவ சின்னப் பொண்ணு. படிக்கட்டும். அப்புறமா பார்க்கலாம்’ன்னு சொல்லிட்டாங்க. ஆனா ஆண்ட்டி விடல, ஒரே ஒரு தடவை நடிக்கட்டும். பிடிக்கலைன்னா வேண்டாம்னு சொல்ல அம்மாவும் மனமிரங்கி சரின்னு சொன்னாங்க.



அப்படித்தான் 2003ம் ஆண்டு எனக்கு திரையுலகம் அறிமுகமாச்சு. ஏக்தா கபூர் தயாரிப்பில் ‘தேஷ் மே நிக்லா ஹோகா சாண்த்’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அதிலிருந்து 2004 வரை சினிமா, சீரியல், படிப்புன்னு வலம் வந்து கொண்டு இருந்த என் கால்கள் அதன்பின் படிப்பு பக்கம் மட்டுமே கவனம் செலுத்தியது. கிட்டத்தட்ட மூன்று வருடம். பன்னிரெண்டாவது, முடிக்கும் வரைதான் சினிமா உலகம் எனக்காக காத்துக் கொண்டு இருந்தது.

2007ம் ஆண்டு மறுபடியும் தெலுங்குப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அம்மா ரொம்பவே தயங்கினாங்க. காரணம், சினிமா ஒரு சமுத்திரம். அதில் மூழ்கி முத்து எடுப்பது கஷ்டமான விஷயம். ஆனா நான் மிகவும் தன்னம்பிக்கையோடு என்னால் செய்ய முடியும் என்பதில் உறுதியா இருந்தேன். என்னுடைய துணிச்சல் மற்றும் தைரியத்தைப் பார்த்து அம்மா தலை அசைக்க, முதல் தெலுங்குப் படமான பூரி ஜெகநாத் இயக்கத்தில் அல்லு அர்ஜுனுடன் ‘தேசமுதுரு’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. நான் எதிர்பார்க்காத அளவுக்கு படம் சூப்பர் ஹிட். அவ்வளவுதான், என் கையில் வரிசையா படங்கள் குவிய ஆரம்பிச்சது. ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் வலம் வந்தேன்.

கிசுகிசுவுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். முதலில் அதுக்கு எனக்கு நேரம் கிடையாது. ஷூட்டிங் இல்லாத நேரங்களில் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பிச்சுடுவேன். தேர்வு, நடிப்புன்னு எப்பவுமே என்னைச் சுற்றி எனக்கு நானே வேலைகளை அமைத்துக்கொவதால், கிசுகிசுவுக்கு இடமில்லை. வீட்டில் அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட். இரவு நேர பார்ட்டிக்கு எனக்கு தடா. அதனாலேயே பெரும்பாலும் கிசுகிசுவில் இருந்து தப்பித்து விடுகிறேன்.

பாலிவுட்டில் அறிமுகம் ஆனாலும், இப்ப நான் முழுக்க முழுக்க தென்னிந்தியப் பெண். கோலிவுட் சினிமாவில்தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன். சென்னை வாசம், இந்த ஊர் மக்கள், உணவு எல்லாமே எனக்கு பிடிச்சு இருக்கு. இங்கு படம் தயாரிக்கும் நேர்த்தி மிகவும் சுவாரஸ்யமா  இருக்கு. பாலிவுட்டை பார்க்கும் போது கோலிவுட்டில் ஒரு படத்தை குறிப்பிட்ட நாட்களில் சீக்கிரமா  முடிச்சிடுவாங்க. அது எனக்கு பிடிச்சிருக்கு.



சின்ன வயசில் இருந்தே எனக்கு இளகிய மனசு. யாராவது கஷ்டப்படுவதைப் பார்த்தால் என்னை அறியாமல் கண்கள் கலங்கிடும். எங்க வீட்டில் எல்லா விசேஷத்துக்கும் அனாதை ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுடன் கழிப்பது வழக்கம். ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாளை அங்குதான் குழந்தைகளுடன் கொண்டாடுவேன். அந்த உந்துதல்தான் என்னை குழந்தைகளைத் தத்து எடுக்கத் தூண்டியது. மும்பையில் உள்ள வசதியில்லாத குழந்தைகளில் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகளைத் தத்து எடுத்து இருக்கேன்.

இவங்க படிப்பு செலவு எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். அது மட்டும் இல்லாமல், பண்டிகை நாட்களில் உடை மற்றும் சுற்றுலாவும் அழைத்துச் செல்கிறேன். எனக்கு நேரம் கிடைக்கும் போது அவர்களை வெளியே அழைத்துச் செல்வது வழக்கம். தீபாவளியின்போது என் வீட்டுக்கு வந்து பட்டாசு வெடிப்பாங்க. புத்தாடை, பட்டாசு எல்லாம் நிறைய வாங்கித் தருவேன். அதைப் பார்த்து அவங்க முகத்தில் பெருகும் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. என்னுடைய கனவு பெரிய அளவில் சகல வசதியுடன் முதியோர் இல்லம் ஒன்றைக் கட்ட வேண்டும் என்பது தான். கூடிய விரைவில் கட்டுவேன்.

நடிகை என்ற அரிதாரம் பூசப்பட்ட வாழ்க்கை, வயது உள்ளவரை மட்டும்தான். அதனால் நடிக்கும் காலத்திலேயே ஒரு புரொடக்‌ஷன் நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம். இதற்காக நானும் அண்ணனும் அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க இருக்கோம். நிறுவனத்தை அண்ணன் பார்த்துக் கொள்வார். நான் நடிப்பேன். நடிக்கும் காலம் முடிந்த பிறகு நானும் அண்ணனும் சேர்ந்து இந்தத் தொழிலில் இறங்கிவிடுவோம். ஜீரோ சைஸ் என்று ஒன்றுமே கிடையாது. உடலில் அதிக கொழுப்பு இல்லாமல் அழகாக இருந்தாலே போதும். ஆரம்பத்தில் கொழுக் மொழுக் என்று இருந்தேன். அந்த எக்ஸ்ட்ரா சதைகளை குறைத்துவிட்டேன். அவ்வளவுதான். என்னைப் பொறுத்தவரை ரொம்ப ஒல்லியாக இருந்தால் நன்றாக இருக்காது. பூசினாற் போல் இருக்க வேண்டும். அதுதான் அழகு.”

- ப்ரியா