தெருவெங்கும் காணினும் கொலு பொம்மைகள்!



காஞ்சிபுரம் என்றாலே வண்ண பட்டுப்புடவைகள் தான் நியாபகத்திற்கு வரும். ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர்களைக் கேட்டால் அது கொலு பொம்மைகள் செய்யும் ஊர் என்பார்கள். காஞ்சிபுரத்தில் அஸ்திரி என்ற தெரு உள்ளது. ஆனால் அந்த தெரு எங்குள்ளது என்று அந்த ஊர் மக்களிடமே கேட்டால் எல்லாரும் தெரியாது என்று தான் சொல்வார்கள். காரணம் அந்தப் பகுதியை பொம்மைக்கார தெரு என்று தான் அழைப்பார்கள். கொலு பொம்மைகள் செய்வதை மட்டுமே தொழிலாக கொண்ட மக்கள் வாழும் பகுதி இது.

இதனால் தான் இந்தப் பகுதிக்கு பொம்மைக்கார தெரு என்று பெயர். இந்தப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கொலு பொம்மைக்கள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கொலு பொம்மைகள் செய்யும் கூலி வேலைக்கும் செல்கின்றனர். வருடத்திற்கு 20 லட்சம் ரூபாய் அளவிற்கு இந்த ஊரில் பொம்மைகள் விற்பனையாகின்றன.

‘‘கொரோனா வந்ததால இரண்டு வருசமா தொழில் பண்ண முடியல. இந்த வருஷம் தான் திரும்பவும் தொழில் கொஞ்சம் முன்னேறி இருக்கு’’ என்று மகிழ்ச்சி பொங்க சொல்கிறார் பாஸ்கரன்.  ‘‘நான் பரம்பரை பரம்பரையாக  கொலு பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்கிறேன். காஞ்சிபுரத்துல பட்டு மட்டும் ஃபேமஸ் இல்ல. இந்த ஊரு மண்ணும் தான் ஃபேமஸ். இங்க ஓடற வேகவதி நதியில இருந்து எடுக்குற மண்ணுல செய்யுற  கொலு பொம்மைகளை வெளிநாடுகள்ல இருந்தெல்லாம் வந்து வாங்கிட்டு போறாங்க.

அந்த அளவுக்கு திடமான மண் இது. நவராத்திரி பொம்மைகள் இரண்டு வகை. ஒன்று மண் பொம்மை. மற்றொன்று பேப்பர் பொம்மை. மண் பொம்மைகளை களி மண்ணால் செய்வோம். இந்த பொம்மைகள் குறைந்தபட்சம் 25 வருஷம் அப்படியே இருக்கும். எங்களிடம் வாங்கிச் சென்ற சிலர் 50 வருஷத்துக்கு மேலான பொம்மைகளை வைத்திருக்கிறார்கள். அதே போல இன்னொரு வகை பேப்பர் பொம்மைகள். விநாயகர் சதுர்த்திக்கு விநாயகரை வடிவமைக்கும் பேப்பர் கொண்டு இந்த பொம்மைகளை செய்வோம். இந்த பொம்மைகள் ஒரு வருஷம் மட்டும் தான் இருக்கும். அப்படித்தான் நாங்களும் அதனை வடிவமைச்சிருப்போம். மண் பொம்மைகள் விலை அதிகம். ஒரு சிலரால் அவ்வளவு காசு கொடுத்து அந்த பொம்மைகளை வாங்க முடியாது. அவர்கள் இந்த மாதிரியான பேப்பர் பொம்மைகளை வாங்குவாங்க.

கொலு பொம்மைகளை பொதுவாக படிகள் அமைத்து தான் வைப்பாங்க. ஒரு வருஷம் மூன்று படி வைத்தால் அடுத்த வருஷம் ஐந்து படி வைப்பாங்க. இப்படியே ஒவ்வொரு வருடமும் படிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும். படிகள் உயருவது போல் ஒருவரின் வாழ்க்கையும் உயரும் என்பது ஐதீகம். மேலும் இந்த பொம்மைகளை பத்து நாட்கள் வைத்து பூஜை செய்யும் போது அந்த பொம்மைகள் அனைத்தும் தெய்வமாகவே மாறும் என்பது நம்முடைய நம்பிக்கை. அதனால் தான் நவராத்திரி முடிந்ததும் அந்த பொம்மைகளை மிகவும் சிரத்தையுடன் பத்திரமாக எடுத்து வைப்பார்கள்’’ என்றவர் கொலு பொம்மைகள் செய்வதை பற்றி விவரித்தார்.

‘‘தை மாசம் வெயில் காலத்தில் வேகவதி நதியில் இருந்து களி மண் எடுத்து குழைச்சு எப்படி நாம விநாயகர் செய்யுறோமோ அதே மாதிரி நாங்க என்ன கடவுள் உருவம் செய்யனும்னு நினைக்கிறோமோ அந்த மாதிரி உருவத்தினை வடிவமைப்போம். செங்கல்லை சூளை போடுவது போல் அந்த பொம்மைகளுக்கு என தனிப்பட்ட சூளை அமைத்து அதில் சுட வைப்போம். வைகாசி, ஆடி, ஆவணி காலங்களில் பொம்மைகளுக்கு வண்ணங்கள் தீட்ட ஆரம்பிப்போம்.

புரட்டாசி மாதம் விற்பனை நடக்கும். இங்கு தயார் செய்யும் பொம்மைகளுடைய முக அமைப்பு தான் அதன் தனிச்சிறப்பு. ஒவ்வொரு பொம்மையின் முக பாவனைகளையும் பல கோவில்களுக்கு சென்று அந்த கோவிலில் உள்ள சிற்பங்களின் முக பாவனைகள் மற்றும் ஆன்மீக இதழ்களில் வரும்  கடவுள்களின் உருவங்களை எல்லாம் வைத்து தான் இந்த கொலு பொம்மைகளை உருவாக்குவோம்.

முதலில் லட்சுமி, சரஸ்வதி, துர்கை, அஷ்டலட்சுமி என மொத்தம் 15 வகைகள் தான் இருக்கும். ஆனால் இப்போது 100க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் தயார் செய்கிறோம். அதில் விலங்குகள், குட்டி கிருஷ்ணர், கருமாரியம்மன், விவேகானந்தர், இராமகிருஷ்ணர், இராமானுஜர், சாரதாதேவி, ராகவேந்திரர்  என பலதரப்பட்ட பொம்மைகளை செய்கிறோம். தவிர இராமாயணம், பகவத்கீதைகளில் வரும் கதாபாத்திரங்களையும் வடிவமைக்கிறோம். அதனால் ஒவ்வொரு வருடமும் எங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் அவர்கள் படித்த இதிகாச புராண கதைகளில் வரும் கடவுள்களின் உருவங்களை பார்த்து வியந்து போவார்கள். இதனால் தான் வெளிநாடுகளிலிருந்தெல்லாம் எங்களிடம் பொம்மைகள் வாங்குகிறார்கள்.

இங்கிருந்து அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா, சீனா, இலங்கை என பல நாடுகளுக்கும் பொம்மைகள் ஏற்றுமதியாகின்றன. பல மாவட்டங்களிலிருந்தும் பொம்மை விற்பனையாளர்கள் இங்கு வந்து பொம்மைகளை வாங்கி விற்பனை செய்கிறார்கள். இந்த வருடம் புது வரவாக நாங்குனேரி பெருமாள், பெருமாள்   ஆழ்வார்கள், மகாபாரதத்தில் உள்ள கதாபாத்திரங்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், விலங்கினங்கள் என பல புதிய பொம்மைகளை செய்திருக்கிறோம். போன வருடம் நீங்கள் பார்த்த பொம்மைகள் இந்த வருடம் இருக்காது. அதில் சின்ன மாற்றங்களை செய்து அந்த பொம்மைக்கு புதிய உருவத்தை கொடுப்போம். கிருஷ்ணரின் தசாவதாரங்களில் ஒன்றான வராஹி பொம்மையினை மக்கள் அதிகம் வாங்குகிறார்கள்’’ என்ற பாஸ்கர் இங்குள்ள மக்களின் முக்கிய வாழ்வாதாரமே கொலு பொம்மைகள்தான் என்றார்.

செய்தி: மா.வினோத்குமார்

படங்கள்: பாஸ்கரன்