உடல் சூடு தணிய...வாசகர் பகுதி

வாத உடம்புக்காரர்களை அதிகம் தாக்கு கின்ற ஒரு பிரச்சனை உடல் சூடு. இவர்கள் தன் உடம்பை சரியாக கவனிக்காமல் இருந்துவிட்டால் உடல் சூடு தாக்கி அதனால் பல்வேறு நோய்கள் வர ஆரம்பித்துவிடும். ஆகவே, நமது உடல் சமநிலையாக இருக்க எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், வயிற்றில் கட்டிகள், வாய்ப்புண், நாக்குப் புண் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடும்.

சித்த மருத்துவத்தில் எளிய மருத்துவ முறைகள் இருக்கின்றன. நீங்களே உங்களது உடம்பிற்கு ஏற்ப மருத்துவ முறைகளை கையாண்டு வந்தால் உடலில் சூடு ஏற்படாமல் பாதுகாத்துக் ெகாள்ளலாம்.

1. காலிஃபிளவர் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.
2. முந்திரிப் பழத்தை சாப்பிட்டு வந்தாலும் உடல் சூடு தணியும்.
3. நாட்டு வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்டால் உடல்சூடு தணியும்.
4. முள்ளிக்கீரையை சிறிது துவரம் பருப்புடன் கடைந்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல்சூடு தணியும்.
5. மணத்தக்காளி கீரையை சிறுபருப்புடன் கடைந்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல்சூடு தணியும்.
6. பொன்னாங்கண்ணிக் கீரையை நீரில் கழுவி, மிளகு, பருப்பு சேர்த்து வேகவைத்து கடைந்து, சிறிது நெய் விட்டு சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.
7. வெள்ளரிக்காய் அல்லது வெள்ளரிப் பிஞ்சு பச்சையாக அப்படியே சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.
8. புளிச்சக் கீரையை சமைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டுவர உடல்சூடு தணியும்.
9. கானாம் வாழை கீரையை எடுத்து அதே அளவு தூதுவளை இலையை சேர்த்து துவரம் பருப்புடன் கூட்டு வைத்து தினமும் பகல் உணவுடன் சேர்த்து சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.
10. ஆவாரம்பூவின் பெரிய இதழ்களை எடுத்து வெயிலில் காயவைத்து பின்னர் இடித்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். காலை மாலை தேயிலைக்குப் பதிலாக இந்தப் ெபாடியை
உபயோகித்துவர உடல் சூடு தணியும்.
11. ஒரு கைப்பிடி அளவு மகிழம்பூவை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக அடுப்பில் கொதிக்க வைத்து பின்னர் ஆறியவுடன் வடிகட்டவும். காலை அரை டம்ளர், மாலை அரை டம்ளர் வீதம் 25 நாட்கள் குடித்துவர உடல் சூடு தணியும்.

-  சீ.மா.கு.பெ.ந. விஜயராஜன், சென்னை - 114.

ராணி மகாராணி

சமீபத்தில் பெல்ஜியத்தில் பர்ஜர்கிங் உணவு நிறுவனம், தன்னுடைய பர்ஜர் உணவு பண்டத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டு இருந்தது. அதில் ‘‘நாட்டின் மன்னர் கிங் பிலிப்வியா அல்லது பர்ஜர்கிங்கா? எது நிஜ கிங் என கேட்டிருந்தது.

இது அந்த நாட்டின் மன்னர் கிங் பிலிப்வியை சங்கடத்தில் ஆழ்த்தியது. இப்படிப்பட்ட சூழல் இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கும் ஏற்பட்டது உண்டு. எலிசபெத் உலகின் மிகப் பிரபலமான ராணி! அவரைப் பற்றிய ஒவ்வொரு தகவலுமே வாசகர்களால் ரசித்துப் படிக்கப்படுபவை! இந்தச் சூழலில் 2015ல்,‘The Sun’ இதழ் 1933ல் ராணி 7 வயதாக இருந்தபோது எடுக்கப்பட்ட 17 வினாடி படச்சுருள் ஒன்றை வெளியிட்டது.

இதில் நாசி (Nazi) சல்யூட் அடித்தபடி ராணி, தன் தாயார், சகோதரி மற்றும் மாமா எட்வர்ட் ஆகியோருடன் நின்றிருப்பார். ஆனால் இதழ், படச்சுருள் எப்படி கிடைத்தது என்ற தகவலை வெளியிடவில்லை. இது ராணியை சங்கடத்தில் ஆழ்த்தியது! ‘‘நம்பிக்கையை குலைக்கும் செயல். 80 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படச்சுருள் எப்படி பெறப்பட்டது என கூறப்படாமலே, தன் நலனுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது’’ என இதழை காட்டி அரண்மனை கருத்து வெளியிட்டது. இந்தக் கருத்தை ஆதரித்து, பலர் தங்கள் எண்ணங்களை பதிவு செய்திருந்தனர்!

- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூரு.

உலகின விலை உயர்ந்த கைப்பை

படத்திலுள்ள கைப்பையின் விலை எவ்வளவு தெரியுமா? 3,80,000 டாலர் (x67 ரூபாய்). சமீபத்தில்  ஹாங்காங் கிரிஸ்டிலெக் கூடத்தில், எதிர்பார்க்கப்பட்ட விலை 1,22,000  டாலருக்கு பதிலாக 15 நிமிடங்களில் 3,80,000 டாலரை தொட்டு ஏலம்  எடுக்கப்பட்டுவிட்டதாம். ஏலம் எடுக்கப்பட்டவரின் பெயர்  அறிவிக்கப்படவில்லை. அது நமக்கும் தேவையில்லை! ஆனால் இந்த கைப்பை இவ்வளவு  விலை போகக் காரணம் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா?

இமய மலைப்பகுதியில்  காணப்படும் அபூர்வ வெள்ளை முதலையின் தோலை பதப்படுத்தி, சாயம்  ஏற்றி, மேலும் அதில் 18 கேரட் தங்கம், 10 கேரட் வைரங்களை பதித்து இந்த கைப்பை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கைப்பையை ஹிமாலய பிர்கின் என அழைக்கின்றனர். காரணம், இதன் வண்ணம் சாம்பல் நிறத்திலிருந்து ஹிமாலய பனி போன்று பளிச்சென ஜொலிப்பதால் இந்தப் பெயராம். வருடா வருடம் இரண்டு அல்லது மூன்று ஹிமாலய பிர்கின் கைப்பைகள் மட்டுமே செய்யப்படுகின்றன.

காரணம் இதனை செய்து முடிக்க நிறைய நேரம் எடுக்குமாம். ஏற்கனவே 2016ல் மற்றொரு பிர்கின் கைப்பை ஏலத்திற்கு வந்தபோது ஏலம் எடுக்கப்பட்ட விலை எவ்வளவு தெரியுமா? 3,00,000 டாலர் (x 67 ரூபாய்). ஆக, இந்த சாதனை தற்போது, மேற்கூறிய பையின் ஏல விற்பனை விலையால் முறியடிக்கப்பட்டுள்ளது.

- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூரு.