நீரி : அரங்கு கலைஞர் லெக்ஷ்மி



லெக்ஷ்மி ஸ்ரீராமன் அமெரிக்க நாட்டில் வசிக்கும் பரத நாட்டியக் கலைஞர். இவர் தமிழில் இருக்கிற சங்ககாலத்துப் பெண் புலவர்களான ஔவையாரில் தொடங்கி, ஆண்டாள், அங்கவை-சங்கவை எனத் தொடர்ந்து... தற்போது சமகாலத்து பெண் கவிஞர்களான சல்மா, சுகிர்தராணி போன்றோரின் கவிதை வரிகளையும் கையாண்டு, அதில் பெண்களின் அன்பை, காதலை, வலியை, இடம்பெயர்தலை, போராட்ட குணத்தை, பொதுவெளியை தங்களின் எழுத்தில் எப்படி வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து தன் நடன அசைவுகளில் மேடையேற்றி வருகிறார். சமீபத்தில் சென்னை வந்திருந்த லெக்ஷ்மி ஸ்ரீராமனை சந்தித்தபோது..

‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பி.எஸ்.ஸி. படித்து தொடர்ந்து எம்.எஸ்.ஸி. முடித்த நிலையில், பி.எச்.டி  படிப்பதற்காக அமெரிக்காவிற்குச் சென்றேன். அப்போது அங்குள்ள நிறுவனம் ஒன்றில் மேனேஜ்மென்ட் கன்சல்டென்டாக பணி வாய்ப்பு கிடைத்தது.  தொடர்ந்து திருமணம் முடிந்த நிலையில் குழந்தையும் பிறந்தது. என்னால் வேலையை தொடர முடியாமல் போனது. சின்ன வயதில் சென்னையில் இருந்தபோது பரதம் கற்றுக் கொண்டேன். அதைக் கொண்டு நாட்டியப் பள்ளி ஒன்றைத்  துவங்கி அங்குள்ள மாணவிகளுக்கு பரத நாட்டிய வகுப்புகளை எடுக்கத் தொடங்கினேன்.

ஒரு நிலைக்கு மேல் பரதநாட்டியம் மட்டுமே ஆடிக்கொண்டு இருப்பது எனக்கு அயர்ச்சியைத் தந்தது. கொஞ்சம் மாற்றி யோசிக்கத் தொடங்கியபோது, எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த அனிருத் வாசுதேவன் நட்பு கிடைத்தது. அவர் சிந்தனையும் எனது சிந்தனையும் நிறைய ஒத்துப்போகவே, நாட்டியத்தில் புதுமையாக என்ன செய்யலாம் என சேர்ந்து யோசித்தோம். எங்கள் இருவரின் சிந்தனை வடிவம்தான் பெண் ஆளுமைக் கவிஞர்களின் கவிதை வரிகள். எங்களின் நடன அசைவுகள் அவர்களின் கவிதை உணர்வை வெளிப்படுத்தும். தவிர நாங்கள் அவர்களின் கவிதைகள் மூலம் என்ன சொல்ல வருகிறோம் என்பதில்தான் இருக்கிறது எங்கள் வெற்றி. நாங்கள் எடுத்துக்கொள்ளும் அழுத்தமான வரிகள்தான் அதனை பார்வையாளர்களிடம் கடத்தும்.

சமீபத்தில் கவிஞர் சல்மா மற்றும் சுகிர்தராணி அவர்களின் கவிதை வரிகளில் இருந்த அழுத்தத்தை எங்கள் நடன அசைவுகள் வழியாக உணர்ச்சிகளை வெளிக்காட்டி அழகாகவே சொல்லி இருந்தோம். இதற்காக சென்றமுறை சென்னை வந்தபோது சென்னையில் இயங்கும் கட்டியக்காரி தியேட்டர் மூலமாக அதன் செயல்பாட்டாளர் ஸ்ரீஜித் சுந்தரத்திடம் தியேட்டர் பயிற்சியினை எடுத்துக்கொண்டேன். அவரின் பங்களிப்பு இதில் மிகப் பெரியது. எங்கள் நடனத்தைப் பார்க்க அரங்கிற்கு வருபவர்கள் பெரும்பாலும் அமெரிக்கர்கள். அதனால் கான்செப்டை அனிருத் வாசுதேவன் அழகாக விவரித்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, பிரதி எடுத்து பார்வையாளர்களுக்கு கொடுத்துவிடுவார். நடன அசைவுகள் தமிழில்தான் இருக்கும் என்றாலும் ஆங்கிலம் என்பது அந்நாட்டவர்களுக்கான ஒரு இணைப்பு அவ்வளவே. அமெரிக்கர்களுக்கு வார்த்தைகள் புரியவில்லை என்றாலும் நடன அசைவுகளில் சொல்ல வந்ததை உணர்த்தி விடுவோம். நிகழ்ச்சி முடிந்ததும் பார்வையாளர்களின் கரகோஷம்தான் எங்களின் வெற்றி.

இப்போது மீண்டும் இந்தமுறை ஸ்ரீஜித் சுந்தரத்தின் கட்டியக்காரி குழுவினரோடு இணைந்து “நீரி” என்னும் தலைப்பில் புதிய கலைவடிவத்திற்கான பயிற்சியினை மேற்கொண்டு அமெரிக்கா திரும்ப இருக்கிறேன். இதில் பறை, கூத்து, கூத்துப்பாட்டு, சிலம்பம், தியேட்டர் பயிற்சி என எல்லாம் கலந்த கலவையாக நாட்டியத்தில் எனக்கு புதுவடிவம் கொடுத்திருக்கிறார்’’ என்றவர், ‘நீரி’ அரங்க வடிவம் குறித்த புதுமையை நம்மிடம் விளக்கமாக விவரித்தார்…‘‘எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ண னுடைய ‘நதி அறியாதது’ நாடகத்தில் இருந்து சில வரிகளையும், பேராசிரியர் அ.மங்கையின் ‘தேரி காதை’ பௌத்தப் பிக்குனிகளின் பாடல்களில் இருந்து சில வரிகள், மக்கள் கவிஞர் இன்குலாப்பின் ‘ஔவை’ நாடகத்தில் இருந்து சில வரிகள் எனக் கையாண்டு அதை ஒரு முழு கான்செப்டாக மாற்றி, ஒரு பெண் தன் பிரச்சனைகளின் குறியீடாக ஆற்றை சுமந்து கொண்டு வருவதாகவும், அந்த ஆற்றை அவள் எங்கு இறக்கி வைப்பது என்பதில் குழப்பி, இறக்கிவைக்க இடமில்லாமல் தவிப்பதே நீரியாக வருகிறது. இங்கே ஆறு என்பது ஒரு  குறியீடு. அதாவது ஆறு பெண்ணிய சிந்தனையின் குறியீடாக இங்கு வருகிறது.  

இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பல பிரச்சனைகளும், வன்முறைகளும் அதில் காட்சிகளாக விரிகின்றன. ஒரு பெண்ணிற்கு பாது காப்பான உலகம் எங்கு இருக்கிறது…? தனக்கான பாதுகாப்பை அவள் எப்படி தேர்ந்தெடுக்கிறாள் என்பதையே இந்த நீரி காட்சிகளில் விவரிக்கிறது. உலகம் ஒரு வேட்டை நாயைப்போல் பெண்ணை துரத்துவதாகவும், எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி ஓடி ஒளிவது? இரவில் எந்த மூலையில் எந்த மிருகம் ஒளிந்து தாக்கப் போகிறதோ? பாதுகாப்பான இடமென்று உலகில் எதுவுமில்லையா? உறக்கம்கூட எங்களுக்கு நடுக்கமாகவே இருக்கிறது என்பதாக காட்சிகள் விரிகிறது. ஏதோ ஒரு காலத்தில் இங்கிருந்து திருடிக்கொண்டு சென்றுவிட்ட ஒரு ஆற்றை மீட்டுக் கொண்டு வந்திருப்பதாகவும், ஆனால் அதை வைக்க இடமில்லாத அளவுக்கு வானளாவிய உயர்ந்த கட்டிடங்களும், அகன்று விரிந்த தொழிற்சாலைகளும், மருத்துவமனைகளும், முதியோர் இல்லங்களும், கல்விக் கூடங்களும் இன்னும் பல விசயங்கள் ஆறுக்கான இடத்தை எடுத்துக்கொண்டுவிட்டதாக நாடகம் நீள்கிறது.

இறுதியாக பெண்ணுக்கு நடக்கும் அத்தனை துயரங்களையும் போராட்டங்களையும் பெண்களின் வலி மிகுந்த வாழ்க்கையையும் ஒவ் வொன்றாக உருவி முகம் துடைக்கும் துண்டு பேப்பரால் துடைத்து துடைத்து கீழே போட்டுக் கொண்டே வருவதாக காட்சி அமைக்கப் பட்டது. இறுதியில் சேர்ந்துவிட்ட துண்டுப் பேப்பர்கள் ஒவ்வொன்றும் பார்வையாளர்களின் கைகளுக்குள் செல்கிறது. அப்போது நான்  பார்வை யாளர்களின் கண்களை நேராகப் பார்க் கிறேன். நீரியாக நான் எனது நடன அசைவுகளில் கொண்டு வந்து சேர்த்த ஆறு எப்படி பார்வையாளர்களைக் கடந்தது என்பதை என்னால் உணர முடிந்தது. இது வெறும் பெர்ஃபார்மன்ஸ் கிடையாது. இந்த நிகழ்ச்சியை முடித்த பிறகு நான் நிறைய நீரிகளை தினமும் சந்திக்கிறேன். இங்கிருக்கும் ஒவ்வொரு பெண்களுமே நீரிதான். அமெரிக்காவிலும் மிகப் பெரும் நிகழ்ச்சியாக நீரியை மேடையேற்ற முடிவு செய்து அதற்கான முயற்சியிலும் இருக்கிறேன்’’ என முடித்தார்.

-மகேஸ்வரி
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்