அந்த அரவணைப்பில் தாய்மையை உணர்ந்தேன்!வல்லமை தாராயோ...

சுத்தம் சோறு போடும் என்பது பொது மொழி. அந்த பழமொழியையே தன்னுடைய ஜீவனமாக்கிக் கொண்டுள்ளார் சென்னையைச் சேர்ந்த சிவசங்கரி. பிறந்த வீடு கஷ்டமே வாழ்க்கையாகி போன இவர் புகுந்து வீடு சொர்க்கமாகவும், புருஷன் கடவுளாகவும் இருப்பான் என்று எல்லா பெண்களையும் போல எதிர்பார்த்து இல்லற வாழ்க்கைக்கு சென்றவர். கணவர் சென்ற பாதையில் பயணித்து சென்னை வந்து சேர்ந்தார். வந்த இடத்தில் வாழ வழியின்றி நிலைகுலைந்து போக, எந்த வேலையானாலும் உழைத்து வாழ்வதில் வெட்கமில்லை என்று எண்ணியவர் இல்லங்களுக்கு சென்று கழிவறையை சுத்தம் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வாழ்வின் வெற்றிப்பாதையை நோக்கி பயணம் செய்கிறார்.

‘‘சொந்த ஊர் திருவண்ணாமலை, செஞ்சி பக்கத்துல உள்ள கிராமம் விற்பட்டு. என்னுடன் பிறந்தவங்க இரண்டு பேர். அண்ணன், அக்கா, நான் தான் கடைசி. பத்தாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு உடம்புக்கு சரியில்லாம போச்சு. அம்மா கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க. அங்கே நர்சுங்க செய்யுற வேலையை பார்த்து எனக்கு அந்த வேலை மேல தனி ஈர்ப்பு ஏற்பட்டது. நாலு பேருக்கு மருத்துவ உதவி செய்யனும்னு ஆசப்பட்டு, +1ல் நர்சிங் குரூப்ல சேர்ந்தேன். +2 முடிச்சிட்டு மேற்கொண்டு நர்சிங் படிக்க ஆசைப்பட்டேன். வீட்ல படிக்க வைக்க வசதி இல்லை. வேலைக்கு போக முடிவு செஞ்சேன். செஞ்சில உள்ள கிளினிக்குக்கு வேலைக்கு போனேன். ஓராண்டு முடிஞ்சதும் உதவி நர்சுக்கான எல்லா வேலையும் கற்றுக் கொண்டேன். இரண்டு வருஷம் அங்கேயே வேலைப் பார்த்தா நர்சா ஆயிரலாமுன்னு நினைச்சிட்டு இருந்தேன். காலை 8 மணிக்கு வேலைக்கு போனா இரவு 9.30 மணிக்குத்தான் வீட்டுக்கு வருவேன். தினமும் 12 மணி நேரத்திற்கும் மேல வேலை பார்ப்பேன்.’’ என்றவர் கழிவறையை சுத்தம் செய்ய வந்த காரணத்தை விவரித்தார்.

‘‘என் தாய்மாமன் மகன் செஞ்சில ஹோட்டல் வச்சிருந்தாங்க, நல்லா போயிட்டிருந்தது. அவரின் குடிப்பழக்கத்தால, கடையை சரியா கவனிக்காம இருந்தாங்க. உடனே எங்க அத்தை பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா திருந்திடுவான்னு முடிவு பண்ணி அம்மாவிடம் பொண்ணு கேட்க, அவங்களும் சொந்தமும் விட்டுப்போகாது, புள்ளையும் கஷ்டம் இல்லாம இருப்பான்னு நினைச்சு சரின்னு சொல்லிட்டாங்க. 20 வயசில் கல்யாணமாகி பல கனவுடன் புதுமண வாழ்க்கையை அடி எடுத்து வச்சேன். கல்யாணமாகி மூணு மாசம் ஒழுங்கா இருந்தார். குடிக்க ஆரம்பிச்சார். கடை நட்டத்துல போனதால மூடிட்டோம். 2010ல் சென்னைக்கு வந்தோம். கே.கே.நகர்ல உள்ள பக்கத்தில எம்.ஜி.ஆர் நகர்ல வாடகை வீட்ல குடியேறினோம். குழந்தையும் பிறந்துச்சு. இவரும் திருந்தல. குடிப்பழக்கம் அதிகமாச்சு. இப்படியே மூணு  வருஷம் போச்சு. நானும் வீட்ல இருந்துக்கிட்டே பக்கத்துல டெய்லர் தர ஜாக்கெட் துணிக்கு கொக்கி வச்சு கொடுப்பேன்.

அதுல தினமும் ரூ.50 கிடைக்கும். இரண்டாவது பையன் பிறந்த அஞ்சு மாசத்துல, எனக்கு உடம்பு சரியில்லாம போனது. ஆஸ்பத்திரில மூணு மாசம் இருந்தேன். அந்த நேரம் வீட்டு வாடகையும் கொடுக்க முடியாம ரொம்ப கஷ்டப்பட்டேன். சொந்தங்கள் கூட உதவ முன்வரல. இவரோ தன் சுகம் தான் பெருசுன்னு குடியே கதின்னு இருந்தாரு.சென்னைக்கு வந்து புதுசில ஒரு ஹோட்டல்ல மாஸ்டரா இருந்தாரு, அப்புறமா டைல்ஸ் ஒட்ட போனாரு. வாங்குற சம்பளத்துல முக்கா பணத்தை குடிச்சே அழிச்சிருவாறு. ஒரு நாள் பக்கத்து வீட்டு புள்ளங்க ஆப்பிள் பழம் சாப்பிடுவதை பார்த்து என் மக வாங்கித் தரச்சொல்லி கேட்ட போது  எனக்கு அழுகையே வந்திருச்சு. என் புள்ளங்களை திருவிழா கடைக்கு கூட்டிட்டு போனா கூட அது வேணும், இது வேணுமுன்னு கேட்டு அழுவாதுங்க. அப்படிப் பட்ட பிள்ைள திங்க பழம் வாங்கி கேட்டும் வாங்கி கொடுக்க முடியாத பாவி ஆகிட்டேனேன்னு நினைச்சு ரொம்பவும் வருத்தப்பட்டேன். அந்த நிமிஷம் முடிவு செஞ்சேன்  என் பசங்களுக்காக வேலைக்கு போகணும்ன்னு...’’என்றவர் தேர்வு செய்தது கழிவறை சுத்தம் செய்யும் வேலை.

‘‘புள்ளைய சமாதானப்படுத்தி தூங்க வச்சேன். அடுத்த நாள் காலையில எழுந்திருச்சதும் பக்கத்தில தெருவில இருந்த அக்காகிட்ட, வேலை வேணும்ன்னு கேட்டேன்.. அவங்க, ‘‘நீ படிச்ச புள்ளயா இருக்க, எந்த வேலைன்னாலும் பரவாயில்லையா’’ ன்னு சொன்னவங்ககிட்ட கக்கூஸ் கழுவிற வேலைன்னாலும் செய்றேன்னு சொன்னேன். நான் சொன்ன நேரமோ என்னவோ, அதே வேலை இருப்பதாக சொன்னாங்க... நான் தயங்காம வரேன்னு சொல்லிட்டேன். மறுநாள் பசங்கள பால்வாடியில விட்டுட்டு கையில் துடப்பம், ஆசிட்ன்னு கிளம்பிட்டேன். முதல் நாள் எனக்கு கிடைச்ச சம்பளம் 800 ரூபாய். அதில் ஆப்பிள், திராட்சை, பலகாரமுன்னு வாங்கி கொண்டு கொடுத்தேன். எம் புள்ளங்க பழத்தை சாப்பிடாம... என்னை ஓடி வந்து கட்டிப்பிடிச்சது. அந்த அரவணைப்பில் தான் நான் ஒரு அம்மாங்கிறதே உணர்ந்தேன்’’ என்ற சிவசங்கரி பெருகி வந்த கண்ணீரை முந்தானையில் துடைத்துக்கொண்டு பேசத் துவங்கினார்.

‘‘அன்னிக்கு என் புள்ள முகத்துல பார்த்த சந்தோஷம் எப்போதும் இருக்கணும்னு முடிவு செஞ்சேன். என்ன நான் பாத்ரூம் கழுவ போனதுனால நான் ஆக்கி வச்ச சாப்பாட என் வீட்டக்காரர் சாப்பிட மாட்டார். கொஞ்ச நாள் இருந்தாரு. எவ்வளவு நாள் தான் இப்படி இருக்க முடியும். அவரும் மாறினார். முதல்ல செகனன்ட்ல சைக்கிள் வாங்கினேன். இப்ப ஸ்கூட்டி வாங்கி இருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா சேமிக்க ஆரம்பிச்சேன். அதில் பூந்தமல்லியில கால் கிரவுண்ட் இடம் வாங்கி இருக்கேன்’’ என்றவருக்கு தொழில்நுட்பம் தான் கைக் கொடுத்துள்ளது.‘‘அர்பன்கிளப் (urbanclap) என்ற நிறுவனத்தின் மூலமா தான் எனக்கு வேலை. இதில் நான் என் பெயரை பதிவு செய்திருக்கேன். வீட்டின் கழிவறையை சுத்தம் செய்ய விரும்புபவர்கள் இதில் தங்களின் விருப்பத்தை பதிவு செய்வார்கள். உடனே நிறுவனத்தில் இருந்து எனக்கு கால் வரும். ஒரு வீட்டின் கழிவறையை சுத்தம் செய்தா எனக்கு ரூ.399 கிடைக்கும். அதில் ரூ.100 நிறுவனத்திற்கு போக மீதம் ரூ.299 எனக்கு சம்பளம். மேலும் கழுவ தேவையான பொருட்கள் நம்முடைய செலவில் தான் வாங்கணும். ஒரு முறை வாங்கினா ஒரு மாதம் வரை வரும். படிச்ச படிப்புக்கு தகுந்தபடி வேலை கிடைக்கும்ன்னு எதிர்பார்ப்பது முட்டாள் தனம். கிடைச்ச வேலையை பார்த்து முன்னேறணும். அது தான் கெட்டிக்காரத்தனம். எந்த வேலையும் கேவலமில்ல. அடுத்தவங்க பொழப்புல வாழ்கிறது தான் கேவலம்’’ என்று முடித்து விடைபெற்றுச் சென்றார் சிவசங்கரி. இவர் தினமும் ரூ.1000 முதல் ரூ.2000 வரை சம்பாதிக்கிறார்.

-சு.இளம் கலைமாறன்
படங்கள் : ஆர்.கணேஷ் குமார்