ராகிகீர்
தேவையான பொருட்கள் ராகி கால்கிலோ, தேங்காய்ப்பால் 2 கப், வெல்லம் கால்கிலோ, ஏலக்காய்ப் பொடி சிறிதளவு. பொடியாக நறுக்கப்பட்ட பாதாம், முந்திரி கால் கப். நெய் சிறிதளவு.
செய்முறை
ராகியை 12 மணி நேரம் ஊறவைக்கவும். அது நன்கு ஊறியபின்பு அதிலிருந்து தண்ணீரை வடிக்கவேண்டும். மிக்ஸியில் ராகியைப் போட்டு தண்ணீர் ஊற்றாமல் ஒரு நிமிடம் அரைக்கவும். அதன் பின்பு தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்க்கவும். முதலில் தண்ணீர் சேர்த்தால் ராகி மிக்ஸியில் அரைபடாது. நன்கு அரைத்தபின்பு ஒரு துணியில் அரைத்த கலவையை ஊற்றி ராகிப்பால் எடுக்கவும்.
எடுத்த கலவையை மீண்டும் ஒருமுறை தண்ணீர் சேர்ந்து இரண்டாம் முறையாக பால் எடுக்க வேண்டும். கால்கிலோ ராகியை அரைத்து மொத்தம் 5 கப் பால் வரும்படி எடுத்துக் கொள்ளவும். வாய் அகன்ற பாத்திரத்தில் அரைத்த பால் முழுவதையும் சேர்த்து அதனுடன் சரி பங்கு தண்ணீர் சேர்த்து கைவிடாமல் கிளறவும். வெல்லத்தை சிறிது தண்ணீரை ஊற்றி கரையவைத்து வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். சுமார் 15 நிமிடம் கழிந்த பின்பு எடுத்துவைக்கப்பட்ட வெல்லப்பாகை ராகி கீருடன் சேர்க்கவும்.
அடுப்பை மிதமான வெப்பத்தில் வைத்துக் கொண்டு இரண்டு விநாடிகளில் இரண்டையும் ஒரு சேர கலக்கவும். பின்பு தேங்காய்ப் பால் ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும். சிறிதளவு நெய் ஊற்றி நறுக்கிய பாதாம் முந்திரியை வறுத்து, கீருடன் சேர்க்கவும். சுவையான சத்தான ராகி கீர் ரெடி. இதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ச்சியாக பருகினால் இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும்.
|