நியூஸ் பைட்ஸ்



பசியை போக்கும் வெண்டிங் மெஷின்கள்!

ஒரு நிமிடத்திற்குள் சூடான ரொட்டியை கொடுக்கும் இலவச வெண்டிங் மெஷின்கள் துபாய் எங்கும் நிறுவப்பட்டுள்ளது. யாரும் பட்டினியுடன் தூங்கக் கூடாது என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் வலியுறுத்தலின் பேரில் இந்த முயற்சி அறிமுகமாகியுள்ளது. நன்கொடை அளிக்க விரும்பும் பொதுமக்கள் இந்த வெண்டிங் மெஷினிலேயே ‘டொனேஷன்’ பட்டனை அழுத்தி எஸ்.எம்.எஸ் மூலமாகவோ வங்கி கார்டு மூலமாகவோ நன்கொடை அளிக்கலாம்.

ஈரானில் பெண்கள் ஹிஜாப் எதிர்த்து போராட்டம்

ஈரானில், 22 வயதான மஹ்சா அமினி, தனது சகோதரனுடன் வெளியில் சென்றிருந்த போது ஹிஜாபுக்கு வெளியே அதிகமான தலைமுடி தெரிந்ததால், அரசாங்கத்தைச் சேர்ந்த ‘கலாச்சார காவலர்கள்’ அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸ் காவலின் போது தாக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஈரானில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஹிஜாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் பெண்கள் தங்கள் ஹிஜாபை எரித்தும், சிலர் தங்கள் தலைமுடியை வெட்டியும் போராடி வருகின்றனர். இதுவரை சுமார் 26 பேர் இந்த போராட்டத்தில் உயிர் இழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்லாந்தில் பெற்றோருக்கு 160 நாட்கள் மகப்பேறு விடுமுறை

பின்லாந்தில் இனி மகப்பேறு விடுமுறை தாய்க்கும் தந்தைக்கும் சரிசமமாக 160 நாட்கள் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது தவிர பெற்றோர்களில் ஒருவர் மற்றொருவருக்கு தன்னுடைய 63 நாட்கள் விடுமுறையை மாற்றியும் கொடுக்கலாம் என்ற சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு குழந்தையை பாராமரிப்பது வெறும் தாயின் பொறுப்புதான் என்ற கட்டமைப்பை இந்த சலுகை மாற்றும் என்றும், பொதுவாக பெண்கள் தாய்மையுற்றதும் தங்கள் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும் நிலமையும் மாறும் என பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

எழுத்தாளர் மீனா கந்தசாமிக்கு, ‘ஹெர்மன் கெஸ்டன்’ விருது

சென்னையைச் சேர்ந்த கவிஞரும், நாவலாசிரியருமான மீனா கந்தசாமி, ஜெர்மனியின் உயரிய விருதான ஹெர்மன் கெஸ்டன் விருதை இந்தாண்டு பெற்றுள்ளார். சாதி, பாலினம் மற்றும் இன ஒடுக்குமுறை குறித்த அவர் எழுத்துக்கு அங்கீகாரமாக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2006ல் வெளியான இவரது கவிதை தொகுப்பு ‘டச்’ (Touch), ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது தவிர அயன்காளி (2007), மிஸ் மிலிட்டன்சி (2010), தி ஜிப்ஸி காடஸ் (2014), When I Hit You: Or, A Portrait of the Writer as a Young Wife (2017), Tamil Tigresses (2021) போன்ற நூல்களையும் கவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஸ்காட்லாந்தில் வீட்டு வாடகை, ரயில் கட்டணம் முடக்கம்

ஸ்காட்லாந்தில் மனிதாபிமான அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் மக்கள் கட்டண உயர்வால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது தவிர குழந்தைகளுக்கான நிவாரணமும் 25 பவுண்ட்கள் அதிகரிக்கப்பட்டு இலவச பள்ளி உணவு திட்டம் ஆரம்ப பள்ளியில் பயிலும் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கும் நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை பலர் வரவேற்ற போதிலும், வாடகை வீடுகளின்
உரிமையாளர்கள் அரசு தங்கள் வாழ்வாதாரத்தை நிறுத்துவதாக எதிர்த்துள்ளனர்.

மெரினாவில் இலவச வைஃபை

சென்னை மெரினா கடற்கரையில் விரைவிலேயே இலவச வைஃபை வசதி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரை சுமார் ஐந்து கம்பங்கள் நிறுவப்பட்டு, சுமார் 45 நிமிடங்கள் இந்த இலவச சேவையை பொதுமக்கள் ஓ.டி.பி மூலம் பயன்படுத்தும் விதம் அறிமுகப்படுத்த முடிவு.

ஸ்வேதா கண்ணன்