மறுபடியும் மனிஷா கொய்ராலா!



ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவங்களை அப்படியே மசாலா தடவி சூடாக சுவையாக பரிமாறுவதில் கில்லாடி இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ். ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை பாத்திரங்களாக்கி ‘குப்பி’, வீரப்பன் கதையை வைத்து ‘வனயுத்தம்’ என்று தமிழில் கவனம் ஈர்த்தவர், இப்போது ‘ஒரு மெல்லிய கோடு’ மூலம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்த வந்திருக்கிறார். இந்தப் படத்தில் அர்ஜுன், ஷாம் ஆகியோரோடு இவரும் சேர்ந்து நடித்து இயக்கி வருகிறார். அவருடன் பேசியபோது...

“முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை நீங்கள் எடுப்பதாக வெளியில் பேச்சு!”

“அது உண்மையா என்பதை படம் வெளிவந்தபிறகு தெரிஞ்சுக்கங்க. அதற்காக இது கற்பனைக் கதைன்னுலாம் அடிச்சிவிட மாட்டேன். சில நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைச்சிருக்கேன். ‘ஒரு மெல்லிய கோடு’, மர்டர் மிஸ்டரி வகையிலான படம்.”

“தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு!”


“நல்லதுக்கும் கெட்டதுக்கும் நடுவிலே ஒரு கோடு இருக்கு இல்லையா? அந்த கோட்டுலே ஒரு கொலை விழுது. இந்த கொலைக்கு சாதகமும் இருக்கு, பாதகமும் இருக்கு. இரு பக்கத்தையும் படம் அலசும்.”



“மறுபடியும், அர்ஜுன்?”

“‘வனயுத்தம்’ படத்துக்குப் பிறகு அவரோடு நான் இணையும் இரண்டாவது படம். அவர் மிகச்சிறந்த நடிகர் மட்டுமல்ல. நல்ல இயக்குனரும் கூட. நடிகர் அர்ஜுனின் பங்களிப்பு என் படங்களில் எவ்வளவு இருக்கோ, அதே அளவுக்கு இயக்குனர் அர்ஜுனின் பங்களிப்பும் எனக்கு உபயோகமா இருக்கு.”

“ரொம்ப வருஷம் கழிச்சி, மனிஷா கொய்ராலாவை கண்ணுலே காட்டறீங்க போலிருக்கு.”

“மாயான்னு ஒரு பணக்காரப் பெண் வேடம். அவர்தான் நான் நினைச்ச தோற்றத்துக்கு ஒத்து வந்தார். படத்துலே ஷாமோட ஜோடி. நான் இந்தப் படத்தோட கதையை அவருக்கு சொன்ன சமயத்தில், ஓர் இந்திப் படத்தோட கதையை ஏற்கனவே ஓக்கே பண்ணி வெச்சிருந்தார். புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்திருக்கும் அவங்களுக்கு தன்னுடைய ரீ - என்ட்ரி ரொம்ப அழுத்தமா இருக்கணும்னு எண்ணம். அதுக்காக என்னோட ஸ்க்ரிப்டை செலக்ட் பண்ணியிருக்காங்க. ரொம்ப சந்தோஷம்”

“உங்களுக்கும் நடிப்பு ஆசை இருக்கு போலிருக்கே?”


“‘வனயுத்தம்’ படத்துலே வீரப்பனோட ரைட்ஹேண்டா நடிச்சிருந்தேன். அதுலே நான் நல்லா நடிச்சிருந்ததாதான் எல்லாரும் சொல்றாங்க. இந்தப் படத்துலே ஒரு ஏ.சி.பி. கேரக்டருக்கு ஆள் தேடிக்கிட்டிருந்தப்போ, என்னோட சகாக்கள், ‘நீங்கதான் நல்லா நடிக்கறீங்களே, நீங்களே ஏன் ட்ரை பண்ணக்கூடாது’ன்னு கேட்டாங்க. அவங்க ஆசையை கெடுப்பானேன்னு நடிச்சிட்டேன்.”

“இளையராஜா இசை?”

“கதையை எழுதி முடிச்சதுமே முதலில் அவர் முன்னாடிதான் போய் நின்னேன். கதையைக் கேட்டுட்டு மறுநாளே கேட்டதுமே காதுலே தேன் பாயுற மாதிரி அருமையான மூன்று ட்யூன்களை போட்டுக் கொடுத்தார். முழுப்படத்தையும் முடிச்சி அவர் கிட்டே போட்டுக் காட்டினதுமே ரொம்ப உற்சாகம் ஆகிட்டார். விஷுவல் ரொம்ப கிராண்டியரா வந்திருக்குன்னாரு. ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தை ஏகத்துக்கும் பாராட்டித் தள்ளிட்டார்.”

“நிஜ சம்பவங்களை மையப்படுத்திய உங்க முந்தைய படங்களில் இருந்து இந்தப் படம் எப்படி மாறுபடும்?”

“இந்தப் படத்துலே பாட்டுலாம் இருக்கு சார். முன்னாடிலாம் பாட்டே இருக்காது. அதுலே எல்லாம் கதைக்கு அட்ஜஸ்ட்மென்டே இல்லாம ரொம்ப கறாரா இருக்கும். இந்தப் படத்துலே சுதந்திரமா இயங்கியிருக்கேன். பக்கா கமர்ஷியல் சினிமாவா எடுத்திருக்கேன்.”

“ஏன் தொடர்ச்சியா உண்மைச் சம்பவங்களையே படமாக்குறீங்க? ஏதாவது ஸ்பெஷல் ரீசன்?”

“அந்த ஏரியாவுலே நான் கொஞ்சம் ஃபேமஸ் ஆயிட்டேன். அதனாலே கொஞ்ச நாளைக்கு அதே ரூட்டுலேயே பயணிக்கலாம்னு ஆசை.”

“அடுத்து?”

“ராஜீவ் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குற திட்டமிருக்கு. அதுக்குப் பிறகும் சில கதைகளை செலக்ட் பண்ணியிருக்கேன். எல்லாத்தையும் இப்பவே சொல்லிட்டா, அறிவிக்கறப்போ உங்களுக்கு பெப் இருக்காது. இப்போதைக்கு ‘ஒரு மெல்லிய கோடு’ ரிலீஸில்தான் மொத்த உழைப்பையும் கொட்டிக்கிட்டிருக்கேன்.”

“சசிதரூரோட லைஃப்தான் இந்தப் படமான்னு குஷ்பூ கேட்டிருக்காங்களே?”


“பார்த்தீங்களா, மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுது. நோ கமெண்ட்ஸ். படம் வந்தப்புறம் பார்த்துட்டு நீங்களே யாரோட லைஃபுன்னு எனக்கு போன் பண்ணிச் சொல்லுங்க. தெரிஞ்சுக்கறேன்.”

-சுரேஷ் ராஜா