நில்.. கவனி... சருமம்



பெண்களின் மிகப் பெரிய பிரச்னை முடி கொட்டுதல், பருக்கள் மற்றும் முகத்தில் முடி வளர்வது என அவர்களுக்கான சருமப் பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எந்த வித சருமப் பிரச்னையாக இருந்தாலும் அதற்கான தீர்வுண்டு. அதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் தீர்வு குறித்து விவரிக்கிறார், கோவையை சேர்ந்த அழகியல் மற்றும் சரும நிபுணர் அபிராமி.
‘‘முடி கொட்டுதல் பொதுவாகவே பலருக்கும் பெரிய பிரச்னையாக  உள்ளது. ஆண்களுக்கு இந்த பிரச்னையால் அவர்களின் தலையின் இரு ஓரங்களில் இருந்து முடி கொட்ட தொடங்கும். கொஞ்ச கொஞ்சமாக தலையின் நடுப்பகுதியில் இருக்கும் முடி கொட்ட  ஆரம்பிக்கும். அதே போல் பெண்களுக்கும் நேர் வகிடு எடுக்கும் இடத்தில் முடி கொட்டும்.

அது அப்படியே படிப்படியாக தலையின் நடுப்பகுதியில் உள்ள முடிகள் உதிர ஆரம்பிக்கும். முன்னர் சீப்பு போடும் போது வகிடு பகுதியில் இருந்த இடைவேளை நாளுக்கு நாள் அதிகரித்து, ஒரு கட்டத்தில், முடியின் அளவு அடர்த்தியை இழக்க ஆரம்பிக்கும். இந்த மாதிரி முடி சம்பந்தமான பல பிரச்சனைகள் இருக்கிறது. இதற்கு பலர் தாங்கள் பயன்படுத்தும் ஷாம்புகளால்தான் முடி கொட்டுகிறது என்று நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறானது. அதே போல இயல்பாக முடி கொட்டுவதையும் நினைத்து பயப்படுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக  பல பெண்களுக்கு குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது முடி கொட்டும், கொரோனா, டைபாய்டு பாதிப்பு ஏற்பட்டால் முடி உதிரும். சிலருக்கு முடி வளரும் போது வலுவற்ற முடிகள் உதிரும். இவையெல்லாம் இயல்பாக முடி கொட்டுவதற்கான காரணங்கள். இதில் கொரோனா அல்லது டைபாய்டு போன்ற காய்ச்சல் வந்தவர்களுக்கு ஏழு மாதங்களில் திரும்பவும் முடி வளர ஆரம்பிக்கும். அப்படி இல்லாமல் கொட்டிய முடி வருடக் கணக்கில் வளராத நிலை ஏற்பட்டால் தான் சிகிச்சை எடுக்க வேண்டி வரும். மருத்துவ துறை வளர்ந்து வருவதால், முடி சார்ந்த சிகிச்சைகளும் அவரவர் பிரச்னைக்கு ஏற்ப உள்ளது.

அதில் முதலாவது Regrowth Theraphy. முடி அடர்த்தியாக இல்லை என்றாலும் குறைவாக முடி உள்ளது என்றாலும் இந்த சிகிச்சையின் மூலம் சரி செய்ய முடியும். அதே போல முடி கொட்டுவது அதிகமாகவும், வழுக்கையாகவும் இருந்தால் முடி மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் சரி செய்து விடலாம். 23 வயதிற்கு பிறகே இந்த முடி மாற்று அறுவை சிகிச்சையை செய்ய முடியும். பெண்களுக்கு முடி மாற்று அறுவை சிகிச்சை செய்யும் போது  தலையின் பின் பகுதியில் இருக்கும் முடியை லேசாக டிரிம் செய்து எடுத்து முடி இல்லாத இடத்தில் வைத்து விடுவோம்.

அப்படி முடி எடுப்பதும் வெளியே தெரியாது. ஆண்களுக்கு முடி மாற்று அறுவை சிகிச்சையின் போது அவர்களுடைய தாடியில் இருந்தோ அல்லது தலையின் பின் பகுதியில் இருக்கும் முடியை கொஞ்சமாக எடுத்து அதை முடி இல்லாத இடத்தில் அறுவை சிகிச்சையின் மூலம் நட்டு வைத்து விடுவோம். பொதுவாகவே இந்த சிகிச்சை ஒரே நாளில் முடிந்து விடும். சிகிச்சை முடிந்த பின்னர் தலையை எப்படி கழுவ வேண்டும் என்பதெல்லாம் நாங்களே சொல்லி கொடுத்து விடுவோம்.

இந்த சிகிச்சை செய்த பின்னர் மூன்று வாரங்களில் முடி வளர தொடங்கும். ஆறு மாதங்களில் முழுவதுமாக முடி வளர்ந்து விடும். இயற்கையாக வளர்ந்த முடிகளுக்கும் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த தலைமுடிக்கும் வித்தியாசமே தெரியாது. மூன்று வாரம் கழித்து இயல்பாக முடி வெட்டுதல், தலை கழுவுதல் என எல்லாமே சாதாரணமாக செய்யலாம்.

இதில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மூளையை பாதிக்குமோ என பலரும் பயப்படுவார்கள். அது உண்மை இல்லை. முடி, தலையின் தோல், மண்டை ஓடு, மூளை என்ற வகையில் தான் தலை அமைப்பு  இருக்கும். இதில் நாம் முடி அறுவை சிகிச்சை செய்வது தோலை தாண்டி செல்லாது.

அதனால் பயப்பட வேண்டியதில்லை’’ என்றவர் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி விளக்கம் அளித்தார்.
‘‘பொதுவாக தோல் சுருக்கங்கள் என்பது 30 வயதுக்கு மேல் தான் தொடங்கும். தற்போது 18 முதல் 23 வயது வரையிலானவர்களுக்கும் சரும சுருக்கம் ஏற்படுகிறது. இது ஏற்பட முக்கிய காரணம் சூரிய ஒளி.

சருமத்தில் நேரடியாகவும் அதிகமாகவும் சூரிய ஒளி படுவதால் சருமத்தில் சுருக்கம் ஏற்படும். நம்முடைய முகம் நம் மனதின் கண்ணாடி என்பதால், மன அழுத்தம் காரணமாகவும் ஏற்படும். ஆண்கள் மட்டும் தான் புகை மற்றும் மதுப் பழக்கம் கொண்டிருந்தனர். ஆனால் பெண்களும் இப்போது அந்த பழக்கத்தினை கடைபிடிப்பதால் கண்கள் ஓரம், புருவத்தை உயர்த்தி பேசும் போது, நெற்றிப் பகுதி போன்ற பகுதியில் சரும சுருக்கம் ஏற்படும்.

இதே போல ‘மங்க்’ என்று சொல்லக் கூடிய மூக்கு மற்றும் கன்னத்தில் வெண்புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகள் சிலருக்கு தோன்றும். இவைகள் ஒவ்வொரு தோலின் தன்மையை பொறுத்து மாறுபடும். முகத்தில் இருக்கும் பருக்கள் தோன்றி மறையும் போது அந்த இடத்தில் கருப்பாக தெரியும். இதற்கு அவரவர் சருமத்திற்கு ஏற்ப சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். மருந்துகளும் இருக்கின்றன. லேசர் சிகிச்சை நல்ல பலனை கொடுக்கும். இதற்கான சிகிச்சை மாதம் ஒரு முறை என 8 மாதம் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் சருமத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் சரி செய்து விடலாம்.

வெண் புள்ளிகள் மற்றும் பருக்கள் ஹார்மோன் மாற்றம் காரணமாகவும் ஏற்படுகிறது. இதனால் சருமம் மட்டுமல்ல முடி கொட்டுதல், கழுத்துப் பகுதியில் கருமை, முகத்தில் முடி வளருதல் போன்றவையும் ஏற்படும். இந்தப் பிரச்சனைக்கு லேசர் சிகிச்சை மூலம் 80% வரை முகத்தில் முடி வளருவதை கட்டுப்படுத்த முடியும்’’ என்றார் அழகியல் மற்றும் சரும நிபுணர்
அபிராமி.

மா.வினோத்குமார்