சிறுகதை-நாய் விற்ற காசு!



பொன் நிறத்தில் பொசுபொசு என்றிருந்த அந்த ஏழுமாத நாய்க்குட்டியை தன் மடியில் வைத்து ஆசையாய் வருடினான் ராகுல். அடிக்கடி பார்த்து பழகிய நபர் என்பதால் உரிமையாய் அவன் மடியில் தலை சாய்ந்து தன் சொர சொரப்பான நாவால் அவனை வருடி பைரவனும் தன் அன்பை வெளிப்படுத்தியது. சின்னதாய் இருந்த இரண்டு முன்னங்கால்களாலும் அவனது கரம் பற்றி பொய்யாய் கடித்து விளையாடியது.

“டேய் சதீஷ்! இந்த பைரவனை எனக்கு தந்திடுறியா? உனக்கு எவ்வளவு காசு வேணாத் தர்றேன்”- ராகுல் ஆசையாய்க் கேட்க, தன் சைக்கிளை பழுது பார்த்துக் கொண்டிருந்த சதீஷ் நிமிர்ந்தான்.. இதோடு மூன்றாவது முறையாய்க் கேட்கிறான். உற்ற நண்பன்தான்! அவனுக்காக எதையும் கொடுக்கலாம். ஆனால் பைரவனை எப்படி? பைரவன் தன் உயிரல்லவா?”

“ஸாரி ராகுல்! பைரவன் நான் இல்லாம சாப்பிடாது. பால் குடிக்காது. உனக்கு நான் ஏதாவது நாய்க்குட்டி கிடைச்சா தர்றேன்.”“இல்லடா! பைரவனைத் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! என்ன கலர் பாரேன்… முடியெல்லாம் எவ்வளவு ஷைனிங்கா இருக்கு? ஸோ ஸாப்ட்! பையு! எங்க வீட்டுக்கு வர்றியா? உனக்கு பெடிகிரி… சிக்கன்… மட்டன் எல்லாம் தர்றேன். என்கூட ஏ.சி. ரூம்ல தூங்கலாம். வர்றியா? ராகுல் பைரவனின் தலையை வருடியவாறே கேட்க, அது தன் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தது. அவனது கேள்வி புரிந்ததோ என்னவோ.. வேகமாய் அவனது மடியிலிருந்து குதித்து சதீஷிடம் சென்று அவனை உரசிக் கொண்டு அவனது காலடியில் படுத்துக் கொண்டது.

“பாருடா! நான் கேட்டது அதுக்கு புரிஞ்சுது போலிருக்கு? கோவிச்சிட்டு உன் கிட்ட வந்திட்டான்” ராகுல் வியப்பாய் கேட்க, பெருமிதமாய் புன்னகைத்தான் சதீஷ்.
“நான் தான் சொன்னேன்ல. அது என்னை விட்டுட்டு ஒரு நாள் கூட இருக்காதுடா. இது குழந்தையாய் இருக்கும்போது இவங்க அம்மாவை பைக்காரன் ஒருத்தன் மோதிட்டான். ஒரு நாள் பூரா கஷ்டப்பட்டு செத்துப்போயிடுச்சு. அப்ப பைரவன் கண்ணுகூட தொறக்கல. பச்சக்குட்டி! மொத்தம் அஞ்சுக் குட்டிங்க. நாங்க ஆளுக்கொன்னா எடுத்து பால் ஊத்திக் காப்பாத்தினோம். எங்க அத்தைக்கு நாயின்னா பிடிக்காது. வீட்டுக்குள்ள சேர்க்க மாட்டாங்க. அதனால இவனுக்காக நானும் வெளித்திண்ணையிலதான் படுப்பேன்.

இவன் ராத்திரியில பசியில கத்தும்போதெல்லாம் நான்தான் புட்டிப்பால் கொடுப்பேன். இது கண்முழிச்சதும் என்னைத் தான் பார்த்திச்சு. அதில இருந்து என்னைத்தான் அவனோட அம்மாவா நினைக்கிறான். இப்பகூட என் அத்தையோ, மாமாவோ சாப்பாடு வெச்சா சாப்பிடாது. நான் ஸ்கூல இருந்து வந்த பிறகு நான் கொடுத்தாதான் சாப்பிடும்.”“ஆமாமா! இந்த நாய்தான் உனக்கு சாப்பாடு போடுது. இந்த எட்டணா சைக்கிளை எத்தனை மணி நேரமா ரிப்பேர் பண்ணுவ? உம் மாமனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு போகணும். போயி நாலு இட்லி வாங்கிட்டு வா” மீனைக் கழுவிக் கொண்டே குரல் கொடுத்தாள் மனோகரி.

மனோகரியைக் கண்டதும் அவசரமாய் எழுந்து கொண்டான் ராகுல்.“பைடா! நாளைக்கு ஸ்கூல்ல பார்க்கலாம்.”“சரிடா” சதீஷ் தலையாட்டியதும் ராகுல் தன் இருசக்கர வாகனத்தில் ஏறி புறப்பட்டான். சதீஷ் தன் சைக்கிளை தாழ்வாரத்தில் ஒதுக்கி நிற்க வைத்துவிட்டு கை கால்களை அலம்பிவிட்டு மனோகரியை நெருங்கினான்.
“எத்தனை இட்லி வாங்கணும் அத்தை?”“நாலு வாங்கி வா! நமக்கு பழையது கிடக்கு.”

“ம். காசு?”
“என்னான்ட ஏது காசு? வேலைக்கு போற மனுஷன் பத்துநாளா படுத்துக்கிடக்காரு! துட்டுக்கு எங்க போவேன்? சுப்பாத்தாகிட்ட எழுதிக்க சொல்லு. மாமா வேலைக்கு போனதும் தருவாங்கன்னு சொல்லு…”“ம்..”  அரை மனதோடு தலையாட்டி விட்டு காலில் செருப்பை மாட்டிக் கொண்டு நடந்தான் சதீஷ். அடுத்தத் தெருவில் வசிக்கும் சுப்பாத்தா பாட்டியின் வீடுதான் அத்தை கூறிய இட்லி கடை. அன்றன்று நடக்கும் வியாபாரத்தில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் மறுநாள் உணவிற்கு பொருள் வாங்குவாள் பாட்டி! இதில்
ஆளாளுக்கு கடன் சொன்னால் எப்படி என்று வருத்தப்படுவாள். சில சமயம் சலித்துக் கொண்டதுண்டு. கிட்டதட்ட ஒருவாரமாய் கடனுக்கு இட்லியை
வாங்கிவிட்டான்.

இன்று என்ன சொல்வாளோ? தயக்கமாய் கடையை நெருங்க, சுப்பாத்தா
பாத்திரங்களை கழுவி கவிழ்த்துக் கொண்டிருந்தாள்.“ஆயா… இட்லி இருக்கா?”
“அடடா! இல்லையே ராசா! இன்னிக்கு குறைச்சலாத்தான் போட்டேன். வித்துப்போச்சே!”“போச்சு! இன்று காலையிலிருந்தே அத்தையிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்! இப்போது மாமாவிற்கு காலை உணவிற்கு என்ன செய்வது? ரொட்டிக் கடைக்கு போகலாம் என்றால் காசு வேண்டும்? கலக்கமாய் வீட்டை அடைந்து அத்தையிடம் சொல்ல, கொந்தளித்துப் போனாள் மனோகரி.

“இட்லி வித்துப் போச்சு? ஏன்டா… காய்ச்சக்கார மனுஷனுக்கு இப்ப என்னத்தடா கொடுப்பேன்? காலையில இருந்து அந்த ஓட்ட சைக்கிளை வெச்சி என்னடா பண்ணிட்டு இருந்த? எட்டு மணிக்கெல்லாம் போயி இட்லிய வாங்கிட்டு வந்திருக்கலாமில்ல?”“சைக்கிள் பஞ்சராயிடுச்சி அத்தை. அதான் சரி பண்ணிட்டு இருந்தேன்.”“ஏன்? அதை பிறகு பண்ணினா ஆகாதா? இப்ப டிபனுக்கு என்ன பண்றது? ஆசுபத்திரிக்கு வேற போகணுமே” மனோகரி அதட்ட, இரும்புக்கட்டிலில் படுத்திருந்த ஐங்கரன் குரல் கொடுத்தார்.
“அவன் என்ன பண்ணுவான் பாவம்! விடு!

கஞ்சித் தண்ணி இருந்தாக் கொடு! போதும்.”“கஞ்சித் தண்ணியா? அறிவிருக்கா உமக்கு? ஆஸ்பத்திரியில மணிக்கணக்கா காத்து நிக்கணுமே! கிறு கிறுன்னு வந்திட்டா? ஊசி போடும்போது நர்சு கேட்பாளே என்ன சாப்பிட்டீங்கன்னு. வெறும் கஞ்சித் தண்ணிய குடிச்சிட்டு வந்தேன்னு சொன்னால் என்னை ஒரு மனுஷியா மதிப்பாளா?”
“கேட்டாப் பார்த்துக்கலாம்! நீ போய்யா! சைக்கிளை சரி பண்ணிக்க. நாளைக்கு பள்ளிக்கூடம் போகணுமில்ல?”  ஐங்கரன் பரிவாய் சொல்ல, மௌனமாய் தலையாட்டி விட்டு வெளியேறினான் சதீஷ். உள்ளே கத்திய மனோகரியின் குரல் திண்ணை வரை எதிரொலித்தது.

“கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும். கிழவியைக் கொண்டு போய் மனையில வைன்ற கதையா நான் காலைச் சாப்பாட்டுக்கு என்ன வழின்னு முழிச்சிட்டு இருக்கேன். இவரு பள்ளிக்கூடம் போறதுதான் முக்கியமாய் போச்சு. இல்ல?”  மனோகரியின் கோபம் புரியாமல் சதீஷின் காலைச் சுற்றியவாறே பசியில் குரல் கொடுத்தது பைரவன்.“இது வேற சும்மா வள்ளு வள்ளுன்னு கத்திக்கிட்டு.. முதல்ல இந்த நாயை அடிச்சுத் துரத்தணும்.”“அய்யோ… வேணாம் அத்தை. பைரவனுக்கு பசிக்குது.

அதான் சத்தம் போடுது. பால் இருக்கா?”
“வாடா! உங்க மாமன் லட்சக்கணக்கில் பணத்தை சேர்த்து வெச்சிருக்காரு! நீ தெரு நாய்களை எல்லாம் கூட்டிட்டு வந்து பாலும், ரொட்டியும் போடு! நானே… காய்ச்சக்கார மனுஷனுக்கு பன்னு ரொட்டி வாங்கக்கூட காசில்லாம திண்டாடிட்டு இருக்கேன். பாலு வேணுமாம் பாலு! அந்தக் கருமத்தைக் கூட்டிட்டுப் போய் எங்காவது விட்டுட்டு வா!”  மனோகரியின் கத்தலுக்கு பயந்து பம்பிய பைரவனை  அழைத்துக் கொண்டு வெளியேறிய தங்கை மகனைக் கண்டு ஐங்கரனின் மணம் கனத்தது.

“ஏன்டி இப்படிப் பண்ற? தாய் தகப்பன் இல்லாத புள்ளையை இப்படி சங்கடப்படுத்தாதே!”“எனக்கு மட்டும் என்ன ஆசையா? உம்மை ஆசுபத்திரிக்குக் கூட்டிட்டுப் போக பத்துபைசா இல்லாம திண்டாடுறேனே! இந்த நேரத்தில் நாய்க்கு பால் கொடு தயிர் கொடுன்னா கோபம் வராதா? இந்த நாயால என்ன பிரயோசனம் நமக்கு?” மனோகரியின் குரல் தெருவரை எதிரொலிக்க, கனத்த மனதோடு தெருவில் இறங்கி நடக்கத் துவங்கிய சதீஷை பின் தொடர்ந்தது பைரவன். பசியால் அதன் வயிறு ஒட்டிப்போயிருக்க, அவனது கண்கள் கலங்கியது.குனிந்து அதை பரிவாய் வருடினான். “என்கிட்ட இருந்து நீ பசியோட கஷ்டப்பட வேண்டாம்! நீயாவது வயிறார சாப்பிட்டு நல்லா இரு! வா என்கூட” என்றவாறு ராகுலின் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினான்.

“சதீஷ்! என்னடா.. இவ்வளவு தூரம்! அட! பைரவனும் வந்திருக்கான்...”  ஆசையாய் பைரவனைத் தூக்கிக் கொண்டே நண்பனை வரவேற்றான் ராகுல்.“உள்ளே வா சதீஷ்!”“இல்லடா! மாமாவுக்கு உடம்பு சரியில்ல. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும். ராகுல் பைரவன் வேணும்னு கேட்டல்ல? நீயே வெச்சுக்க!”“என்ன? நிஜமாவா? ஹைய்யோ! தேங்க்யூடா! தேங்க்யூ ஸோ மச்! எப்படிடா…”“பாவம்டா! மாமா வேலைக்கு போகாததால பைரவனுக்கு பால் கூட வாங்க முடியல. ரெண்டு நாளா பட்டினியா
இருக்கான்.”“அச்சச்சோ! வாடா பைரவா… பால் சாப்பிடலாம்.”“ராகுல் ஒரு நிமிஷம்!”“சொல்லு சதீஷ்!”“மாமாவை ஆஸ்பத்திரிக்கு… கூட்டிட்டு…

போகணும்”  சதீஷ் தயங்க, ராகுல் வீட்டிற்குள் சென்று கையில் பணத்தோடு வந்தான். “இந்தாடா! இதில ரெண்டாயிரம் ரூபா இருக்கு. இன்னும் வேணும்னா கேளு. அப்பா வந்ததும் வாங்கித் தர்றேன்.”“போதும் ராகுல்! பைரவனை… பத்திரமாய் பார்த்துக்கடா! அவன் பசி தாங்க மாட்டான்!”  என்றபோது சதீஷின் கண்கள் கலங்கியது. கடைசியாய் ஒரு முறை முத்தம் கொடுத்துவிட்டு அவன் விறுவிறுவென வெளியேறி நடக்க, ராகுலின் கையிலிருந்த பைரவன் திமிறியது. ‘என்னை விட்டுட்டு போகாதே’ என்பதாய் குரல் எழுப்ப,
கண்களில் பொங்கிய நீரோடு திரும்பி பாராமல் சென்றான் சதீஷ்.

ஒரே வாரத்தில் பாதியாய் இளைத்திருந்தான் சதீஷ். இயந்திரத்தனமாய் பள்ளி செல்வதும், வீடு திரும்பியது முதல் மறுநாள் பள்ளிக்கு புறப்படும்வரை வெளித் திண்ணையில் அமர்ந்து பைரவன் படுத்து உறங்கிய.. விளையாடிய இடங்களை பார்த்து கண்ணீர் வடிப்பதுமாய் இருந்தவனைக் கண்டு மனோகரியே கலங்கித்தான் போனாள். இவன் கொண்டு வந்த பணத்தால் தானே அவளது கணவனுக்கு வைத்தியம் செய்து குணப்படுத்த முடிந்தது?

“ஏன்டாப்பா! இன்னும் எத்தினி நாள் தான் இப்படியே ஒக்காந்திருப்ப? வேற எதுனா நாய்க்குட்டி கிடந்தா எடுத்திட்டு வா. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்.”
“வேணாம் அத்தை!“சரி! அப்போ… அந்தப் பையன்கிட்ட போயி கேளு. உன் சிநேகிதன் தானே? பைரவனைத் தந்திடுவான்.”“காசுக்கு வித்திட்டு… எப்படி கேட்க முடியும்? பைரவன் அங்கேயே இருக்கட்டும். அங்கேதான் அவனுக்கு நல்ல நல்ல சாப்பாடு கிடைக்கும்.”  என்றவாறே திண்ணையில் படுத்துக் கொள்ள, வெளியே இருசக்கர வாகனத்தின் ஒலியும் கூடவே பைரவனின் குரலும் கேட்டது. விசுக்கென எழுந்தான் சதீஷ்.

“வவ்… வவ்…”  என்றவாறே குதித்தோடி வந்த பைரவன் சதீஷின் மீது தாவிக்குதித்து நக்கியது. வருடியது! அவனைச் சுற்றி வந்து வாலாட்டியது. சதீஷ் கண்ணீரும்
புன்னகையுமாய் அவனை அள்ளியெடுத்து முத்தமிட்டான்.“பையு! எப்படிடா வந்த? ராகுலுக்குத் தெரியாம ஓடிவந்திட்டியா?”“இல்ல சதீஷ்! நான்தான் கூட்டிட்டு வந்தேன்” - என்றவாறே தனது வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கினான் ராகுல்.
“ராகுல்...”

“பாவம்டா பைரவன்! நீயில்லாம சாப்பிட மாட்டேங்கிறான். தூங்க மாட்டேங்கிறான். எப்பப் பார்த்தாலும் வாசலையே பார்த்திட்டு உட்கார்ந்திடுவான். ரொம்ப பாவமா இருந்ததுடா! சாப்பிடாமல் செத்துப் போயிடப்போகுதுன்னு அம்மா உன்கிட்டயே விட்டுட்டு வந்திடச் சொல்லிட்டாங்க”  என்றதும் சதீஷின் கண்கள் விரிந்தன.“ராகுல்! நிஜமாவா சொல்ற?”“ஆமாண்டா! இனி பைரவன் உங்கிட்டயே இருக்கட்டும். நான் எப்பவும் போல ஹாலிடேஸ்ல வந்து பார்த்திட்டுப் போறேன். சதீஷ்! இதுல பைரவனுக்காக நான் வாங்கின டாக் ஃபுட்ஸ் இருக்கு. நீ குடுடா. சாப்பிடுதா பார்ப்போம்”  என்று பெரிய பாலிதீன் பையை சதீஷிடம் கொடுத்தான் ராகுல்.

“பையு! ராகுல் உனக்கு விதம்விதமா சாப்பாடு வாங்கிட்டு வந்திருக்கான். வா சாப்பிடலாம்”  என்று அழைக்க, அது வழக்கமாய் பால் அருந்தும் கிண்ணத்தின் அருகே சென்று வாலாட்டிக் கொண்டிருந்தது. மனோகரி புன்னகையோடு வீட்டிற்குள் சென்று டம்ளரில் பாலைக் கொண்டு வந்து சதீஷிடம் நீட்டினாள்.
“பைரவனுக்கு பால்தான் பிடிக்கும். அதையும் நீ ஊத்தினாத்தானே குடிப்பான். இந்தா! நீயே ஊத்து.”

“தேங்க்யூ அத்தை!”  என்றவன் வேகமாய் சென்று கிண்ணத்தில் பாலை ஊற்ற, மூச்சுவிடாமல் குடிக்கத் துவங்கியது பைரவன். குடித்து முடித்ததும் தன் வாலை ஆட்டியவாறே சதீஷின் காலடியில் வந்து படுத்துக் கொண்டது. பணத்தால் நாயை வாங்க முடியும். அதை வாலாட்ட வைக்க அன்பால் மட்டுமே முடியும் என்பதை ராகுலும் அன்பு மட்டுமே அனைத்தையும்
தன் வசமாக்கும் என்பதை மனோகரியும் புரிந்து கொண்டனர்.