வாசகர் பகுதி-எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பனங்கிழங்கு!



நமது நாட்டில் அழிந்துகொண்டிருக்கும் மர வகைகளில் இந்த பனைமரம்  முதலிடத்தில் உள்ளது. பனைமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய நுங்கு, பதநீர், கிழங்கு மற்றும் பழம் போன்றவை அதிக சுவையுடன் மனிதர்களுக்கு நல்ல  ஆரோக்கியத்தையும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் செயல்படக்கூடியது.
பனை மரத்திலிருந்து  கிடைக்கும் நுங்கு அதனை வெட்டாமல் மரத்திலேயே விட்டுவிட்டால் அந்த நுங்கு  நன்றாக பழுத்து பனம்பழமாகி விடும். இந்த பனம்பழத்தினை எடுத்து வெட்டி  நிலத்தில் குழி தோண்டி அதில் புதைத்து வளர்த்து வந்தால் கிடைப்பது தான்  பனங்கிழங்கு. இந்த பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

*நார்ச்சத்து அதிகம் உள்ள பனங்கிழங்கை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்னைகள் குணமாகும். குடல் இயக்கத்தை சீராக்கும். ரத்தக் கொழுப்புக் கட்டிகள் உருவாவதை தடுக்கும்.

*உடல் இளைத்தவர்கள் பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடல் பருமனாகும்.

*உடலுக்கு குளிர்ச்சித்தன்மை மற்றும் உடலின் வலிமை அதிகரிக்கும்.

*பனங்கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து வேக வைத்து, வெயிலில் காய வைத்து, பின் அதை அரைத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து அதிகமாகும்.

*பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உள் உறுப்புகள் வலிமையாகும்.

*சர்க்கரை நோய், வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்னை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

*பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

*வெயிலில் காய வைத்த பனங்கிழங்கை (பச்சையாக) எடுத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஈர மாவு ஆக அரைத்து தோசையாக சுட்டு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். மேலும் உடலுக்கு எதிர்ப்புச்சக்தியாகவும் செயல்பட்டு உடலைக் காக்கும்.

*பனங்கிழங்கில் பித்தம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. எனவே இதைச் சாப்பிட்டப் பின் மிளகு ஐந்து எடுத்து வாயில் போட்டு மென்றுவிட வேண்டும். பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலு கிடைப்பதுடன், ஆரோக்கியம் உண்டாகும்.

*பூமியில் இருந்து பனங்கிழங்கை பிரித்தெடுக்கும் போது, விதையில் இருந்து தவின் கிடைக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி உள்ளிட்ட நோய்கள்  குணமாகும்.

*ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்குவதில் பனங்கிழங்கு பெயர் பெற்றது. அதாவது கிளைசெமிக் இண்டெக்ஸ் பனங்கிழங்கில் குறைவாக இருப்பதால் உணவின் குளுக்கோஸை மெதுவாக உறிஞ்சி ரத்தத்தில் கலக்கச் செய்கிறது.

*ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் பனங்கிழங்கு சாப்பிடலாம். இதில் இரும்புச் சத்து நிறைவாக இருப்பதால், ரத்த சோகை பிரச்சனை இருந்தாலும் சரி செய்து எப்போதும் உங்களை ஆற்றலுடன் வைத்துக்கொள்ள உதவும். இரும்புச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும்.

*பனங்கிழங்கில் கால்சியம் சத்தும் அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு உறுதித் தரும். எலும்பு முறிவு, தசை சுருக்கம், எலும்பு அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருக்காது. கூடுதலாக
மெக்னீசியமும் இருப்பதால் எலும்பு ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக இருக்கும்.

- எஸ்.மேரி ரஞ்சிதம், சிவகங்கை.