ஏற்றமிகு வாழ்வருளும் ஏகௌரி அம்மன்வல்லம்

சக்தி தரிசனம்


தஞ்சாசுரனை அழித்து தஞ்சையை நிறுவக் காரணமான அம்பிகைதான் ஏகௌரி. வல்லத்தில் ஏகவீரி எனும் ஏகௌரி அம்மனாக வீரக்கோலம் பூண்டாள். தஞ்சாசுரனை வதம் செய்த கோபத் தணல் முகத்தில் செம்மை பூசியிருந்தாலும், விழிகள் மட்டும் கருணை பொழிந்து கொண்டிருக்கின்றன.தஞ்சாசுரன் கடுந்தவம் மேற்கொண்டான். கண்கள் மூடி ஆழ்ந்தான். பல ஆண்டுகள் அப்படியே கிடந்தான். அவனுடைய தவத்தின் தீவிரம் ஈசனை உரசியது, உருக்கியது. இத்தனை நெடுங்காலம் தவம் செய்தவன் முன்பு கயிலைப்பிரான் கனல்மிகு கருணையுடன் தோன்றினார். பெருஞ்சோதியை பார்த்த அசுரன், பெருமகிழ்வு கொண்டான். ‘என்ன வேண்டும், கேள்’ என்றார் மகாதேவன். ‘மரணமிலாப் பெருவாழ்வு வழங்கிட வேண்டுகிறேன்’ என்று தலைக்கு மேல் கைகள் கூப்பினான்.

ஈசன் சிரித்தார். ‘பெருவாழ்வு என்பது மரணமில்லா வாழ்க்கையில் இல்லை அன்பனே! அந்த வாழ்க்கை துக்கம்சேர் குட்டைதான். அதோடு, பிறந்ததும், இறக்கப் போவதும் உன் விருப்பத்துக்கு அப்பாற்பட்டது. கால தத்துவங்களை உன் தவ வலிமைக்குள்ளும், நான் அருளும் வரத்துக்குள்ளும் அடக்க முயற்சிக்காதே. வேறு ஏதேனும் கேள்’ என்றார், முற்றும் உணர்ந்த முக்கண்ணன். தஞ்சன் யோசித்தான். தன் விருப் பத்தையே கொஞ்சம் மாற்றிக் கேட்டால் என்ன? ஈசன் ஏமாறமாட்டாரா என்ன? ‘கயிலைப் பிரானே, எந்த ஆணாலும் எனக்கு மரணம் நிகழக் கூடாது. ஆனால் ஒரு பெண்ணால் எனக்கு மரணம் நேரலாம். ஏனென்றால் எந்தப் பெண்ணாலும் எனக்கு முடிவைத்தர முடியாது. மேலும், நான் தவமிருந்த இந்தத் தலம் என் பெயரால் வழங்கப்பட வேண்டும்’ என்று தந்திரமாகக் கேட்டான். ஈசனும் மனதுக்குள் சிரித்தபடி, அவனுடைய மரண முடிச்சை அங்கேயே இறுகக் கட்டினார். தஞ்சன், தவ சக்தி களோடு, வரமும் கிடைத்த தெம்பில் தன் பரம வைரிகளான தேவர்களிடம் புதுப்பிக்கப்பட்ட, அதிகரிக்கப்பட்ட தன் பலத்தைக் காட்டப் புறப்பட்டான். அசுரக் கூட்டங்கள் தஞ்சனை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றன.

கயிலையையும் தீண்டுமளவுக்கு யாகத்தீ வளர்த்து பக்திநெறி காக்கும் யோகிகளையும், முனிவர்களையும் கவலைப் புகை சூழ்ந்தது. தேவர்களின் முகமும் இருண்டுவிட்டது. பூலோகத்தைப் பந்தாடிய தஞ்சனின் படைகள்  விண்ணுலகுக்கும் விஜயம் செய்தன. இந்திரனும், தேவர்களும் மின்னல் வேகத்தில் தேவருலகம் விட்டுப் புறப்பட்டு, பிரம்மனையும் அழைத்துக் கொண்டு வைகுண்டம் அடைந்தனர். பள்ளி கொண்ட பெருமாளின் பாதம் பிடித்து கதறியழுதனர். ‘‘அவனை அழித்தால்தான் பூலோகவாசிகள் செய்யும் யாகத்தின் அவிர்பாகத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியும். அவனை அழிக்கும் மகாசக்தி எங்குள்ளது, யாரால் தஞ்சனின் வதம் நிகழப்போகிறது என்றே புரியவில்லை. ஏனெனில் எந்த ஆணாலும், அது இறைவனே ஆனாலும் தன்னை அழிக்க முடியாதபடி அவன் வரம் பெற்றிருக்கிறான்’ எனப் புலம்பினார்கள். இதற்கிடையில்  தஞ்சாசுரன் தேவலோகத்தை சூறையாடினான். பூலோக முனிகளையும், ரிஷிகளையும் சிறை பிடித்தான். யாக குண்டத்தில் பலரை தூக்கி எறிந்தான். அப்படியே அவர்களை அமிழ்த்திப் புதைத்தான். தஞ்சனின் ஆணவம் தலைவிரித்தாட அதற்கு அவனுக்குக் கிடைத்த வரம் பாதுகாப்பு வளையமாக சுற்றி நின்றது.

பாற்கடல் பரந்தாமன், ‘மகாசக்தியான கௌரியே அவனை வதம் செய்வாள். அப்போது அவள் ஏகௌரி என்று பெயர் பெற்றிருப்பாள். அவன் பெற்ற வரமே அவனை வதம் செய்யப்போகிறது. கவலை வேண்டாம். கயிலை நாயகனிடம் செல்லுங்கள்’ என்று சொல்லி ஆறுதலளித்தார். தேவர்கள் குதூகல மானார்கள். ஈசனையும், பார்வதி தேவியையும் தொழுதார்கள். தேவர்களின் வேதனையைப் புரிந்துகொண்ட ஈசன், தஞ்சாசுரனின் அழிவு  நெருங்கி விட்டதை, உமையை சங்கேதமாகப் பார்த்து உணர்த்தினார். அன்னையும் தயாரானாள். இந்திரலோக அரண்மனையின் சிம்மாசனத்தில் செருக்குடன் வீற்றிருந்த தஞ்சன் திடீரென ஏற்பட்ட அதிர்ச்சி உணர்ந்து தடுமாறினான். வெகுண் டெழுந்தான். தன்னையும் அசைத்துப் பார்க்கும் ஒரு சக்தி இருக்கிறதா என்ன? அவன் முன் அம்பிகை தோன்றினாள். வானை அடைத்து நின்றாள். தஞ்சன் திடுக்கிட்டான். முற்றிலும் இருளாகிவிட்ட விண்ணை வெறித்தான்.

கௌரி காளியானாள். எண்கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தி ரத்தச் சிவப்பேறிய கண்களுக்குள் கோபம் கொப்பளிக்க, தஞ்சன் முன்பு தோன்றினாள். தஞ்சன் வெறிபிடித்து அலறினான். யுத்தத்துக்குத் தயாரானான். வில் வளைத்து மழையாகப் பாணங்களைத் தொடுத்தான். தேவி தன் சிறு அசைவால் அந்த பாணங்களை புறந்தள்ளினாள். சிம்மத்தின் மீதேறி அமர்ந்து கர்ஜித்தாள். தஞ்சனின் மார்பு மீது கதையால் அடித்து உதைத்துத் தள்ளினாள். மாய உருவங்கள் எடுத்து அம்பிகையைத் தாக்கினான் தஞ்சன்.  இறுதியில் தன் மூதாதையர் போல எருமை உருகொண்டு ஆக்ரோஷமாக தேவி மீது பாய்ந்தான். சிறிதும் தயங்காமல் ஏகௌரியானவள் தஞ்சாசுரனின் தலையை சீவி எறிந்தாள். தேவர்கள் ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்கள். தஞ்சனை வதைத்த பின்னும் சீற்றம் குறையாத தேவி, வனமெங்கும் அலைந்தாள். அவளுடைய வெப்பத்தால் நீர் நிலைகள் வறண்டன. தேவர்களும், மனிதர்களும் சிவனிடம் முறையிட்டனர். ஈசனும் ‘ஏ,கௌரி, சாந்தம் கொள்’ என்று கேட்டுக் கொண்டார். அமைதியடைந்த தேவி நெல்லிப்பள்ளம் என்று அழைக்கப்பட்ட வல்லத்தில் அமர்ந்தாள். சீற்றம் குறைந்து கருணை கொண்டாள். அருகே வருவோரையும் அமைதிப்படுத்தினாள்.

அருட்கோலம் பூண்டு அண்டி வந்தவர்களுக்கு வேண்டியதை அள்ளிக் கொடுத்தாள். அசுரன் கேட்டுக் கொண்டபடி அவன் பெயராலேயே அவ்வூருக்கு தஞ்சாவூர் என பெயரிட்டார்கள். அந்த அன்னையின் திருவுருவில் பதித்த பார்வையைப் பறிக்க மனமில்லாது அம்மையின் திருமுகத்தை தரிசிக்கிறோம். தீச்சுடர் பறக்கும் கேசங்கள். எட்டுத் திருக்கரங்களுடன் தாமரை பீடத்தின் மீது அமர்ந்த கோலம். அம்மனின் பாதத்தில் சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காலடியில் இருக்கும் அரக்கனை சூலத்தால் குத்திக் கொண்டிருக்கிறாள். சூலம் பிடித்த கரங்களின் உறுதி அவளுடைய ஆவேசத்தைக் காட்டினாலும், அந்தக் கொடியவனையும் தன் ஞானபதத்தில் சேர்த்துக் கொண்ட கருணை அவளுடைய முகமெங்கும் பரவியிருக்கிறது. ஏகௌரி எனும் நாமமே அனைத்து செல்வங்களையும் தரக்கூடியது. எலுமிச்சம்பழ மணமும், குங்குமத்தின் சுகந்தமும் குழைந்து அந்த சந்நதியில் கமழ்கிறது. தரிசனம் கிட்டிய அந்தக் கணத்திலிருந்தே வாழ்வு, வளமும் ஏற்றமும் பெறுவதை பக்தர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள். ‘கௌரியம்மா...கௌரியம்மா...’ என்று எளிய கிராம மக்கள் தங்கள் வீட்டு மகளாக அவளை பாவித்து வழிபடுவதை  இங்கே சகஜமாகக் காணலாம்.

அன்னையை தரிசிக்கும் போதே அவள் இங்கே கோயில் கொண்ட வரலாற்றை யும் சொல்கிறார்கள். இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே வல்லம் என்ற இந்தத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. அகநானூற்றில் பாடலொன்றில் பரணர் எனும் புலவர், ‘‘சோழர் மருக னெடுங் கதிர் நெல்லின் வல்லங்கிழவோ னல்லடி யுள்ளனாவும்’’ என்று பாடி, கிழவன் நல்லடி போன்ற சோழ மரபினரால் ஆளப் பெற்ற ஊர் இது என்று பதிவு செய்திருக்கிறார். வல்லப சோழன் என் பவன் வல்லபபுரி எனும் இந்த வல்லத்தைத் தோற்று வித்திருக்கிறான். ராஜராஜசோழன் இந்த வல்லத்து காளாபிடாரியை ‘கைத்தலைப் பூசல் நங்கை’ என அழைத்திருக்கிறான். நாயக்கர் காலத்தில் செவ்வப்ப நாயக்கரும், அச்சுதப்ப நாயக் கரும் இணைந்து வல்லத்து ஆலயத்தை புதுப்பித்து இருக்கிறார்கள்.  வரலாறும், புராணமும் போட்டிப் போட்டுக் கொண்டு புகழும் இக்கோயில், வல்லத்திலிருந்து சற்றே தள்ளி அமைந்திருக்கிறது. இங்கு ஏகாந்தமாக அமர்ந் திருக்கிறாள் ஏகௌரி. வடக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயில் திருச்சுற்று மதில்களுடன் அமைந்துள்ளது. சோழரின் கட்டிடக் கலைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் கோயிலின் கருவறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அம்மனுக்குப் பரிவார தேவதைகளாக மதுரை வீரன், சங்கிலி கருப்பன் சாலியக்காத்தான், லாட சந்நியாசி, பட்டவர் ஆகியோர் கோயிலின் நுழைவாயிலுக்கருகேயே வீற்றிருக்கிறார்கள்.

கருவறையை நெருங்கும் முன்னர் தேவிக்கு அருகில் சுப்பிரமணியர் தனி மண்டபத்தில் அருள் பரப்புவதைக் காணலாம். அங்கேயே வாராகி, பிரத்யங்கரா, ஆதிசங்கரர், நாகர் போன்றோரின் சிலைகள் வழிபடப்படுகின்றன. கோயிலிலேயே ஒரு தூணுக்கு முன் சூலத்தை பதித்து பூஜிக்கிறார்கள். விமானம் முழுதும் பெண் தெய்வங்களின் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. எப்போதுமே தென்றல் தழுவிச் செல்லும் இனிய சூழல் அங்கு நிலவுகிறது. எல்லா முக்கிய பண்டிகைகளும், விழாக்களும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலயத்தின் உற்சவ மூர்த்தியை வல்லம் ஊரின் மையத்தே விளங்கும் அம்மன் கோயிலில் வைத்திருக்கிறார்கள். ஏகௌரியம்மனை தரிசித்து கோயிலை வலம் வந்து வணங்க ஏராளமான சக்தி நமக்குள் தளும்பித் தெறிப்பதை எளிதாக உணரலாம். இத்தலம் தஞ்சாவூர்-திருச்சி சாலையில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது. வல்லத்திலிருந்து வடக்கு நோக்கி செல்லும் ஆலக்குடி சாலையில் 1 கி.மீ. பயணித்தால் ஏகௌரி அம்மன் ஆலயத்தை அடையலாம்.

-கிருஷ்ணா
படங்கள் : தஞ்சை பரணி