காளி வேடமணிந்து வினோத தசரா பண்டிகை!



நவராத்திரி பத்து நாட்கள் தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் கொலு வைத்து வழிபாடு செய்வது வழக்கம். வட நாட்டில் நவராத்திரி பண்டிகையினை தசரா என்று அங்கு வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். அந்த தசரா பண்டிகையினை தமிழகத்தில், திருநெல்வேலி அருகேயுள்ள குலசேகரப்பட்டனத்தில் மிகவும் விமர்சையாக கொண்டாடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவினை ஒவ்வொரு நவராத்திரியின் போதும் கொண்டாடுவதை அந்த ஊர் மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகரப்பாண்டிய மன்னனுக்கு முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள் வழங்கியதால் அந்த மன்னனின் பெயரால் இவ்வூர் குலசேகரப்பட்டனம் எனப் பின்னர் அழைக்
கப்பட்டது. குலசையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும், மைசூர் பகுதியை ஆண்ட மன்னர்களுக்கும் முன்பு உறவு முறை ஏற்பட்டதாம். இதனால் தான் மைசூரில் கொண்டாடப்படும் தசரா திருவிழா குலசையிலும் கொண்டாடப்படுவதாக அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.

தூத்துக்குடியை ஒட்டியுள்ள கடலில் தாராளமாக கிடைத்த முத்துக்களை எடுத்து அதை ஆபரணங்களாக்கி பாண்டிய மன்னர்கள், இந்த அம்மனுக்கு சூட்டி அழகு பார்த்ததால் அம்பிகை முத்தாரம்மன் (முத்துக்களை அள்ளித் தருபவள்) என்று பெயர் பெற்றதாகவும் ஒரு கதை உள்ளது. மேலும் உடலில் தோன்றும் அம்மை முத்துக்கள் நீங்க, தன்னை வேண்டி வழிபடுபவர்களுக்கு குணமாக்குபவள் என்பதாலும் முத்தாரம்மன் என்று பெயர் பெற்றதாகவும் மற்ெறாரு கதைகளில் உள்ளது. இத தவிர வேறு கதைகளும் குறிப்பிடுகிறார்கள்.

முன்னொரு காலத்தில் வரமுனி என்றொரு முனிவர் வாழ்ந்துள்ளார். அவரின் வீடு வழியாக அகத்திய மாமுனிவர் வந்துள்ளார். அவரை ஆணவத் திமிரால் மதிக்கத் தவறியதோடு மட்டுமின்றி அவமரியாதையும் செய்துள்ளார். மனம் நொந்த தமிழ்ஞானி, வரமுனிக்கு எருமை தலையும் மனித உடலும் பெறுவாய் எனச் சாபமிட்டு சென்றுள்ளார். அசுரனாக மாறிய வரமுனி மூன்று உலகங்களையும் அடிமைப்படுத்தி, மகிஷாசூரன் எனப் பெயர் பெற்றான்.

அவனுடைய இடையூறுகளை  தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தி கடும் தவம் புரிந்தனர். அவர்கள் நடத்திய வேள்வியால் ஒரு பெண் குழந்தை உருவில் லலிதாம்பிகை தோன்றினாள். ஒன்பது நாட்களில் பராசக்தி மறுவடிவான காளியாக மாறி மகிஷாசூரனை வதம் செய்த அந்த 10ம் நாள் தான் தசரா என அழைக்கப்படுகிறது. அரக்கனை அழிப்பதற்காக சிவபெருமானிடம் முத்தாரம்மன் சூலம் பெற்று சம்ஹாரம் செய்ததாகவும் வரலாறு உள்ளது. எனவே முத்தாரம்மன் ஏந்தி வரும் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் இங்கு நடைபெறும்.

விஜயதசமி தினத்தன்று சரியாக இரவு 12 மணிக்கு மகிஷாசூரனை வதம் செய்து பிறகு முத்தாரம்மன் தேரில் பவனி செல்வாள். தமிழ்நாட்டில் அம்பாள் தேரில் ஏறி பவனி செல்வது இந்த தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது. பொதுவாக நவராத்திரியின் போது எல்லா கோயில்களிலும் பத்து நாட்கள் கொலு வைப்பது வழக்கம். ஆனால் இங்கு கொலுவில் வீற்றிருக்கும் கடவுள்களின் திருவுருவங்களை வேடமணிந்து வழிபடுகின்றனர்.

10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் குறவன், குறத்தி, ராஜா, குரங்கு, கரடி, மாடன், கருப்பசாமி, முருகன், கிருஷ்ணர், அம்மன், கணபதி, சிவன், பெருமாள், காளி வேடங்கள் மட்டுமில்லாமல் கிறிஸ்து, முஸ்லீம் வழிபாட்டினர் வேடங்களும் அணிந்து முத்தாரம்மனை வழிபடுகிறார்கள். இங்கு எல்லா மதங்களும் ஒன்று என்பதால், எந்தவித பாகுபாடும் இல்லாமல் நடக்கும் திருவிழா இது. 10 வருடங்களாக காளி வேடம் அணிந்து செல்லும் விஜய் இந்த விழாவைப் பற்றி விவரித்தார்.

‘‘குலசேகரப்பட்டனம் ஊர்லதான் முத்தாரம்மனும் ஞானமூர்த்தீஸ்வரரும் சுயம்புவா உருவானாங்க. அம்மை நோய்கள் இருக்கிறவங்க இங்க போய் வேண்டிக் கொண்டா  சரியாகும். அரக்கனை கொல்ல முத்தாரம்மன் காளி அவதாரம் எடுத்து அழிச்சதால இங்கு தசரா பண்டிகையை விமர்சையாக கொண்டாடுறோம்.

வேண்டும் குறைகளை நீக்கும் வல்லமைக் கொண்டவள் இந்த முத்தாரம்மன். நாங்க ஒன்று வேண்டி அது நிறைவேறினால், சாமி வேடம் கட்டி ஆடுவோம். சாமி வேடம் கட்டி ஆடுறவங்க மேல், முத்தாரம்மன் இறங்கி வந்து சாமியாடி அருள் சொல்லுவா. பத்து நாள் நடக்கிற திருவிழால முதல் நாள் கொடியேற்றி அம்மனுக்கு காப்பு கட்டுவோம். அதன் பிறகு பல ஊர்களில் இருந்து மக்கள் வேடம் அணிந்து வருவாங்க.

இதில் ஒவ்வொரு குழுவாக வேடம் போடுவாங்க. அப்படி போடும் போது அதில் ஒருத்தர் கண்டிப்பா காளி வேடம் போட்டிருக்கணும். காரணம் எவ்வளவு குழுவாக வந்தாலும் அந்த குழுவினை இயக்கி முன்னேற்றி செல்வது காளி வேடம் போட்டவர்கள் தான். காரணம் அரக்கனை அழிக்க காளியாக அம்மன் உருமாறியதால் அந்த வேடம் ரொம்பவே முக்கியம். ஒருவர் காளி வேடம் போடணும்னா 48 நாள் விரதம் இருக்கணும். அந்த நாட்கள் மதியம் மட்டும் பச்சரிசி சாதத்தில் கறிவேப்பிலை கலந்து சாப்பிடுவோம். இதே போல ஒவ்வொரு வேடத்துக்கும் 90 நாட்கள், 60 நாட்கள், 48 நாட்கள், 21 நாட்கள் என விரதம் இருக்கணும்.  

10 நாட்களும் குழுவாக வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று மக்களிடையே தர்மம் வாங்குவோம். இதற்கும் ஒரு புராண கதை உள்ளது. ஒரு காலத்தில் முத்தாரம்மன் வறுமையில இருந்ததாகவும், அதை ேபாக்க குறத்தி, முருகன், துர்கை அம்மன், காளி போன்ற வேடங்கள் அணிந்து மக்களிடையே தர்மம் வாங்கியதாக ஒரு கதை உள்ளது. அதன் தொடர்ச்சியாக தான் நாங்களும் 10 நாட்கள் மக்களிடையே சென்று தர்மம் பெறுகிறோம்.

இப்படி தர்மமாக பெறப்படும் பணம் மற்றும் பொருட்களை நாங்க தானமாக கோயில் அன்னதான உண்டியலில் போட்டுவிடுவோம். இதுநாள் வரை நாங்க தானமாக பெற்ற பணத்தை எங்களின் தனிப்பட்ட செலவிற்காக எடுத்துக் கொண்டதில்லை. பெருமாளின் தசாவதாரம் போல் முத்தாரம்மனும் 10 நாட்கள் துர்கை, விசுவகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர், நவநீதகிருஷ்ணர், மகிஷாசூரமர்த்தினி, ஆனந்தநடராஜர், அலைமகள், கலைமகள் என ஒவ்வொரு வேடங்களில் காட்சி தருவாள். கடைசி நாள் காளி வேடம் அணிந்து அரக்கனை சூரசம்ஹாரம் செய்ததோடு இந்த பண்டிகை முடியும்’’ என்றார் காளி வேடமிட்டபடி விஜய்.

செய்தி: மா.வினோத்குமார்

படங்கள்: பரமகுமார்