ஆன்லைனில் செட்டிநாட்டு பலகாரம்!



சமீபத்தில் நிகழ்ந்த ‘ஹோம்ப்ரீனர் - சுயசக்தி விருதுகள்’ (Homepreneur Award) பெற்ற பெண்களில் தீபா அடைக்கலவனும் ஒருவர். விருது பெற்ற மகிழ்ச்சியில்  இருந்தவரிடம் பேசியபோது, ‘‘நேச்சுரல்ஸ் நிறுவனம், வீட்டில் இருந்து வேலை செய்து சம்பாதிக்கும் பெண்களுக்காக ‘ஸ்டார்ட்-அப் அவார்ட்’ என்கிற பெண் தொழில் முனைவோருக்கான விருதை வழங்கி வருகிறார் கள். 2018ம் ஆண்டுக்கான விருது எனக்கு கிடைத்தது. சவேரா ஹோட்டல் நிறுவனர் நீனா ரெட்டியின் கைகளில் இந்த விருதைப் பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி’’ என நம்மிடம் பேசத் தொடங்கினார் தீபா.

‘‘என் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி. ஆனால் பிறந்து வளர்ந்தது சென்னையில். கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம். முடித்துவிட்டு ஒரு ஷிப்பிங் நிறுவனத்தில் அக்கவுண்டன்டாக பணியில் இருந்தேன். அப்போது எனக்கு திருமணம் முடிந்து, குழந்தையும் பிறந்துவிட்டது. குழந்தைக்காக வேலையை விட வேண்டிய நிலை வந்தது. கொஞ்சநாள் வீட்டில் இருந்தபோது சும்மாவே இருப்பதுபோல் ஒரு உணர்வு தோன்றியது. குழந்தையைப் பார்த்துக் கொண்டே வீட்டில் இருந்து செய்கிற மாதிரியான ஏதாவது ஒரு தொழில் செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் நண்பர் குடும்பத்தினர் எனது சொந்த ஊரான காரைக்குடியில் இருந்து முறுக்கு, அதிரசம் போன்ற பலகாரங்களை வாங்கி வரச் சொல்லி என்னிடம் கேட்டனர். அவர்கள் கேட்கும் அதே பலகாரங்களை நாங்களும் வீட்டில் மாலை சிற்றுண்டிக்காக அவ்வப்போது செய்து சாப்பிடுவோம். அவர்களுக்காக அதே பலகாரங்களை எங்கள் ஊரில் இருந்து வாங்கிக்கொண்டு வந்தபோது, அதன் விலை மிகவும் அதிக மாக இருப்பதை உணர்ந்தேன்.

கை முறுக்கு, தேன் குழல் முறுக்கு, அதிரசம், பாசிப்பயத்தமாவு லட்டு, சீப்பு சீடை, சின்னச் சீடை போன்றவை எங்கள் ஊரில் மிகவும் பிரபலம். கிட்டதட்ட ஒரு 60 குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரமாக இந்தத் தொழிலைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். வீட்டில் இருந்தபடி இவற்றைத் தயாரித்து மொத்தமாக கடைகள், திருமண நிகழ்ச்சி, சீமந்தம், மற்ற வீட்டு விசேஷங்கள், பண்டிகைகள், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் குடும்பங்களுக்கு செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நமக்குத் தெரிந்த விசயம்தானே ஏன் இதை நாம் இங்கேயே தயாரித்து தெரிந்தவர்கள், நண்பர்கள் என குறைவான விலையில் கொடுக்கக் கூடாது என யோசித்தேன். யோசித்ததோடு நிற்காமல் அதை ஒரு தொழிலாக செய்ய ஆரம்பித்தேன். “பலகாரம்” என்கிற பெயரிலேயே எனது நிறுவனத்தை தொடங்கினேன். எனது தயாரிப்பை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமே? எனக்கு அவ்வளவாக வெளி உலகத் தொடர்புகள் கிடையாது. கல்லூரியில் படித்த தோழிகள், வேலை செய்த இடத்தில் பழகிய நண்பர்கள் மட்டுமே எனக்குத் தெரிந்தவர்கள். முகநூலில் இதற்கென ஒரு பக்கத்தை துவங்கி, அதில் எனது தயாரிப்புகளான காரைக்குடி பலகாரங்களை விளம்பரப்படுத்த தொடங்கி இருந்தேன்.

நான் துவங்கியபோது ஆயுத பூஜை பண்டிகை நேரம். சென்னையில் உள்ள தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், சிறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ்களை வாங்கி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது எனது தயாரிப்புகளான தேன்குழல், கை முறுக்கு, அதிரசம், மா லட்டு, பூந்தி லட்டு, சீப்பு சீடை, உருண்டை சீடை என எல்லாவற்றையும் வாடிக்கையாளர்கள் ருசி பார்ப்பதற்காக ஃப்ரீ சாம்பிள் செய்து அத்துடன் இணைத்து கொடுக்கத் துவங்கினேன். சாப்பிட்டு பிடித்திருக்கிறது என்றால் ஆர்டர் கொடுக்கலாம் எனச் சொல்லி இருந்தேன். அப்படி கொடுப்பவர்களுக்கு 200 கிேலா மீட்டருக்குள் வீடு என்றால் நேரிலே டெலிவரி செய்யும் திட்டத்தையும் வைத்திருந்தேன். நீண்ட தூரம் என்றால் கொரியர் மூலமாகக் கொடுக்கவும் ஏற்பாடு இருந்தது.பூஜை நேரத்தில் பெரிய அளவில் எனக்கு ஆர்டர்கள் வரவில்லை. தொடர்ந்து பதினைந்தே நாளில் தீபாவளி பண்டிகையும் வந்தது. எனது பலகாரங்களின் சாம்பிளை ருசித்தவர்கள் ருசி பிடித்துப்போகவே நன்றாக இருப்பதாகச் சொல்லி முகநூல் பக்கத்தில் உள்ள என் தொடர்பு எண் களைத் தேடி ஆர்டர்களை கொடுக்கத் தொடங்கினார்கள். தொடர்ந்து எனக்கு நிறைய ஆர்டர்கள் வரத் தொடங்கியது. என்னுடன் என் அம்மா மட்டுமே அப்போது உதவிக்கு இருந்தார். இருவருமாக எப்படி சமாளிப்பது என யோசித்து உதவிக்கு ஒரு ஆளையும் நியமித்துக் கொண்டோம்.

சென்னையில் கிடைக்கும் அரிசி, உளுந்து போன்றவைகளை வாங்கி, இங்குள்ள மெஷின்களில் அவற்றை அரைத்து பலகாரம் செய்வதற்கும், எங்கள் ஊரான காரைக்குடிப் பகுதிகளில் அரிசி, உளுந்து இவற்றைக் கொள்முதல் செய்து அங்கிருக்கும் மெஷின்களில் மாவை அரைத்து அதில் பலகாரங்கள் செய்வதற்கும் இடையே ருசி, நிறம், மணம், என எல்லா வற்றிலும் மிகப் பெரும் வித்தியாசம் இருக்கும். பலகாரங்களின் டெக்ஷ்டரிலும் மிகப்பெரும் வித்தியாசத்தைப் பார்க்கலாம். தேன் குழல் என்பது முறுக்கின் கம்பிகளை ஒடித்தால் நடுவில் குழல் மாதிரியான ஓட்டை இருக்கும். ஆனால் இங்குள்ள முறுக்கில் அப்படி இருக்காது.  மேலும் முறுக்கில் இங்கு மைதாவை சேர்க்கிறார்கள். இதனால் எண்ணை அதிகமாக அதில் கோர்த்திருக்கும். எங்கள் தயாரிப்பு உளுந்து மற்றும் அரிசி மட்டும் என்பதால், பலகாரங்களில் எண்ணை என்பதே இருக்காது. மேலும் கை முறுக்குகளை இங்கே ரெடிமேட் மெஷின் மூலமாக தயாரிக்கிறார்கள். நாங்கள் கைகளிலேயே பொறுமையாகச் சுற்றித் தயாரிப்போம். எங்களின் மூதாதையர்களான பாட்டி, கொள்ளு பாட்டிகளிடம் இருந்து வழிவழியாகக் கற்றதை நாங்கள் அப்படியே பாரம்பரியம் மாறாமல் தொடர்ந்து செய்கிறோம். ஆர்டர்கள் அதிகமாக வரும்போது, எங்கள் உறவினர்களையே உதவிக்கு அழைத்துக்கொள்கிறேன்.

பலகாரங்கள் எதையும் முன்னதாகத் தயாரித்து நான் ரெடியாக வைப்பதில்லை. ஆர்டர்களைப் பெற்ற பிறகே தயாரிப்பில் இறங்குகிறேன். எங்கள் ஊரிலேயே அதற்கான மூலப் பொருட்களை வாங்கி மாவாக அரைத்து எடுத்து வந்து இங்கே தயாரிக்கத் தொடங்கியதில், வாடிக்கையாளர்களிடம் எனக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. என்னிடம் வாங்கிச் சென்றவர்களுக்கு என் கைபக்குவம் பிடித்திருந்தது. ஆர்டர்கள் தொடர்ந்து வரத் தொடங்கியது. முகநூலில் செய்யும் விளம்பரம் தவிர, தொழில் முனைவோருக்கான கண்காட்சிகள் நடக்கும் இடங்களில் உள்ள ஸ்டால்களில் எனது தயாரிப்புகளை வைத்து விளம்பரப்படுத்தினேன். பார்வையிட வருபவர்களிடம் என் தயாரிப்பைக் கொடுத்து ருசிக்கச் சொல்வேன். அவர்களுக்கு பிடித்து, அதன் வழியாகவும் ஆர்டர்கள் எனக்கு கிடைக்கத் தொடங்கியது. தொடர்ந்து வீட்டு விசேஷங்கள், திருமண ஆர்டர்கள் என வரத் தொடங்கின.ஹோம் டெலிவரி செய்வதை ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் செய்ய  முடியாமல் போகவே, ஸ்விக்கி மாதிரியான ஃபுட் டெலிவரி செய்கிற நிறுவனத்துடன் டை-அப் செய்து, ஹோம் டெலிவரிக்கு ஏற்பாடு செய்து கொண்டேன். பெரிய நிறுவனங்களின் டீ பிரேக்கின்போது தரப்படும் சாண்ட்விச், பீசா, பர்கர் மாதிரியான ஸ்நாக்ஸுக்கு பதிலாக எனது பலகாரங்களை கொடுக்கத் துவங்கியிருக்கிறேன். என் கணவரின் அலுவலகத்தில் இருந்து இந்த முயற்சியை ஆரம்பித்திருக்கிறேன். இதேபோல் பல நிறுவனங்களிலும் கொடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

இதுவரை என் தொழில் சிறப்பாகவே இருக்கிறது. FSSAI (food safety and standards authority of India) சான்றிதழ் பெற்று உணவு பொருள் விற்பனைக்கான உரிமையும் வாங்கிவிட்டேன். என் தயாரிப்புகளை சென்னையில் உள்ள மிகப் பெரிய வணிக நிறுவனங்களில் விற்பனைக்கு வைக்க பேசிக் கொண்டிருக்கிறேன்.தயாரிப்பைவிட வாடிக்கையாளர்களை நம்ப வைப்பது தொழிலில் மிகப் பெரிய சவாலான விசயம் என்றவர், மார்க்கெட்டில் கிடைக்கும் மற்ற தயாரிப்புகளை விட எனது தயாரிப்பு எப்படி சிறந்தது என்கிறநம்பகத்தன்மையை வாடிக்கையாளர்களி டத்தில் ஏற்படுத்திவிட்டால் போதும். அவர்களே நம்மைத் தேடத் தொடங்கி விடுவார்கள் என்ற சூட்சுமத்தையும் தெரிவித்தார். எந்தத் தொழிலாக இருந்தாலும் முதலில் சிறிய அளவில் தொடங்கி வெற்றியை நோக்கி முன்னேறுங்கள். ஆரம்பிக்கும் போதே பெரிதாகத் துவங்கி திணற வேண்டாம். பண்டிகை காலங்கள், முகூர்த்த மாதங் களாக இருந்தால் மாதத்திற்கு இருபத்தி ஐந்தாயிரத்திற்கு குறையாமல்  இதில் வருமானம் பார்க்கலாம்’’ என்று கூறி விடைபெற்றார் இந்த ஹோம் ப்ரீனர்.

-மகேஸ்வரி