அதுக்கு ஆர்யாதான் காரணம்! தீபா சன்னிதி குற்றச்சாட்டு!



கன்னடத்தில் ‘லூசியா’ என்கிற மரண ஹிட்டுக்குப் பிறகு, அதன் தமிழ் வடிவமான ‘எனக்குள் ஒருவன்’ மூலம் தமிழில் வலதுகாலை எடுத்துவைத்து நுழைந்தார் தீபா சன்னிதி. இப்போது ஆர்யாவோடு ‘யட்சன்’. படத்தின் புரமோஷன் பணிகளுக்காக பெங்களூரில் இருந்து பறந்து வந்திருந்த கிளியிடம் கொஞ்சநேரம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தோம்.

“உங்க பேரே மங்களகரமா இருக்கே?”

“வீட்டில் வெச்ச பேரு ரஸ்யா. சினிமாவில் ஏற்கனவே ரகசியாவெல்லாம் இருக்குறதாலே, பெயர் குழப்பத்தை தவிர்க்க இந்த பேருக்கு மாறினேன்.”

“தமிழில் முன்னணிக்கு வர என்ன டெக்னிக் வெச்சிருக்கீங்க?”

“கன்னடத்தில் அரை டஜன் படங்கள் ஹிட் கொடுத்துட்டுதான் இங்கே வந்திருக்கேன். நல்ல கதை, ‘நல்ல கேரக்டர், நல்ல ஹீரோ என்று எல்லாமே ‘நல்ல’ன்னு இருந்தா நல்லதே நடக்கும். இது எல்லாமே நல்லா அமைய நல்ல இயக்குனர்தான் அடிப்படை. எனவே எதைப்பற்றியும் குழப்பிக்காமே இயக்குனர்களைத்தான் நான் நம்புவேன். நான் ஒப்புக்கற படத்தோட இயக்குனர்கள் நிச்சயம் வெற்றியைத்தான் கொடுப்பார்கள்னு அப்படி ஒரு நம்பிக்கை. இதுதான் என்னோட சீக்ரட் ஃபார்முலா.”



“தமிழில் ‘எனக்குள் ஒருவன்’ சரியாகப் போகலை. இருந்தாலும் ‘யட்சன்’ படத்தோட வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சிருக்கு...”

“அதுக்கும் காரணம் ‘எனக்குள் ஒருவன்’தான். அந்தப் படத்தைப் பார்த்துட்டுதான் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் என்னை கான்டாக்ட் பண்ணாரு. நம்மகிட்டே டெடிகேஷன் இருந்தா, அது எல்லாரையும் நாமறியாமலேயே ஈர்க்கும். தமிழில் என் முதல் படம் சரியாகப் போகலை. ஒப்புக்கறேன். ஆனால் அதில் என்னோட உழைப்பும், அர்ப்பணிப்பும் இருந்தது. அது நல்லா வெளியே தெரிஞ்சது. அதனால்தான் இப்படியொரு அருமையான டீமோடு இப்போ வேலை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.”

‘யட்சன்’ படத்தில் என்ன கேரக்டர்?”

“என்னோட கேரக்டர் சூப்பருன்னுலாம் பில்டப் தரமாட்டேன். ஆனா மற்ற கேரக்டர்களைவிட அழுத்தமானது. ஆர்யா லோக்கலான ஆளா நடிச்சிருக்காரு. அவரும் நானும் கிட்டத்தட்ட ஒரே உயரம். எங்க ஜோடிப்பொருத்தம் பக்கா.”

“வாவ்! ஆர்யாவுக்கு அடுத்த கேர்ள்ஃபிரண்டா?”

“பொண்ணுங்களுக்கு பிரியாணி கொடுத்து மடக்குவாரு, தமன்னாவுக்கு மட்டும் அல்வான்னு கொஞ்சநாள் முன்னாடி ‘வண்ணத்திரை’யில் கூட எழுதியிருந்தீங்க. என் விஷயத்தில் அப்படியெல்லாம் எதுவும் நடக்கலை. அவரோட நடிச்சது சிறந்த அனுபவம். பார்க்கத்தான் ஜாலிடைப். ஷாட் வந்தாச்சின்னா சின்சியரா இருப்பாரு. அதுக்காகவே அவரை டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு எனக்கான சீன்களில் மூழ்கிடுவேன். பழகுவதற்கு ரொம்ப எளிமையான இனிமையான மனிதர். ‘சாப்பிட்டீங்களா?’, ‘நல்லா இருக்கீங்களா?’ மாதிரி ஓரிரு வார்த்தைகள் இப்போ தமிழில் பேசுறேன்னா, அதுக்கு ஆர்யாதான் காரணம்.”

“திடீரென்று ஆர்யா, உங்களைக் காதலிப்பதாகச் சொன்னால் என்ன சொல்வீர்கள்?”

“அப்படி ஏதாவது நடந்தால் உங்களிடம் சொல்லமாட்டேன். மூடி மறைக்கத்தான் பார்ப்பேன். இதுக்கெல்லாம் அவருக்கும் டயம் இல்லை, எனக்கும் டயம் இல்லை. இப்போதான் தமிழுக்கே வந்திருக்கேன். சிவகார்த்திகேயனில் தொடங்கி ரஜினிவரை நிறைய பேரோடு நடிக்கணும். ஆளை விடுங்க சாமி.”

“புது ஹீரோயின் என்றாலே கிசுகிசு வந்துடுது. உங்களையும் இயக்குனர் விஷ்ணுவர்த்தனையும் இணைச்சிக் கூட....”

“ஏற்கனவே சொன்ன பதில்தான். சினிமாவுக்கு நான் நடிக்க வந்திருக்கேன். காதலிக்க அல்ல. நல்ல நடிகைன்னு பேரு வாங்குறதுலேதான் என்னோட முழு கவனமும் இருக்கும்.”

“தீபா சன்னிதியோட ஸ்பெஷல் என்ன?”

“டான்ஸ். ரொம்ப பிடிச்ச விஷயமும் இதுதான். ‘யட்சன்’ படத்துலே ஆர்யா, கிருஷ்ணா, ஸ்வாதின்னு ஃபுல் டீமோட கலக்கலா ஒரு டான்ஸ் பண்ணியிருக்கேன். ஸ்பாட்டில் மாஸ்டர் என்ன சொல்லிக் கொடுக்கிறாரோ, அதை அப்படியே கேட்ச் பண்ணி ஆடுவேன். டோட்டல் யூனிட்டும் என்னோட டேன்சுக்கு நல்லா ரெஸ்பான்ஸ் பண்ணியிருக்காங்க. படம் பார்க்குற ரசிகர்கள் என்ன சொல்வாங்களோன்னுதான் டென்ஷனா நகம் கடிச்சிக்கிட்டு இருக்கேன்.”

“ஸ்டில்ஸில் பார்த்தால் உங்க டிரெஸ் எல்லாம் பளிச்சின்னு இருக்கு...”

“எனக்கு ஜீன்ஸ் டீ-ஷர்ட், சல்வார் அணிந்தாலும் நல்லாதான் இருக்கும். ‘யட்சன்’ படத்துலே என்னுடைய உடைகளை வடிவமைச்சது காஸ்ட்யூமர் அனுவர்த்தன். அவங்களோட கிரியேட்டிவ்வான ஐடியாக்களால்தான் தீபா ‘யட்சனில்’ ரொம்ப அழகா தெரியறா. சினிமா விழாக்களுக்கு வரும்போது கவர்ச்சியா டிரெஸ் பண்ணிக்கிட்டு வந்தாதான் போட்டோகிராபர்கள் படம் புடிக்கிறாங்க. அதனாலே இந்த மாதிரி விழாக்களுக்கு ஆபாசம் எட்டிப்பார்க்காத லெவலில் கவர்ச்சியான உடைகளைத் தேர்ந்தெடுப்பேன்.”

“விவசாயம் படிச்சிருக்கீங்களாமே?”

“ஆமாம். சிக்மகளூரில் பிறந்து வளர்ந்தேன். படிச்சது பெங்களூரு. அக்ரிகல்ச்சர் படிக்கிறப்போதான் ‘சாரதி’ என்கிற கன்னடப் படத்துலே நடிக்க கூப்பிட்டாங்க. ரொம்ப ஷார்ட் பீரியடில் புனீத் உள்ளிட்ட கன்னடத்தின் முன்னணி ஹீரோக்களோடு நடிக்க வாய்ப்பு அமைஞ்சது. கன்னட சினிமாதான் என் எதிர்காலம்னு நெனைச்சுக்கிட்டு இருந்தப்போ தமிழ் வாய்ப்புகளும் கதவைத் தட்டுச்சி. கேட்காமலேயே எல்லாம் கிடைக்குதுங்கிறப்போ கிடைக்கிற மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.”

-சுரேஷ்ராஜா