உடல் பருமனை குறைக்கும் பலூன் தெரபி!



இன்றைய நவ நாகரிக உலகில் உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இருபது வருடத்திற்கு பின்னால் நோக்கினால், 30- 40 வயது மேற்பட்டவர்கள் தான் உடல் பருமனால் அவதிப்பட்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில் சிறு வயது குழந்தைகளும் இந்த பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் பருமன்... இந்த ஒரு விஷயம் மட்டுமே பல வித நோய்க்கான முக்கிய பாலமாக அமைந்து வருகிறது.

குறிப்பாக கொரோனா நோய் தாக்கிய காலத்தில் மக்கள் வீட்டிலேயே இருந்ததால் அவர்களின் உணவுப் பழக்கத்தில் பல வித மாற்றம் ஏற்பட்டது. விளைவு உடல் பருமன். இந்தப்  பிரச்சினைக்கு தீர்வு காண உலக-முன்னணி எடை மேலாண்மை நிறுவனமான அல்லூரியன் உடல் பருமனை கட்டுப்படுத்தும் மாத்திரைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நிறுவனம் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பொது சுகாதார சேவைகள் இயக்குநரகத்தால் மேற்பார்வையிடப்பட்டு, இந்தியாவின் தேசிய ஒழுங்குமுறை ஆணையத்தின் மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பால் (CDSCO), முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர். சாந்தனு கவுர், உடல் பருமனை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு குறிக்கோளுடன் பல ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். 2009ல், ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியில் மருத்துவப் படிப்பை முடித்தவர். இவர் தன் நண்பர் முன்னாள் ஹார்வர்ட் பேராசிரியரான டாக்டர் ராம் சுட்டானியுடன் இணைந்து உடல் பருமன் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். உடல் பருமனை கட்டுப்படுத்தும் மாத்திரை குறித்து டாக்டர் சாந்தனு கவுர் விவரித்தார்.

‘‘தேசிய குடும்ப நல ஆய்வின் படி 2016 மற்றும் 2021க்கு இடையில் இந்தியாவில் உடல் பருமன், பெண்களிடையே 24% ஆகவும், ஆண்களிடையே 23% ஆகவும் அதிகரித்துள்ளது. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், பல, மணி நேரம் அமர்ந்த நிலையில் பணியில் ஈடுபடுவது, பாதுகாப்பற்ற சிகிச்சை முறைகள் உடல் பருமன் அதிகரிப்பதற்கு பங்களித்துள்ளன. இது நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற விளைவுகளுக்கு வழிவகுக்கும். இந்த திட்டம் உணவுக் கட்டுப்பாடு மூலம் எடை குறைப்பு இலக்குகளை அடைய முடியாதவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை, செய்ய விரும்பாதவர்களுக்கு பொருந்தும்.

இந்த சிகிச்சை முறைக்கு ஒருவர் செலவிட வேண்டிய நேரம் 15 நிமிடம் தான். சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அறுவை சிகிச்சை, லேசர் சிகிச்சை எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு மாத்திரை சாப்பிட்டால் போதும். அந்த மாத்திரையில் காற்று வெளியேற்றப்பட்ட இரைப்பை பலூன் இருக்கும்.

இந்த மாத்திரை ஒருவரின் வயிற்றுக்குள் சென்றவுடன் அதில் இருக்கும் இரைப்பை பலூன் விரிவடையும். இதனால் ஒருவரால் குறைந்த அளவு உணவு மட்டுமே உட்கொள்ள முடியும். சுமார் 16 வாரங்கள் உடலில் இருக்கும் இந்த பலூன் நாளடைவில் சுருங்கி நம்முடைய ஆசனவாய் வழியாக வெளியேறிவிடும். இந்த சிகிச்சையினை ஒரு லட்சம் பேருக்கு கொடுத்திருக்கிறோம்.

மேலும் உலகளவில் 600 கிளினிக்குகளுடன் இணைந்து, செயல்பட்டு வருகிறோம். மேலும் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களை தொடர் கண்காணிப்பு செய்ய ஒரு குழு இயங்கி வருகிறது. அவர்கள் ஹெல்த் டிராக்கரை கொண்டு சிகிச்சை பெற்றவர்களின் உடல்நிலையினை கண்காணித்து வருவார்கள்.

பலூன் கரைந்து வெளியேறிய பிறகும் ஒருவர் தங்களின் உணவு முறையினை கடைப்பிடிக்க வேண்டும். எங்களிடம் சிகிச்சை பெறுபவர்களின் பாதுகாப்பே முன்னுரிமை. மேலும் இந்த சிகிச்சை பெற வருபவர்களுக்கு முழுமையான மருத்துவ ஆய்வு செய்த பிறகு தான் சிகிச்சை அளிக்கப்படும்’’ என்றார் டாக்டர் சாந்தனு கவுர்.

பிரியா மோகன்