ரீடர்ஸ் கிளாப்ஸ்!
லாரன்ஸின் நல்ல மனம் வாழ்க!
கரடுமுரடான தோல் கொண்ட பலாவில்தான் அவ்வளவு இனிப்பான சுளைகள் இருக்கின்றன. தோற்றம் ஒரு மாதிரியாக இருந்தாலும், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ரொம்ப நல்லவர் போலிருக்கு. அவர் குறித்த கட்டுரை எங்களுக்கு தீபாவளி போனஸ் மாதிரி மகிழ்ச்சியை அளித்தது. - எம்.அம்பாபாய், வில்லிவாக்கம்
கயல் ஆனந்திக்கு லவ்வு வந்தா சொல்லி அனுப்பறேன் என்று தில்லாக சொல்லுகிறாரே! சொல்லி அனுப்பினால் எங்களுக்கும் சொல்லவும். - ஆனந்தகுமார், திருப்பூர்
எல்லோருக்கும் பிரியாணி போட்டுவிட்டு, தமன்னாவுக்கு மட்டும் அல்வா என்பது ஆர்யா செய்யும் துரோகம். அதனால்தான், ஆர்யாவுக்கே நயன்தாரா அல்வா கொடுத்தார் போலிருக்கிறது. - மகேஸ்வரன், வத்தலக்குண்டு
பளார் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பத்மப்ரியா பாராட்டுக்கு உரியவர். ‘ஹீரோயினிஸம்’ பகுதியில், நம்ம நடிகைகளின் ஆக்ஷன் காட்சிகளை நிறைய எதிர்பார்க்கிறோம். - செல்வி, திருப்பதி
லாரன்சுக்கு கல்யாணம் ஆகி, ப்ளஸ் ஒன் படிக்கும் மகள் இருக்கிறாள் என்கிற செய்தி அதிர்ச்சியான ஆச்சரியம். அவரை பேச் சுலர் என்றுதான் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை சமூகத்துக்கு ஒதுக்கும் அவரது நல்ல மனம் வாழ்க. - ஜோசப், இளையான்குடி
‘சமரசம் உலாவும் இடமே’ என்கிற காலத்தால் அழியாத பாடலைக் கொடுத்த இசைக்கலைஞர் டி.ஆர்.பாப்பா என்றும் எங்கள் மனதில் வாழ்வார். - மும்தாஜ், புதுச்சேரி
திரிஷா, அதற்குள்ளாக 50 படம் நடித்துவிட்டாரா? ஈமெயிலில் கதை படித்து ஓக்கே செய்கிறார் என்பது புதிய செய்தி. - வருண், கோவை.
|