வாழ்க்கை பாடம் கற்றுத்தரும் பரதம்!பரதநாட்டிய கலைஞர் வித்யா பவானி

இன்றைய காலக்கட்டத்தில் கணவன்-மனைவி இருவருமே வேலைக்கு சென்றால்தான் குடும்பத்தை நகர்த்த முடியும். அப்படி இருந்தும் இருவரும் ஒவ்வொருவரின் விருப்பத்திற்காக தங்களின் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக தொழில் செய்ய துவங்கியுள்ளனர். கடந்த 20 வருடமாக ‘ஸ்கந்தா பதிப்பகம்’ நடத்தி வரும் சுரேஷ் மற்றும் வித்யா பவானி தம்பதியினர் பரதம், கர்நாடக சங்கீதம் மற்றும் பிற நடனக்கலை குறித்த நூல்களை ஆங்கிலத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

சுரேஷ் ஆங்கில பத்திரிகையில் பத்திரிகை யாளராக வேலைப் பார்த்து வந்தார். வித்யா 16 வயதில் பரதநாட்டியத்தில் அரங்கேற்றம் செய்தவர். 12 வருடங்களாக பரதம் பயின்றவர். இவர் தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் வேலைப் பார்த்து வந்தார். ‘‘நான் இன்றும் நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன்’’ என்று பேசத் துவங்கினார் வித்யா பவானி. ‘‘பல வருஷமாக பரதம் கற்றுக் கொண்டாலும், நிகழ்ச்சி செய்யும் போது தான் எனக்கு புரிந்தது... நடன நிகழ்ச்சியை பார்க்க வருபவர்களில் சிலருக்கு மட்டுமே அந்தக் கலையை பற்றிய புரிதல் இருந்தது என்று. மற்றவர்களுக்கு ஆர்வம் இருக்கும், ஆனால் பரதம் குறித்த அடிப்படை விஷயங்கள் தெரியாது. இருந்தாலும் பார்க்க வருவார்கள். அவங்களுக்கு நாம நடனத்தில் என்ன குறிப்பிட்டு இருக்கிறோம்னு புரியாது. அதனால் நிகழ்ச்சி துவங்கும் முன் அன்றைய நடனத்தை பற்றி ஒரு முன்னுரை கொடுப்பேன். ஆனா அது மட்டுமே பரதம் குறித்து மக்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியாதுன்னு தோணுச்சு. அதனால ‘அப்ரிஷியேட்டிங் பரதநாட்டியம்’ என்று செமினார்கள் எடுக்க ஆரம்பிச்சேன்.

அந்த சமயத்தில் நான் வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். வேலைக்கு சென்று வந்தாலும், நடன நிகழ்ச்சி, செமினார்கள் என்று என் வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருந்தது. இந்த சமயத்தில் தான் எனக்கு திருமணம் நிச்சயமாச்சு. சுரேஷ் என் வாழ்க்கையில் இணைந்தார். என் கணவர் எழுத்தாளர் என்பதால் அவருக்கு பரதம் குறித்தும் தெரிந்து இருந்தது. என்னுடைய செமினாருக்கு வந்தவர், முடிந்ததும், ‘நீ பேசுவதையே ஏன் புத்தகமா எழுதக்கூடாது’ ன்னு கேட்டார். மேடையில் பேசிடலாம்... ஆனா எழுத முடியுமான்னு எனக்கு குழப்பமா இருந்தது. என்னை எழுத தூண்டியது என் கணவர்தான். அவர் பத்திரிகை துறை என்பதால் ஆலோசனை வழங்கினார். நான் செமினாரில் பேசியது என்னுடைய முதல் நூலா வெளியானது’’ என்றவர் தன் புத்தகத்தை வெளியிடுவதற்காகவே பதிப்பகத்தை துவங்கியுள்ளார்.

‘‘முதல் புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்ன்னு நாங்க எதிர்பார்க்கல. அதன் பிறகு புத்தகங்களை எழுதுவதுன்னு நான் முடிவு செய்தேன். அதனால் என் வேலையை ராஜினாமா செய்தேன். அவரும் பதிப்பகத்தை பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதால், தன் வேலையை ராஜினாமா செய்தார். மாதச் சம்பளத்துக்கு பழகிய நாங்கள் சொந்தமா தொழிலில் ஈடுபட்ட போது, சமாளிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இதுதான் எங்களின் இலக்கு என்று இருவரும் திடமாக முடிவு செய்ததால், அதை நோக்கி எங்களின் பயணம் தொடர்ந்தது. பரதம் பற்றி மட்டும் இல்லாமல், மற்ற  நடனக்கலை மற்றும் கர்நாடக சங்கீதம் குறித்து புத்தகம் எழுதினேன். ஒவ்வொரு கலை பற்றி எழுதும் போது அதற்காக பயணம் செய்வோம். உதாரணத்திற்கு கதகளி நடனம் பற்றி எழுதும்போதும் கேரளா முழுதும் இரண்டு மாதம் பயணம் செய்தோம். அந்த கலைஞர்களை சந்தித்து பேசினோம். உண்மையை சொல்லணும்ன்னா கலை பற்றி பேசுவது எளிது, எழுதுவது கடினம்’’ என்றவர் வருடத்திற்கு கட்டாயம் ஒரு புத்தகம் என்று இதுவரை 40 புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

‘‘பரதத்தை குறித்து இது என்னுடைய ஆறாவது புத்தகம். ‘வாட் இஸ் பரதநாட்டியம்’? கொஞ்சம் வித்தியாசமான புத்தகம். இதுவரை நான் எழுதி இருக்கும் அனைத்து புத்தகங்களும் கலை மற்றும் கலாசாரத்தை சார்ந்துதான் இருக்கும். இந்த புத்தகம் முழுக்க முழுக்க தன்னம்பிக்கை ஏற்படுத்தக்கூடியது. அதாவது பரதநாட்டியம் மூலம் நம்முடைய வாழ்க்கைக்கான பாடங்கள் என்று சொல்லலாம். பொதுவாகவே நீங்க மோட்டிவேஷனல் குறித்த புத்தகங்களை படிக்கும்போது, அதில் பாசிடிவ் திங்கிங், வாழ்க்கையை வெற்றிகரமாக எப்படி சமாளிக்கலாம்... போன்ற விஷயங்கள் பற்றி குறிப்பிட்டு இருக்கும். அதை பரதத்தின் மூலம் எப்படி பயன்படுத்தலாம்ன்னு சொல்லி இருக்கேன். முதல்ல எப்படி எங்கிருந்து எழுதுறதுன்னு புரியல. இது போன்ற புத்தகங்களை படிக்கும் போது அல்லது பரதத்தை கொண்டு எழுதும் போது, முதலில் பரதம் குறித்த அடிப்படை விஷயங்கள் தெரிந்து இருக்கணும். பரத நாட்டியத்தில் கிருத்தி, ஜதின்னு வார்த்தைகள் பயன்படுத்துவது இயல்பு. அந்த வார்த்தைக்கான அர்த்தங்கள் முதலில் புத்தகம் படிப்பவர்களுக்கு புரியணும். அடுத்து, பரதத்தில் பயன் படுத்தப்படும் வார்த்தைகள் எவ்வாறு நம்முடைய வாழ்க்கைகான பாடங்களை சொல்லித் தருகிறது என்பதை குறிப்பிட்டு இருக்கிறேன்’’ என்றவர் பரதம் எவ்வாறு நம் வாழ்வுடன் ஒன்றியுள்ளது என்பதை விவரித்தார்.

‘‘நவரசம். நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் நம்முடைய முகபாவங்கள் மாறுபடும். அதை நம்முடைய வாழ்க்கை முறையில் ஒவ்வொன்றாக விளக்கி இருக்கேன். தாளம், இதில் நாம் ஒன்றை விட்டாலும், ஜதி தப்பாகும். தாளத்தை கால நிர்வாகத்துடன் (time management) ஒப்பிடலாம். சிறிது நேரம் தவறினாலும் நாம் செய்ய வேண்டிய ஒவ்வொரு காரியமும் பின்னடையும். அதே போல் பதம், இதை சோஷியல் மீடியாவுடன் இணைத்திருக்கிறேன். மார்கம்... நமக்கான முக்கியத்துவத்தை எவ்வாறு தேர்வு செய்வது... இப்படியாக வாழ்க்கை குறித்த அனைத்து விஷயங்களையும் பரதத்துடன் ஒப்பிட்டு எழுதி இருக்கேன். வாழ்க்கை ரொம்ப சிம்பிள்... நாம் தான் குழப்பிக் கொள்கிறோம்’’ என்கிறார்.
‘‘எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு ஆலோசகர் அவசியம். அந்த ஆலோசனையை தான் நான் பரதம் மூலம் வழங்கி இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல், இந்த புத்தகத்தை படிப்பவர்களுக்கு வாழ்க்கையுடன் இணைந்து பரதம் குறித்து அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும். என்னுடைய முக்கிய நோக்கமே பரதக்கலையை மக்கள் மனதில் புரிய வைப்பது தான். அதன் மூலம் இந்த கலையை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள இந்த புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்ற வித்யா வாழ்க்கையை குறித்து  சொல்லும் ஒவ்வொரு விஷயத்தையும் பரதத்துடன் எளிதாக ஈடுபடுத்திஉள்ளார்.

‘‘அதுவும் சொல்லுவாள்... ‘இது ஒரு பதம். அதில் ஒரு பெண் தன் தோழியிடம், தன் காதலன் வேறு ஒரு பெண் மேல் மோகம் கொண்டுள்ளான். அதனால் அவள் வளமாக இருப்பதாக கூறுவாள். அந்த சமயம் அவள் மனதில் அளவில்லாத பொறாமை வெளிப்படும். அவளை போல் எனக்கு வளம் இல்லை என்று பொறாமைப்படுவது தான் இந்த பதம் உணர்த்தும். அந்த பொறாமை நம் தன்னம்பிக்கையை எவ்வாறு உடைக்கிறது என்பதை புரியவைத்திருக்கிறேன். சாத்விகா அபிநயா என்பது ஒரு அபிநயம். அதாவது சில செயல்கள் நம்மை மீறி வெளிப்படும் என்பதை இந்த அபிநயம் குறிக்கும். குறிப்பாக நம் உணர்வுகள் தூண்டப்படுவதால் வெளிப்படும் செயல்கள்.  கோபத்தில் நாம் பேசும் வார்த்தைகள் மற்றவர்களை பாதிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் மனதால் யோசித்து செயல்பட வேண்டும் என்று இதன் மூலம் உணர்த்தி இருக்கிறேன்.அஹார்யா அபிநயா என்றால் ஆடை அலங்காரம். ஒரு நடனத்திற்கு தயாராக குறைந்த பட்சம் 2 மணி நேரமாகும். கண் மை அலங்காரம் சரியாக இல்லைன்னா கூட நடனம் ஆடும் போது தெரியும். அதே போல் தான் நான் எங்கு சென்றாலும் நம்முடைய ஆடை அலங்காரம் மிகவும் அவசியம். ஒரு பத்து நிமிடமாவது நமக்கான நேரத்தை ஒதுக்க வேண்டும். இது போல் பத்து விதமான வாழ்க்கைக்கான அடிப்படை விஷயங்களை பரதத்துடன் இணைத்து எழுதி இருக்கேன்.  

இது 100 சதவிகிதம் மோட்டிவேஷனல் புத்தகம். ஒரு பெயின்டிங் நான்கு சுவருக்குள் இருந்தா அதன் மதிப்பு தெரியாது. அதை நாம் வெளியே கொண்டு வரும் போது தான் அதற்கான விலை என்ன என்று நாம் உணரமுடியும். வாழ்க்கையும் அப்படித்தான். இந்த புத்தகம் மூலம் அதை நாம் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்க வைத்திருக்கேன்’’ என்ற சொல்லும் வித்யாவிற்கு இது போன்ற புத்தகம் எழுதுவது பல நாள் கனவாம்.   ‘‘மோட்டிவேஷன் குறித்த புத்தகம் எழுதணும் என்பது என் பல நாள் கனவு. ஒரு முறை ஒரு அரங்கேற்றத்தில் பேசும் போது, பரதம் கற்றுக்கொள்வதால் என்ன பயன்னு பேசினேன். ஒருவருக்கு பரதம் தெரிந்தால், அவங்க நிறுவனத்தில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. கையில் ஒரு கலை இருக்கு. அதை நாம் பலருக்கு சொல்லித் தரலாம், கையில் கட்டையும் குச்சியும் இருந்தா போதும் என்று பேசி இருந்தேன். அந்த நிகழ்ச்சி யுடியூபில் வந்தது. அதை பார்த்த என் மாணவி இப்போது நடனப் பள்ளியை ஆரம்பித்திருக்கா. என்னால மோட்டிவேட் ஆகும் போது நாம் ஏன் இதை மத்தவங்க பயன்படும் படி எழுதக்கூடாதுன்னு தோணுச்சு. அதையும் பரதத்துடன் இணைச்சு எழுதினா வித்தியாசமா இருக்கும்ன்னு நினைச்சேன். எழுதினேன்’’ என்றார் புத்தகத்தை கையில் புரட்டியபடி வித்யா பவானி.

-ப்ரியா
படங்கள் : ஏ.டி.தமிழ்வாணன்