பாட்டு நூல் நெய்த பஞ்சு!



காரைக்குடி சிறுகூடல்பட்டியில் பிறந்த பஞ்சு அருணாசலம், கவியரசு கண்ணதாசனின் அண்ணன் கண்ணப்பனின் மகன். வசதிமிகு சொந்தங்களுக்கு மத்தியில் ஏழ்மையில் வசிக்கிறோமே என்ற ஏக்கம் இளமையிலேயே இவருக்கு இருந்தது. சித்தப்பா ஏ.எல்.சீனிவாசன் ஆதரவில் பரணி ஸ்டுடியோ நிர்வாகத்தில் பஞ்சுவின் சினிமாப்பயணம் தொடங்கியது. கண்ணதாசன் நடத்திய தென்றல் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்து எழுத்துப்பணி தொடங்கியது. 




பாடல் எழுதும் பணியில் கண்ணதாசனுக்கு உதவியாளராக இருந்தபோது சினிமாவைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. இயக்குநர்கள் கதை மற்றும் சூழல்களை எப்படிச் சொல்கிறார்கள்? ஒவ்வொரு இயக்குநருக்கும் கதைசொல்லும் பாங்கு எப்படி வேறுபடுகிறது என்பதையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்த பஞ்சுவுக்கு கதை எழுதுவதும் பாட்டுப்புனைவதும் எளிதாகக் கைவந்தது. கண்ணதாசன் எழுதமுடியாத சூழலில், தயாரிப்பாளர்களும் இசையமைப்பாளர்களும் பஞ்சுவை நாடினார்கள். 1960ஆம் ஆண்டு, ஜி.கே.வெங்கடேஷ் இசையில் வெளிவந்த ‘நானும் மனிதன்தான்’ படத்தில் ‘நானும் மனிதன்தானடா…’ என்ற பாடல் மூலம் பாட்டுச்சாலையில் பயணத்தைத் தொடங்கினார் பஞ்சு. 1961ல் வெளிவந்த சாரதா படம் இவரது பாட்டுத்திறனை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது. அந்தப்படத்தில் இவர் எழுதிய ‘மணமகளே மருமகளே வா வா…’ பாடல், திருமண வீடுகளில் இன்றும் கொண்டாடப்படுகின்றது. இந்தப்பாடல் ஒலிபெருக்கியில் ஒலிக்கிறதென்றால், மணப்பெண்னை அழைத்துக்கொண்டு வருகிறார்கள் என்பதை ஊரே தெரிந்துகொள்ளும்.

  

‘கலங்கரை விளக்கம்’ படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.சுசீலா குரலில் ‘என்னை மறந்ததேன் தென்றலே…’, டி.எம்.எஸ்-சுசீலா குரலில் பூத்த ‘பொன்னெழில் பூத்தது புதுவானில்…’ பாடல்கள் பஞ்சுவுக்குப் புகழ் சேர்த்தன. ‘குங்குமம்’ படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் ஒலித்த ‘குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்’,டி.எம்.எஸ் குரலில் வந்த  ‘சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா…’ பாடல்களும் இவரது பாட்டுப்புலமையைப் பறைசாற்றின.  ‘அவர் எனக்கே சொந்தம்’ படத்தில் வந்த ‘சுராங்கனி சுராங்கனி…’ பாடல் இன்றைய கானா பாடல்களுக்கெல்லாம் வாத்தியாராக அமைந்தது.
 


‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இளையராஜாவுக்கு இசையமைப்பாளர் இருக்கையைப் போட்டுத்தந்தவர் இவர்தான். இளையராஜாவுக்கான முதல் சம்பளம் 3001 ரூபாயை இவர்தான் வழங்கினார். அந்தப்படத்தில் இவர் எழுதிய ‘அன்னக்கிளி உன்னத்தேடுதே…’மற்றும் ‘மச்சானப் பாத்தீங்களா…’ பாடல்கள் பாட்டு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவை.  இதுவரை 100 படங்களில் பணியாற்றியிருக்கும் பஞ்சு, இளையராஜாவுடன் 86 படங்களில் இணைந்திருக்கிறார். ‘காதலின் தீபமொன்று…’,  ‘கண்மணியே காதல் என்பது…’,   ‘ஆயிரம் மலர்களே…’, ‘ஜெர்மனியின் செந்தேன் மலரே…’,  ‘பேசக்கூடாது…’, ‘என்னுயிர் நீதானே…’, ‘ஹேய் பாடல் ஒன்று…’,

‘எந்தப்பூவிலும் வாசம் உண்டு…’, ‘சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…’, ‘தெய்வீக ராகம் திகட்டாத பாடல்…’, ‘சின்னக்கண்ணன் அழைக்கிறான்…’, ‘பருவமே புதிய பாடல் பாடு…’ ‘அண்னன் என்ன தம்பி என்ன…’, ‘கவியே கவிக்குயிலே…’, ‘ஒரு வானவில் போலே…’, ‘ஆசை நூறுவகை…’, ‘மாசிமாசம் ஆளான பொண்ணு…’ ‘கொஞ்சிக்கொஞ்சி அலைகள் ஆட…’ ‘காலைப்பனியில் ஆடும் மலர்கள்…’,, ‘வாழ்வே மாயமா…’ என பஞ்சு அருணாசலம் எழுதிய அத்தனை பாடல்களிலும் எளிமையான வார்த்தைகளால் நெய்யப்பட்ட வலிமையான வரிகள் இருக்கின்றன. கமல் நடித்த ‘கடல்மீன்கள்’ படத்தில் ‘தாலாட்டுதே வானம்…’ என்று இதயங்களை உலுக்கிய பஞ்சு,  ‘மதினி மதினி மச்சான் இல்லையா…’ என்று இளசுகளை உசுப்பிவிட்டு கவிமணம் சேர்த்தார். ‘மதினி மதினி’ தணிக்கைத்துறையின் கெடுபிடியால் ‘மயிலே மயிலே’ என்று மாற்றியமைக்கப்பட்டது.

வில்லனாக நடித்துவந்த ரஜினிகாந்துக்கு நாயக நாற்காலியைக் கொடுத்த படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’. அந்தப்படத்துக்கு திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதினார் பஞ்சு. ‘விழியிலே மலர்ந்தது…’, ‘ராஜா என்பார் மந்திரி என்பார்…’ உள்ளிட்ட பாடல்கள் படத்துக்குப் பெருமை சேர்த்தன. ‘ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘கல்யாணராமன்’, ‘மைக்கேல் மதனகாமராஜன்’, ‘வீரா’, ‘சொல்ல மறந்த கதை’ ஆகியவை பஞ்சு தயாரித்த பட வரிசையில் பேரளவில் பிரகாசித்தவை. ‘நாடகமே உலகம்’, ‘மணமகளே வா வா’ உள்ளிட்ட பத்துப்படங்களை இயக்கியிருக்கிறார் பஞ்சு. ‘கன்னித்தாய்’, ‘ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘கல்யாணராமன்’, ‘கவரிமான்’, ‘சிங்கார வேலன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘முரட்டுக்காளை’, ‘சகலகலா வல்லவன்’, ‘தம்பிக்கு எந்த ஊரு’ ‘பாயும் புலி’, ‘போக்கிரி ராஜா’ஆகிய படங்கள் பஞ்சு அருணாசலத்தின் கதாசிரிய ஆளுமைக்கு உதாரணமாக இருப்பவை. கதாசிரியர், படத்தயாரிப்பாளர் என்று அறியப்பட்ட பஞ்சு அருணாசலத்தின் பாட்டுச்சாலையில் பயணம் செய்து பார்த்தால், பல இனிய உணர்வுகளை உள்வாங்கிக்கொள்ள முடியும்.

அடுத்த இதழில் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன்