வாழ்க்கை+வங்கி=வளம்!



வணிகக் கடன் திட்டங்கள்

தொழில் செய்பவர்களில் இருவகைஉண்டு. பிணையமாக தருவதற்கு சொத்து எதுவுமில்லை, அரசின் மானியம் கிடைத்தால் தொழில் செய்யலாம் என்பவர் ஒருவர். மற்றொருவர் தன்னிடம் வேண்டுமளவிற்கு அடமானம் வைக்க சொத்து உள்ளது என்றும் தனது தொழிலுக்கு வங்கி கடன் வழங்கவேண்டும் என்பார். இந்த இருவகையாளர்களுக்கு வங்கிகளின் மூலம் கிடைக்கும் கடனுதவிகள் குறித்து மேலும் பார்ப்போம்.

சொத்தின் மதிப்பும்  நீண்டகாலக் கடனும்

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாகப் பதிவு செய்யப்பட்ட தொழிலகங்களுக்கு 20 ஆண்டு கால அளவில் திருப்பச் செலுத்தும் வகையில் வங்கியில் கடனுதவித்திட்டம் உள்ளது. குறைந்தபட்ச கடன்தொகை ரூ.10 லட்சம் மற்றும் அதிக பட்ச கடன் தொகை ரூ.200 லட்சமாகும். மும்பை மற்றும் தில்லி ஆகிய நகரங்களில் இயங்கும் நிறுவனங்கள் அதிக பட்சமாக ரூ.300 லட்சம் வரை கடன்பெற இயலும்.

கடன் பரிசீலினைக் கட்டணமாக தவணைக் கடனுக்கு கடன் தொகையில் 1% வங்கியால் வசூலிக்கப்படும் அதிகபட்ச பரிசீலனைத்தொகை வசூலிப்பதில் உச்சவரம்பு உள்ளது. ரொக்கக் கடனுக்கு ஒவ்வொரு ஆண்டும் கடனைப் புதுப்பிக்கும்போது கடன் தொகையில் 0.40% பரிசீலனைக் கட்டணம் விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும். அடமானமாக  வைக்கும் சொத்து அல்லது தொழிலின் உற்பத்தி மற்றும் விற்பனை அளவீடுகளின்படி கணக்கிடப்படும் தொகை இவற்றில் எது குறைவோ அதுவே கடன் தொகையாகும். தவணைக்கடன் பெற்ற நாள் முதல் 18 மாதங்கள் கழித்து மாத தவணைத்தொகையை வங்கியில் செலுத்தத் தொடங்கலாம். இந்த 18 மாத காலத்தில் கடன் கணக்கில் கணக்கிடப்படும் வட்டியை ஒவ்வொரு மாதமும் கடனாளி செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் அரசின் மானிய உதவித்தொகை கிடைக்காது.

எம்.எஸ்.எம்.இ - ஏற்றுமதிக் கடன்

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அயல்நாடுகளுக்கு உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன. மூலப் பொருட்களை வாங்குதல், பதப்படுத்துதல், கட்டுமானம் செய்தல், கப்பல் அல்லது விமான தளத்திற்கு அனுப்புவதற்கு வாகனங்கள் வாங்குதல், உற்பத்தியான பொருட்களை குறிப்பிட்ட நாட்களுக்கு கிடங்கில் சேமித்து வைத்தல் உள்ளிட்ட செலவுகளுக்காக வங்கிகள் கடன் வழங்குகின்றன. வணிகத்தின் தன்மைக்கு ஏற்ப கடன் தொகையும், வட்டியும், பரிசீலனைக் கட்டணமும் நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக மத்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி இந்த ஏற்றுமதிக் கடன் வழங்கப்படுகிறது. அதேபோல குறிப்பிட்ட அத்தியாவசிய பொருட்களை சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் இறக்குமதி செய்யவும் வங்கிகள் கடன் வழங்குகின்றன.

சிறு விற்பனையாளர் கடன்

சிறு விற்பனையாளர்களுக்கு எந்தவித பிணையமும் இல்லாமல் மொத்த உற்பத்தி நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர் என்ற ஒப்பந்த அடிப்படையில்  சில வங்கிகள் கடன் வழங்குகின்றன. உற்பத்தியான பொருட்களை மொத்தமாக விற்பவரிடமிருந்து சில்லறை விற்பனையாளர் வாங்கி விற்று பணமாகும் நாள்வரையான குறுகியகாலக் கடன் இது. இதேபோல வாகன விற்பனையாளர்களுக்கு உற்பத்தியாளரின் வணிக முகவர் என்ற வகையில் வங்கிகள் கடன் தருகின்றன. ஒவ்வொரு வருடமும்  சந்தை மதிப்பைப் பொறுத்து கடன்தொகை அமையும். விற்பனையாகும்வரை அந்த வாகனங்கள் வங்கியின் அடமானத்தில் இருக்கும்.

மூலதன மானியம் மற்றும் சலுகைகள்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்திய பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றுவதால் அவற்றின் தேவை மற்றும் பயன்பாட்டிற்காக கடனுடன் இணைக்கப்பட்ட மூலதன மானியத்துடன் புதிய திட்டங்கள் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு வங்கிகளின் மூலம் செயலாக்கம் பெறுகின்றன. ஒருவர் தொழில் தொடங்குவதோடு அதனை மேம்படுத்தவும் வங்கிகள் பெருமளவு உதவுகின்றன. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் புதிய தொழில் தொடங்குபவர் அந்தந்த பிரிவுகளுக்காக சிறப்புச் சலுகைகள் அரசு மற்றும் வங்கிகளால் வழங்கப்படுகின்றன.

அதில் பல திட்டங்கள் உள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், தகுதி வாய்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வட்டார கிராமப்புற வங்கிகளைத் தொடர்புகொண்டு இந்திய அரசின் எம்.எஸ்.எம்.இ அமைச்சகம் மற்றும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி இணைந்து நிறுவியுள்ள கடன் நிதியுதவி திட்டங்களை அறிந்துகொண்டால் பிணையம் இல்லாமல் ரூபாய் 2 கோடி வரை கடன் பெறலாம்.

இவற்றில் மிகக்குறைவான 5% வட்டியை நிர்ணயிக்கும் திட்டங்களும் உள்ளன. உயிர்காக்கும் மருந்துப்பொருட்கள் தயாரிப்புக்கு இவை பொருந்தும். வங்கிகளால் செயல்படுத்தப்படும் மானியத்துடன் குறைந்த தொகை கடனாக பிரதமமந்திரியின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் 18 வயது பூர்த்தியானவர், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தாலும் தொழில் திட்டவரைவு அறிக்கையை வழங்கி அதற்கேற்ப, கடன்திட்ட தகுதி வரையறையின்படி ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். ஊக்கமளிக்கும் வகையில் கூடுதல் கடன் திட்ட வரைவின்படி கடன் தவணைகளை மிகச்சரியான காலத்தில் திருப்பிச் செலுத்தும் உற்பத்தியாளருக்கு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு வழங்கிய கடன்தொகையில் மேலும் 10% அளவிற்குத் தனியாக புதிய வேறு ஒரு கடனை வங்கி வழங்குகிறது.

இந்த சிறப்புக்கடனை 24 மாதத் தவணைகளில் செலுத்த வேண்டும். சில வங்கிகள் முன்னரே கடன்பெற்று திருப்பச் செலுத்திவரும் கடனாளிக்கே மேலும் 25% வரை புதிய தனிக்கடன் வழங்குகின்றன. இந்த உபரிக்கடனை திருப்பிச் செலுத்த தவணைக்காலமும் 60 மாதங்களாக நீட்டிக்கப்படுகிறது. பட்டாசுத் தொழிற்சாலை, காலண்டர் அச்சிடுதல் போன்ற தொழில்கள் ஒரு குறிப்பிட்ட மாதங்களில்தான் நடைபெறுவதால், அந்த காலச் சூழலின் தேவைக்கேற்ப வங்கிகள் கடன் வழங்குகின்றன.

உற்பத்திக்கு முன்னர் கடன் வழங்கப்பட்டு விற்பனைக் காலத்தில் ஒரு காலாண்டு அல்லது அரையாண்டுக்குள் கடன் தொகையை வங்கியில் திருப்பிச் செலுத்தும் வகையில் இந்தக் கடன் திட்டங்கள் செயல்படுகின்றன. இவை போன்று பல திட்டங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு செயலாக்கம் பெறுகின்றன.

பெண்களுக்கான சிறப்பு வணிகக் கடன்கள்

இந்தியாவில் 150 லட்சம் புதிய தொழில் முனைவோர்கள் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் வங்கிக்கடன் பெற்றுள்ளனர். இவர்களின் மூலம் 3 முதல் 4 கோடி நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. உணவுகள் தயாரித்து விற்பனை செய்ய அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் ரூ.50000/- வரை வங்கியில் கடன் பெற்று 36 மாத தவணைகளில் திருப்பச் செலுத்த வேண்டும். உத்தயோகிணி திட்டம் 18 வயது முதல் 45 வயது வரையுடைய பெண்கள் ரூ.1 லட்சம் வரை வங்கியில் கடன் பெற்று சில்லறை விற்பனை செய்ய உதவுகிறது.

பெண் தொழில் முனைவோரின் நிதி மற்றும் தொழில் பயிற்சி சேவைகளுக்கு நிதி ஆயோக் பெண் தொழில்முனைவு திட்டம். இந்திய அரசின் நிதி ஆயோக் மற்றும் சிறுதொழில் வளர்ச்சி வங்கியுடன் இணைந்து செயல்படுகிறது.  இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்கள் http://wep.gov.in/ உள்ளன.

ஸ்ரீசக்தி யோஜனா இந்திய அரசாங்கமும் நிதி நிறுவனங்களும் இணைந்து பெண் தொழில் முனைவோர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். பெண்களுக்கான சிறப்புச் சலுகைகளும் உள்ளன.

வாய்ப்புகள் வழங்கும் வங்கிகள்  

லாபமீட்டக்கூடிய மளிகைக்கடை, பழம் மற்றும் காய்கறி கடை, கைவினைப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, வாகனங்களின் உதிரி பாகங்கள் கடை, அழகு நிலையம்,  ஃபார்மசி, தேநீர், பால், குளிர்பானங்கள், சிற்றுண்டி உணவகம், மின்சாதன விற்பனையகம், ஆடை வணிகம், புத்தகங்கள், அலங்கார மற்றும் பரிசுப்பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், உடற்பயிற்சி அரங்கம் என பல வாய்ப்புகள் உள்ளன. அனைத்திற்கும் பொருந்தும் வகையில் வங்கியின் கடன் திட்டங்களை அறிந்து பயன்பெறலாம்.  

உறுதிக்கடிதமும், வங்கி உத்தரவாதமும் சிறு, குறு மற்றும் நடுத்தர வணிக / தொழிலகங்களுக்கு வங்கிகளால் வழங்கப்படும் கடன், மிகைப்பற்றுக்கடன் மற்றும் தவணைக்கடன் குறித்து விரிவாகப் பார்த்தோம்.  இவை அனைத்தும் நிதி சார்ந்த கடன்களாகும். வங்கிகள் வழங்கும் நிதி சாராத கடன்திட்டங்கள் தான் கடன் உறுதிக் கடிதம், வங்கி
உத்தரவாதம்.

உறுதிக்கடிதம் (Letter of Credit)

பொருட்களை விற்பனையாளரிடம் இருந்து வாங்குபவர் குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் செலுத்துவதை உறுதி செய்து, விற்பனையாளருக்கு வாங்குபவர் சார்பாக வங்கியால் வழங்கப்படும் கடிதமே உறுதிக்கடிதம். வாங்குபவரின் சார்பாக வங்கி வழங்கும் கடிதம் பணப்பரிமாற்றத்திற்கான உத்தரவாதமாகச் செயல்படுகிறது. விற்பனையாளரின் பெயர், தொழில் முகவரி, வணிக விவரம், தயாரிப்பின் பெயர், விற்பனைத்தொகை, வாங்குபவரின் பெயர், தொழில் முகவரி, தேதி ஆகியவை வங்கியின் உறுதிக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

வாங்குபவர் குறிப்பிட்ட கால வரையறைக்குள் விற்றவருக்குப் பணம் செலுத்தாவிட்டால் வாங்குபவரின் சார்பாக விற்பனையாளருக்கு வங்கி பணம் செலுத்தி, அதற்குரிய வட்டி மற்றும் பரிசீலனைக் கட்டணத்துடன் வாங்குபவரிடமிருந்து பணத்தை வசூலிக்கும். இதற்கென தனியாக கடன் விண்ணப்பப் படிவத்தை அதற்குரிய ஆவணங்களுடன் வங்கியிடம் விண்ணப்பிப்பவர் வழங்கவேண்டும். ரொக்கக்கடன் மற்றும் தவணைக்கடனுடன் இந்த வசதியும் சேர்த்து வங்கி உற்பத்தியாளருக்குப்  பரிசீலித்து வழங்குகிறது. உறுதிக்கடிதம் பெறுவதற்கு விண்ணப்பதாரர் வங்கிக்குப் பிணையம் வழங்கவேண்டும்.

பொருளை விற்பவரின் வணிக நிலை, பொருளாதார நிலை, சந்தையில் அவருக்குள்ள மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்தே வங்கி உறுதிக்கடிதம் வழங்கும். மிகச்சிறந்த நிறுவனங்கள்தான் இதற்கு விண்ணப்பிக்க முடியும். வாங்குபவரின் நிலையான சொத்து அல்லது நிலை வைப்பு பிணையமாக வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.  

இதில் பல வகைகள் உள்ளன. வங்கி உடனடியாக விற்பனையாளருக்குப் பணம் வழங்குவது, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பணம் வழங்குவது, இடையில் கடிதத்தின் நிபந்தனைகளை மாற்றக்கூடியது மற்றும் மாற்ற முடியாதது என்று அந்தந்த வணிக சூழலுக்கு ஏற்ப இவை உள்ளன. விற்பனையாளர் வாங்குபவரின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மிகச்சரியாக பொருட்களை அனுப்பினால் மட்டுமே, அதை உறுதி செய்து கொண்டு வங்கி அதற்குரிய பணத்தை விற்பனையாளருக்கு அனுப்பும்.

இந்த உறுதிக்கடிதத்தின் பயனை விற்பனையாளர் தனக்கு பொருளை வாங்குபவரிடமிருந்து அல்லது அவரின் சார்பாக வங்கியிடமிருந்து பெறவேண்டிய தொகையை வேறு ஒருவருக்கோ அல்லது வேறு நிறுவனத்துக்கோ மாற்ற முடியும். சம்பந்தப்பட்டவரிடையே எப்பொழுது, எப்படி பரிவர்த்தனைகளை பூர்த்தி செய்வது என்பதை வரையறுத்து வணிகத்திற்கு ஏற்ப விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன. வங்கிகள் உரிய நேரத்திற்குள் உறுதிக்கடிதத்தை வழங்கவில்லை என்றால் வணிகம் தாமதமாகும்.

உறுதிக்கடிதம் மற்றும் தவணைக்கடன் - வேறுபாடு

தவணைக்கடன் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மாதத் தவணையில் திருப்பச் செலுத்த வங்கியிடமிருந்து தொழில் முனைவோர் வாங்கிய மொத்த தொகையாகும். உறுதிக்கடிதம், கடன் வாங்குபவருக்கு வங்கியால் அனுமதிக்கப்பட்ட கடன் வரம்பு. தவணைக்கடன் குறிப்பிட்ட வணிகப் பயனுக்காக சொத்து / தளவாடங்கள் / வாகனம் வாங்குவதற்கு / கட்டிடம் / வணிக இடம் அமைப்பதற்கு கடனாக வழங்கப்படும் தொகை. உறுதிக்கடிதம் வாங்குபவருக்காக விற்பனையாளருக்கு தரும் உத்தரவாதம். உறுதிக் கடிதம் பொருளை வாங்குபவருக்கு ‘பரிமாற்ற மசோதா’ வடிவில் செயல்படுகிறது. வங்கியின் உத்தரவாதம் இருப்பதால் விற்பனையாளர் எந்தத் தயக்கமும் இன்றி வாங்குபவருக்கு பொருட்களை வழங்குகின்றார்.

வங்கி உத்தரவாதம்

தன் வாடிக்கையாளரின் சார்பாக வங்கி வழங்கும் நிதி சார்ந்த உத்தரவாதம். ஒரு வாடிக்கையாளரின் நிகர மதிப்பு இவ்வளவு என்று பண மதிப்பீடாக வங்கி தனி நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ முத்திரைத்தாள் படிவத்தில் உத்தரவாதம் வங்கியால் கையொப்பமிட்டு வழங்கப்படுகிறது.

உத்தரவாத படிவம் வாடிக்கையாளர் சார்பாக பயனாளருக்கு வழங்கும் பிணையமாகும். இரண்டு வகையான வங்கி உத்தரவாதங்கள் உள்ளன. ஒன்று நிதி உத்தரவாதம், மற்றொன்று செயல்திறன் உத்தரவாதம். செலுத்த வேண்டிய பணத்திற்காக நிதி உத்தரவாதமும், ஒரு செயலை ஒப்பந்தப்படி செய்து முடிப்பதற்கு செயல்திறன் உத்தரவாதமும் வங்கியால் வழங்கப்படுகிறது. இத்தகைய உத்தரவாதங்களுக்கான கால அளவு பத்து ஆண்டுகள்.

உறுதிக்கடிதம்/ வங்கி உத்தரவாதம் - வேறுபாடு

உறுதிக்கடிதம், வங்கி உத்தரவாதம் இரண்டும் வங்கியால் வழங்கப்படும் வாக்குறுதிகள். வங்கியின் தலையீட்டால் விற்பனையாளர் மற்றும் வாங்குபவர் ஆகியோரிடையே நிதி மற்றும் செயல் சார்ந்த நம்பிக்கை ஏற்படுகிறது. தடையில்லா வணிகம் சாத்தியமாகிறது.

(1) உறுதிக்கடிதம் ஒரு பொருளின் விற்பனையாளருக்கு வாங்குபவர் குறிப்பிட்ட காலத்திற்குள் அந்தப் பொருளின் விலையை வழங்குவார் என்று வங்கி நிதி சார்ந்த ஆவணமாக வழங்கப்படும். உத்தரவாதம் என்பது விண்ணப்பதாரரின் நிகர நிதி மதிப்பைக் குறிப்பிட்டு வணிக ரீதியான நிதி பரிவர்த்தனை எழுத்து மூலமாக தெரிவிப்பதாகும்.  

(2) உறுதிக்கடிதத்தின்படி நிபந்தனை பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே பணப்பரிமாற்றம் வாங்குபவரிடமிருந்து விற்பனையாளருக்கு நடைபெறும். வாடிக்கையாளர் ஒப்பந்தப்படி செயல்படவில்லை என்றால் இழப்பீடாக வங்கியால் ஒப்பந்தப் பணம் பயனாளருக்கு வழங்கப்பட்டு விண்ணப்பதாரரிடம்
வட்டியுடன் வசூலிக்கப்படுகிறது.

(3) கடன் கடிதம் அல்லது உறுதிக்கடிதம் குறிப்பிட்ட பரிவர்த்தனைக்காக உதவுகிறது. வெவ்வேறு வணிகக் கடமைகளை நிறைவேற்ற வங்கி உத்தரவாதம் பயன்படுகிறது.

(4) உறுதிக்கடிதத்தின்படி வங்கியின் பொறுப்பு முதன்மையானதாகும். வங்கி உத்தரவாத ஆவணத்தின்படி வாடிக்கையாளர் முதன்மைப் பொறுப்பாளராகிறார்.

(5) உறுதிக்கடிதம் வழங்கும்போது வங்கியின் இழப்பீட்டு நிலை அதிகமாகும். அதனால்தான் வங்கி அதற்கான பிணையமாக கூடுதல் மதிப்புள்ள சொத்தினை ஏற்கிறது. வங்கி உத்தரவாதத்தின் படி இழப்பீட்டு நிலை வங்கியை விட வாடிக்கையாளருக்கு அதிகம். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலகங்கள் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் எவ்வாறு வங்கி சார்ந்து செயல்பட வேண்டும் என்பதை இனி அறிந்து கொள்வோம்.

எஸ்.விஜயகிருஷ்ணன்