பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கும் கமர்ஷியல் போட்டோகிராபர்!



பிராண்டெட் நிறுவனங்களுக்கான கமர்ஷியல் போட்டோகிராபராக செயல்பட்டு வரும் ப்ரீத்தி, சுமார் 10 பெண் சுய தொழில் முனைவோர்களை உருவாக்கியுள்ளார். மேலும் 1500 பெண்களுக்கு கமர்ஷியல் போட்டோகிராபி குறித்து பயிற்சியும் வழங்கி வருகிறார். ‘‘2018ம்  ஆண்டு என் மகள் பிறந்தாள். அவளை போட்டோ எடுப்பதற்கும், வீட்டு விசேஷங்களை படம் பிடிக்கவும் கேமரா வாங்கினேன். இப்போது அதுவே என்னுடைய தொழிலாக மாறிவிட்டது’’ என்று பேசத் துவங்கினார் ப்ரீத்தி.

‘‘மதுரையை சொந்த ஊராக கொண்ட இவர், தகவல் தொழில்நுட்பத்தில் இளநிலை பட்டமும், எம்.பி.ஏவும் முடித்திருக்கிறார். தற்போது குஜராத் மாநிலம் சூரத்தில் வசித்து வரும் இவர், சோப்பு, ஷாம்பு, மருந்துகள், உணவு பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் பிராண்டெட் நிறுவனங்களுக்கான கமர்ஷியல் போட்டோகிராபர் மட்டுமில்லாமல் குழந்தைகளையும் படம் பிடித்து வருகிறார்.
‘‘எனக்கு சின்ன வயசில் இருந்தே கேமராவை கையில் பிடிக்க அலாதி பிரியமாக இருக்கும். கண்ணில் தென்படுவதை எல்லாம் படம் பிடிப்பது தான் என்னுடைய பொழுது போக்காக இருந்தது. போட்டோகிராபி மீது அதீத ஆர்வம்ன்னு சொல்லலாம். இளங்கலை பட்டப்படிப்பிற்கு பிறகு எம்.பி.ஏ படிச்சேன்.

அதன் பிறகு போட்டோகிராபி தான் படிக்க நினைத்தேன். இதற்கிடையில் எனக்கு திருமணமானது. ஆனால் எப்படியும் போட்டோகிராபி துறையில் முதுகலைப் பட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் என் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. அதனால் திருமணம் முடித்த அடுத்த வருடம் போட்டோகிராபி குறித்த பயிற்சியில் ஈடுபட்டேன்.
அதற்கான வகுப்புகளுக்கு செல்ல ஆரம்பித்தேன். போட்டோகிராபி சார்ந்த வீடியோக்களை பார்த்தேன். அந்த துறை சார்ந்த நிபுணர்களின் பேட்டி மற்றும் அனுபவங்களை கேட்பேன். போட்டோக்களை எடுத்து பழக ஆரம்பிச்சேன். இரண்டரை ஆண்டுகள் காலளவிலான போட்டோகிராபி குறித்த முதுகலை படிப்பிற்கு நான் தனிப்பட்ட முறையில் பயிற்சி எடுத்தேன்’’ என்றவர் அந்த துறையுள்ள கல்லூரிகளில் விண்ணப்பித்தும் உள்ளார்.

‘‘இந்தியாவின் முதன்மை கல்வி நிறுவனங்களில் ஒன்றான அகமதாபாத்தில் இயங்கி வரும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் கல்வி நிறுவனதில் போட்டோகிராபி சார்ந்த முதுகலைப் பட்டப்படிப்பு உள்ளது. அங்கு நாம் விண்ணப்பித்த உடனே நம்மை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அதற்கான பிரத்யேகமான நேர்காணல் இருக்கும். அதில் நாம் எடுக்கும் புகைப்படங்கள் தரமாக உள்ளதா, இங்கு சேர்வதற்கு முன் போட்டோகிராபி குறித்த பயிற்சிகள் என்ன எடுத்திருக்கிறோம்.

இந்த துறையில் நாம் சேர்வதற்கு முழுமையான ஆர்வத்தில் இருக்கிறோமா என நம்முடைய திறமை மற்றும் மனநிலையினை நேர்காணல் கொண்டு தான் ஒவ்வொரு மாணவர்களையும் தேர்வு செய்வார்கள். நான் இந்த கல்வி நிறுவனத்தில் சேர வேண்டும் என பல பயிற்சிகள் எடுத்தும் துரதிருஷ்டவசமாக அந்த கல்வி நிறுவனத்தில் படிக்க வாய்ப்பு எனக்கு கிடைக்கல’’ என்று கூறும் ப்ரீத்தி, போட்டோகிராபி துறையில் எவ்வாறு தனக்கான ஒரு இடத்தினை பதிவு செய்தார் என்பதைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறைய பேருக்கு வேலை இல்லாமல் போனது. ஆனால் எனக்கான முதல் ஆஃபர் ஊரடங்கு காலத்தில் தான் கிடைத்தது. அந்த நேரத்தில் பல கட்டுப்பாடுகள் இருந்ததால், வெளியே போய் ஷுட்டிங் எல்லாம் எடுக்க முடியல. வீட்டில் இருந்த சாதாரண பொருட்களான சோப்பு, ஷாம்புவை போட்டோ எடுத்தேன். கொஞ்சம் சிரமப்பட்டாலும், நான் இது குறித்து பயிற்சி எடுத்தது கைகொடுத்தது. எங்க அடுக்குமாடி குடியிருப்புக்கு என தனிப்பட்ட வாட்ஸ்சப் குரூப் இருக்கு. நான் எடுத்த புகைப்படத்தை அதில் பதிவு செய்தேன். எங்க குடியிருப்பில் பல பெண்கள் தொழில் முனைவோராக இருக்காங்க.

அவங்க நான் எடுத்த புகைப்படத்தைப் பார்த்து தங்களின் தயாரிப்பு பொருட்களை புகைப்படம் எடுத்து தரச்சொன்னாங்க. இதன் மூலம் அவர்களின் பொருட்களை கமர்ஷியல் முறையில் மார்க்கெட்டிங் செய்ய விரும்பினாங்க. நானும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டேன். அவர்களின் அந்த புகைப்படங்கள் மூலம் பல பிராண்ட் நிறுவனங்கள் எனக்கு வாய்ப்பளிக்க முன் வந்தார்கள். அவர்களின் தயாரிப்புகளுக்கு கமர்ஷியல் போட்டோகிராபராக நான் மாறினேன்.

வீட்டில் இருந்தபடியே செயல்படுவதால், என்னால் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு பிடித்த வேலையும் பார்க்க முடிகிறது. எல்லாம் கமர்ஷியல் பிராண்ட் என்பதால், அவர்கள் தங்களின் பொருட்களை எனக்கு அனுப்பி எப்படி புகைப்படம் வேண்டும்னு சொல்லிடுவாங்க. நான் புகைப்படம் எடுத்து அவர்களுக்கு அனுப்பிடுவேன். இதற்காக வீட்டில் ஒரு ஸ்டுடியோ அமைத்திருக்கேன்’’ என்றவர் போட்டோகிராபி துறையில் ஆர்வம் உள்ள பெண்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார்.

‘‘கடந்த 2020ம் ஆண்டு 300 பெண் உறுப்பினர்களை கொண்ட ‘ஐ லவ் போட்டோகிராபி’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கினேன். அதன் மூலம் பலர் தங்களுக்கு பயிற்சி அளிக்க சொல்லி கேட்டாங்க. தற்போது சுமார் 1500க்கும் மேற்பட்டவர்களுக்கு போட்டோகிராபி குறித்த பயிற்சி வகுப்புகள் நடத்துவது, ஒருங்கிணைப்பது, புகைப்பட போட்டிகள் நடத்துவது என செயல்பட்டு வருகிறேன். என்னுடைய முகநூல் மூலம் என்னிடம் பயிற்சி பெற்ற 10 பெண்கள் தங்கள், வீடுகளில் சிறிய ஸ்டுடியோவினை அமைத்து அவர்களும் கமர்ஷியல் போட்டோகிராபராக செயல்பட்டு வருகிறார்கள்’’ என்றவர் போட்டோகிராபி துறையில் விருதும் பெற்றுள்ளார்.

‘‘இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படும் பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மும்பையைச் சேர்ந்த கலை கல்விக்கான தேசிய அகாடமி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கலைப் பிரிவில் போட்டோகிராபி துறையில் பல பெண்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கி வருவதற்காக 2021ம் ஆண்டுக்கான சிறந்த பெண் விருது எனக்கு கிடைத்தது.

இந்த துறையை பொறுத்தவரை பெண்கள் மிகவும் குறைவாகத் தான் உள்ளனர். காரணம் போட்டோகிராபியை ஒரு பெண் தொழிலாக செய்வதை வீட்டில் இருப்பவர்கள் விரும்புவதில்லை. என்னுடைய ஃபேஸ்புக் குழுவில் இருக்கும் பல பெண்கள் வீட்டிற்கு தெரியாமல் தான் போட்டோகிராபி கற்று வருகிறார்கள்.

பெண்களால் எதையும் செய்ய முடியும் என சமூகம் உணர்ந்து வந்தாலும், ஒரு சில துறைகளில் மட்டும் அவர்களுக்கானது இல்லை என்ற நிலைதான் நீடித்து வருகிறது. என் கணவர் மற்றும் பெற்றோர் உறுதுணையாக இருந்ததால் தான் என்னால் வெற்றிகரமாக செயல்பட முடிந்தது. எனக்கு கிடைத்த அந்த சுதந்திரம் மற்ற பெண்களுக்கும் கிடைக்கும் காலம் இன்னும் வெகு தொலைவில் இல்லை’’ என்கிறார் ப்ரீத்தி நிறைவாக.

வெங்கட்