வாழ்வென்பது பெருங்கனவு!
கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்... பள்ளி முதல்வர் சுதா சரவணன்

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி


- என்று சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் பாரதி கண்ட கனவு இப்போது நடைமுறையில் வரத்துவங்கிவிட்டது.  பாரதி, புதுமை பெண், ஆணுக்கு நிகராக கல்வி மற்றும் ஆளுமையில் இருக்க வேண்டும் என்று விரும்பினான். அந்த பாரதியின் கனவுகளை நனவாக்கும் விதத்தில், பாரதியாரின் பிறந்தநாளில் பிறந்த சுதா தனியார் பள்ளியில் பணிபுரிந்தபோது தனக்கு ஏற்பட்ட அவமானத்தை சவாலாக ஏற்று அடிமனதில் புதைந்துகிடந்த கனவினை நிஜமாக்கியுள்ளார். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று கனவு கண்டார் கர்மவீரர் காமராஜர். உடையில் கூட பேதம் கூடாது என்று சீருடை கொண்டு வந்தார். பசியால் ஒருவனின் படிப்பு பாழ்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அவரே என் கனவுகளின் பரமாத்மா எனக்கூறும் பள்ளி முதல்வர் சுதா சரவணன் தன் வாழ்வின் பெருங்கனவுகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்...‘‘கனவு காணுங்கள், கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் வெளிப்படுகிறது. சிலர் கனவு கண்டு சிந்தனைகளை வெளிக்கொண்டு செயலாக மாற்றமுடியாமல் தவித்துக் கொண்டு இருப்பார்கள். முடியாத விஷயங்கள் குறித்து கனவு காண்பவர்களே அவற்றை வெற்றிகொள்ள முடியும் எனக்கூறிய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கூற்றிற்கு இணங்க கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் ‘வித்யா விகாஸ் கிட்ஸ் மற்றும் தொடக்கப்பள்ளி’ என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி அதில் வெற்றியும் பெற்று வருகிறேன்.எட்டி விடும் தூரத்தில் வெற்றியும் இல்லை, அதை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப எப்படியாவது என் வாழ்வில் சாதிக்கவேண்டும் என்று சிறு வயது முதல் போராடி கல்வி பயின்றேன். என் குடும்பத்தில் ஒரு முதல் பெண் பட்டதாரியாக மாறி கல்வியில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்று கனவு கண்டேன்.

ஏழை எளிய மாணவர் களுக்கு இலவச கல்வி கொடுக்கவேண்டும் என்ற ஆசையில் ஆசிரியர் பயிற்சி முடித்து ஒரு பெரும் கனவோடு வந்தேன். எனது குடும்பம் ஒரு நடுத்தர குடும்பம். அப்பா கோபு,  அம்மா ராணி. அவர்களுக்கு நாங்கள் இரண்டு பிள்ளைகள். நான் மற்றும் எனது தம்பி சிலம்பரசன்.  என்னுடைய பெற் றோர் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் வாடகைக்கு கடை எடுத்து போண்டா பஜ்ஜி போட்டு விற்பனை செய்து வந்தனர். அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்துதான் என்னையும் என் தம்பியையும் அங்குள்ள ஒரு ஆங்கில வழி தொடக்கப் பள்ளியில் படிக்க வைத்தனர். பள்ளிப் பருவத்தில் துள்ளித் திரிந்த அந்த மகிழ்ச்சியான காலகட்டத்தில் எங்களுடைய அப்பா திடீரென்று இறந்துவிட்டார். அதனால் ஆங்கில வழிக் கல்வியை அந்தப் பள்ளியில் எங்களால் தொடர முடியவில்லை. அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்தோம்.

என்னுடைய அப்பா மரணத்திற்கு பிறகு அம்மா பூக்கடை வைத்து எங்களை காப்பாற்றி வந்தார். யாருடைய ஆதரவும் இல்லாமல் கஷ்டப்பட்டு எங்களை படிக்க வைத்தார். நான் சிறு வயது முதலே பள்ளி பருவத்தில் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு உதவி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். அதனால் என் அம்மா என்னை எப்படியாவது பள்ளி ஆசிரியராக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்காக அவரின் தாலியை விற்று அதைக் கொண்டுதான் என்னை ஆசிரியர் பயிற்சியை முடிக்க வைத்தார். பயிற்சியும் முடிந்தது. அதே சமயம் எனக்கு சரவணன் என்பவரோடு திருமணம் நடந்தது.  எனது லட்சியத்தை அலட்சியப்படுத்தாமல் ஊக்கப்படுத்தும்படியான ஓர் உந்துசக்தி அவர். அதனால்தான் என்னுடைய கனவு இன்றைக்கு வீறுநடையில் வெற்றிபெற்றுக் கொண்டிருக்கிறது’’ என்றவர் பயிற்சி முடித்த கையோடு தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். 

‘‘நான் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தேன். தனியார் பள்ளி மட்டும் இல்லை எல்லா இடங்களிலும் அரசியல் இருக்கத்தானே செய்யும். அதில் நானும் சிக்கிக் கொண்டேன். ஒரு நாள் பள்ளியின் முதல்வர் என்னை அழைத்து ஏளனமாக ‘உனக்கு இதைவிட்டால் என்ன தொழில் செய்யமுடியும், வேறு வழி உனக்கில்லை’ என்று என்னை அலட்சியப்படுத்தினார். நடுத்தரக் குடும்பத்து பெண்களுக்கு இப்படி ஒரு சூழல் ஏற்படுவது இயற்கைதான். ஆனால், போராட வேண்டும். ஒரு சிலர் போராட சக்தி இல்லாமல் கைவிட்டுவிடுகிறார்கள். அப்போதுதான் நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்தால் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து நடத்த முடியாதா? என்று கேள்வி என் மனதில் எழுந்தது. இது என் காதுகளில் பலமுறை ரீங்காரமாக ஒலித்துக் கொண்ேட இருந்தது. முயன்றால் முடியாதது எதுவு மில்லை என்ற அந்தக் குக்கிராமத்தில் 7 மாணவர்களைக் கொண்டு ‘வித்யா விகாஸ் கிட்ஸ்’ என்ற பெயரில் ஒரு சிறு பள்ளியை ஆரம்பித்தேன்.

மாணவர்களுக்கு தரமான கல்வியைக் கொடுத்தேன். பள்ளி ஆரம்பித்தவுடன் கூடவே பல்வேறு எதிர்ப்புகளும் வந்தது. எதிர்த்து சந்தித்தேன். எல்லாவற்றையும் மீறி வீடுவீடாகச் சென்று உங்கள் குழந்தைகளுக்கு சி.பி.எஸ்.இ(CBSE)க்கு இணையான கல்வி மற்றும் அடிப்படைக் கல்வி 100 சதவிகிதம் என்னால் அளிக்க முடியும் என்ற உத்தரவாதத்தைக் கொடுத்தேன். மாணவர் சேர்க்கை அதிகரித்தது. குழந்தைகளுக்கு தரமான கல்வியை கொடுத்தேன். அதிலும் தாய்மொழிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தேன். பெண் ஆசிரியர்களை மட்டுமே நியமித்து இப்பள்ளியை நடத்தி வருகிறேன். தரமான கல்வியைக் கொடுத்ததால் மாணவர்களின் எண்ணிக்கை இப்போது 200-ஐத் தாண்டியது.பள்ளிக்கு அங்கீகாரம் பெறுவதற்கு போதிய பணவசதி இல்லாததால் என்னுடைய நகையை அடகு வைத்து அங்கீகாரம் பெற்றேன். இன்றைக்கு அங்கீ காரத்துடன் ஏராளமான மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை வழங்கி வருகிறேன். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு வருடமும் ஆண்டுவிழாவில் வசதியில்லாத உடல் ஊனமுற்ற மூன்று குடும்பங்களை தேர்வு செய்து எங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறோம்.

எங்கள் பள்ளி மாணவர்கள் கல்வி மற்றும் கல்விசார் நடவடிக்கைகளான நடனம் (பரதம்), தற்காப்புக் கலையான கராத்தே, மனதை ஒரு நிலைப்படுத்தும் யோகா போன்றவற்றில் சிறந்து விளங்கி வருகின்றனர். இவை அனைத்தும் ஒவ்வொரு நாளும் செயற்பாட்டு அடிப்படையில் கற்பிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 2017 ஆம் ஆண்டில் எங்கள் பள்ளி மாணவர்கள் பரதத்தில் கின்னஸ் சாதனை படைத்தனர். அதே போல் 2018-19ஆம் கல்வியாண்டில் தற்காப்புக் கலையான கராத்தேயில் எங்கள் மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்றனர்’’ என்றார். பள்ளிக்கு கடந்த ஆண்டு சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்துள்ளது. ‘‘என்னுடைய கல்வி சேவையை பாராட்டி 2017-2018ம் கல்வி ஆண்டில் “சிறந்த பள்ளிக்கான விருது” கிடைத்தது. அதே ஆண்டிற்கான “சிறந்த முதல்வருக்கான விருது”  கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்து எனக்கு கிடைத்தது. நான் கண்ட கனவு மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்னும் ஏராளமான ஏழைகளுக்கு உதவியும், ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி யும் கொடுக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம்.கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப்போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ!” என்ற பாரதியின் தன்னம்பிக்கை வரிகளோடு முடித்தார் பள்ளி முதல்வர் சுதா சரவணன்.

-தோ.திருத்துவராஜ்