பிடித்த இயக்குனர்? பிடிக்காத இயக்குனர்? - குரல்கள்- கி.ச.திலீபன்

பெரும்பான்மையான மக்களைச் சென்றடையும் கலை வடிவம் சினிமா. கலைப்படங்கள்/ வெகுஜனப் படங்கள் என இவற்றில் இரண்டு வகைகள் இருக்கின்றன. உலக சினிமாப் பார்வையாளர்கள் கொரியன் திரைப்படங்களையும், ஈரானிய திரைப்படங்களையும் பார்த்து விட்டு தமிழில் எடுக்கப்படுவது சினிமாவே இல்லை என்று வசைமாரி பொழிவர்.

ஆனால் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பலரும் தங்களுக்கான தனித்துவத்தை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். பொதுவாக பிடித்த நடிகர் யார்? பிடித்த நடிகை யார்? என்கிற கேள்வி எல்லோரிடமும் முன் வைக்கப்படும். ஆனால் பிடித்த இயக்குனர் யார் என்கிற கேள்வி கொஞ்சம் குறைவாகவே இருக்கும். ஆனால் பிடிக்காத இயக்குனர் யார்? என்கிற கேள்வி அரிதினும் அரிதாகவே முன் வைக்கப்படும். ஆகவே தமிழ் திரைப்பட இயக்குனர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார் பிடிக்காமல் போனவர் யார் என்ற கேள்வியை நம் தோழிகளிடம் கேட்டேன்...

இரா.பத்மா, முனைவர் பட்ட ஆய்வாளர்

பிடித்த இயக்குனர் கே.பாக்யராஜ், கிராமிய யதார்த்தத்தை எந்தப் பாசாங்குமின்றி அப்படியே காட்டியவர். மண் சார்ந்து, அதன் மக்கள் மற்றும் அவர்களின் பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் முடிந்த வரையிலும் காட்சிப்படுத்தியிருக்கிறார். அவரது படங்கள் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படியாக இருக்கும். அதே போல் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் விக்ரமன் படங்களும் எனக்குப் பிடித்தமானவை. இவர்களின் படங்கள் எதிர்மறையான எண்ணத்தை பார்வையாளர்களுக்குள் ஏற்படுத்துவதில்லை.

பிடிக்காத இயக்குனர் என்றால் முதலில் ‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனைச் சொல்லலாம். இவர் இயக்கிய இரண்டு படங்களும் பெண்களுக்கு எதிரான மன நிலையை உருவாக்குவதாக இருக்கிறது. மிகப்பெரும் வன்மத்தை இவரது படங்களில் பார்க்க முடிகிறது. அதே போல் இயக்குநர் சுராஜ் படங்கள் ஆணாதிக்க மனோபாவம் நிறைந்ததாக இருக்கும். இவர்களது படங்கள் எதிர்மறையான எண்ணத்தை விதைக்கும் என்பதால் இவர்களை எனக்குப் பிடிக்கவில்லை.

குழலி, தனியார் நிறுவன ஊழியர்

பிடித்த இயக்குனர் ராம். அவரது படங்களில் ஒரு கவித்துவம் இருக்கிறது. அவரது கதாப்பாத்திரங்கள் மிகையுணர்ச்சியை வெளிப்படுத்துவதாக பொதுவான விமர்சனம் இருக்கிறது. அது போன்ற மிகையுணர்ச்சியை நாம் எல்லோரும்தான் வெளிப்படுத்துகிறோம். ஆனால் அதை காட்சி வடிவமாகப் பார்க்கும்போது ஏற்றுக் கொள்ள முடிவதில்லை என்பதே உண்மை. அவர் தனது திரைப்படங்களின் வாயிலாக நம்மை நிறைய விவாதங்களுக்கும், கேள்விக்குள்ளும் கொண்டு போகிறார். அவரது படங்களில் நல்ல தமிழ் இருக்கிறது.

அவர் படைக்கும் கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றும் மிக நுணுக்கமாக இருக்கின்றன. சிற்பி சிலை செதுக்குவதைப் போல் கதாப்பாத்திரங்களை செதுக்கி எடுக்கிறார். பிடிக்காத இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். பொதுவாகவே அவர் பெண்களின் அழகை மட்டுமே ஆராதிக்கிறார். அந்த அழகுமே கூட அவரது எண்ணத்தில் விரியும் அழகுதானே தவிர உண்மையான அழகல்ல. இதுதான் அழகு என ஒன்றைத் திணிப்பது போலவே இருக்கும். துரத்தித் துரத்திக் காதலிக்கலாம் என்று சொல்வது, காதலை ரொமான்டிசைஸ் செய்வது போன்ற காரணங்களால் அவரது படங்கள் எனக்கு பிடித்தமானதாக இல்லை.

மரகதம் முனுசாமி, மென்பொருள் துறை ஊழியர்

பிடித்த இயக்குனர் கே.பாலசந்தர். கதாநாயகனை மையப்படுத்தும்  படங்களில் இருந்து வேறுபட்டு கதாநாயகிகளுக்கான முக்கியத்துவத்தை  அளித்தவர். அவரது பெண் பாத்திரப் படைப்புகள் அனைத்தும் போல்ட் & ஸ்மார்ட். சமூகத்தின் கட்டுகள் அனைத்தையும் உடைத்தெறியும் புதுமைப்பெண்களாக அவர்கள் வலம் வருவார்கள். வலுவான காட்சியமைப்புகள், ஒவ்வொரு ஃபிரேமில் ததும்பும் அழகு என எப்போது பார்த்தாலும் சுவாரஸ்யம் குன்றாத படங்களாக இருக்கும்.

கௌதம் மேனன் படங்களில் காட்டப்படும் ஸ்டைலிஷ் மற்றும் பாடல்களின் காட்சியமைப்பு பிடிக்கும். டார்க் எமோஷன்களை காட்சிப்படுத்தும் செல்வராகவனும் எனக்குப் பிடித்த இயக்குனர்தான். பிடிக்காத இயக்குனர் என்று யாரேனும் ஒருவரையோ அல்லது சிலரையோ குறிப்பிட்டுச் சொல்வது கடினம். கதைக்களமே இல்லாமல் வெறுமனே பொழுதுபோக்குக்காக மட்டும் படம் எடுக்கும் இயக்குனர்களை எனக்குப் பிடிக்காது. அதிலும் மசாலாவாக படம் எடுக்கும் இயக்குனர்களின் படங்களை நான் பார்க்கவே விரும்ப மாட்டேன்.

உதயா, இல்லத்தரசி

பிடித்த இயக்குனர் கே.பாலச்சந்தர். 30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களை மையப்படுத்திய படங்களை எடுத்தார். அவரது பெண் பாத்திரங்கள் அனைத்தும் தன்னம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். அவர்கள் வாழ்வை பயம் இல்லாமல் எதிர்கொள்வார்கள். அப்படியான கதாபாத்திரங்களைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் அதன் தாக்கம் ஏற்படும். வாழ்வின் எத்தகைய சூழலையும் மன திடத்துடன் கடக்க வேண்டும் என்பதற்கு உந்துதலாக இருக்கும். அவரது படங்கள் எனக்கு தைரியத்தைக் கொடுத்தன. ஆகவே அவரை எனக்குப் பிடிக்கும். பிடிக்காத இயக்குனர் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. சமூகத்துக்கு பயனற்ற படங்களை இயக்குபவர்களை எனக்குப் பிடிக்காது.

கீதா கணேசன், உளவியல் மருத்துவர்

பிடித்த இயக்குனர் மணிரத்னம். சினிமா பற்றிய நுணுக்கங்கள் பெரிதாகத் தெரியாத எனக்கு அது ஒரு  பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே. நான் எப்போதாவது செலவிடும் மூன்று மணிநேரம் ஒரு ஃபீல்-குட் உணர்வைத் தர வேண்டும் என்ற என் குறைந்தபட்ச எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது முதல் காரணம். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு மேட்டுக்குடி வாழ்க்கையின் மீதான ஆர்வம் இயல்பாகவே இருக்கும்.

அதைத் தனித்துவமான அழகியலுடன் காட்சிப்படுத்தப்படும்போது பெரும் ஈர்ப்புக்கு ஆளாகிப் போனேன் என்று சொல்லலாம். சுஜாதாவின் தீவிர வாசகியான எனக்கு அவர் நாவல்களைப் படிக்கையில் மணிரத்னம் பட பாணியிலான காட்சிகள் கண் முன் விரியும். பிடிக்காத இயக்குனர் ஹரி. வேகமாகக் காண்பிக்கிறேன் பேர்வழி என கண்களை உறுத்தச் செய்வது மட்டுமின்றி எரிச்சலூட்டும் பன்ச் டயலாக்குகள், கிஞ்சித்தும் சிரிப்பை வரவழைக்காத காமெடி(?), இத்யாதி இத்யாதி என எப்போது எழுந்து ஓடலாம் என்ற அவஸ்தையை தரும் படங்களைத் தொடர்ந்து கொடுக்கிறார்.

சசிகலா, இல்லத்தரசி
பிடித்த இயக்குனர் செல்வராகவன். மனித உணர்வுகளையும், மனித மனத்தின் தேடலையும் வெகு இயல்பாக காட்சிப்படுத்தியிருப்பார். தமிழ் திரைப்பட இயக்குனர்களிலேயே மிகவும் யதார்த்தமான திரைப்படங்களை அவர் மட்டும்தான் எடுக்கிறார். மனித மனங்களை அப்படியே திரையில் கொண்டு வருவதற்கு அவரை மிஞ்சிய ஆள் இல்லை என்றே சொல்வேன்.

பிடிக்காத இயக்குனர் ராம். அதற்காக ராமின் அனைத்துப் படங்களும் பிடிக்காது என்றில்லை. ‘கற்றது தமிழ்’ மட்டும் எனக்குப் பிடித்த படம். மற்றபடி ‘தங்க மீன்கள்’ மற்றும் ‘தரமணி’ ஆகிய இரண்டு படங்களையும் தவறான முன் மாதிரிகள் என்றே சொல்வேன். ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்க்கக் கூடாதோ அப்படியாக தங்கமீன்கள் படத்தில் மகளை வளர்ப்பதாகக் காட்டியிருப்பார். ‘தரமணி’ திரைப்படமும் சரியான புரிதலின்றி எடுக்கப்பட்ட படம் என்றே சொல்வேன்.

ஸ்ரீஜா வெங்கடேஷ், இல்லத்தரசி

பிடித்த இயக்குனர் மகேந்திரன். பக்கம் பக்கமாக வசனங்கள் பேசி, நாடக பாணியில் திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில், வசனத்தைக் குறைத்து விட்டு இசைக்கும் காட்சியமைப்புக்கும் முக்கியத்துவம் அளித்தவர் அவர்தான். ‘முள்ளும் மலரும்’ படத்தை எடுத்துக் கொள்வோம். வசனமே இல்லாமல் இசையாலேயே அதன் இறுதிக்காட்சிகளை கொண்டு போயிருப்பார். அந்த உக்தியை அவருக்குப் பின் யாரும் பின்பற்றியதாகத் தெரியவில்லை.

வெகு யதார்த்தமான பாத்திரப்படைப்புகளும், கதைப்போக்கும் உடையவை அவரது படங்கள். ஆகவே அவை என் மனதுக்கு நெருக்கமாக இருக்கின்றன. பிடிக்காத இயக்குனர் ஷங்கர். அவரிடம் இருப்பது ஒரு கதைதான். அதையே திரும்பத் திரும்ப பிரம்மாண்டமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். திரைக்கதையில் பிரம்மாண்டம் இருக்க வேண்டும். ஆனால் காட்சியமைப்பில் மட்டுமே பிரம்மாண்டத்தைக் காட்டுகிறார். அந்த பிரம்மாண்டம் படத்துக்குத் துளியும் தேவையற்றதாகவே இருக்கும்.