ஏய் தில்லா டாங்கு...டாங்கு...பரவை முனியம்மா

- மகேஸ்வரி

2003ம் ஆண்டு அது. பட்டிதொட்டி எங்கும் அந்தக் குரல் “ஏய் சிங்கம் போல” என ஹைபிட்சில் ஓங்கி ஒலிக்க, தொலைக்காட்சியில் எந்தச் சேனலை திருப்பினாலும், நாலடிக்கும் குறைவான அந்த உயரம், தன் கை கால்களை காமெடியாக அசைத்து ஆட்டிக்கொண்டு, உடல் மொழியில் மொத்தக் குதூகலத்தையும் அள்ளிக் கொட்டி பாடிய, ‘தூள்’ படத்தின் அந்தப் பாடல் இருக்கையில் இளைஞர்களை இருக்கவிடாமல் ஹிட்டடித்தது.

வீடு முழுவதும் விருதுகள் நிறைந்து கிடக்க, திருப்பதியில் மொட்டை போட்டுவிட்டு ‘‘காலைலதான் வந்தேன்” என நம்மிடம் பேசத் துவங்கினார் பரவை முனியம்மா. ‘‘அரைமணி நேரத்தில் ‘ஏய் சிங்கம்போல…’ பாட்டு ரெக்கார்டிங் முடிச்சேன். அது ஒரு காலம். இப்ப நினைச்சாலும் வேதனையா இருக்கு. என் குரலும், நடிப்பும் போச்சே” என்று வருந்தியவர், சட்டென்று சுதாரித்து, ‘‘60 வயசுல நடிக்க வந்தேன். பத்து வருஷம் தொடர்ந்து 80 படத்துல நடிச்சுட்டேன். ‘மான் கராத்தே’ படத்தில் நடிக்கும்போதே எனக்கு உடம்புக்கு முடியல, அத்தனையிலும் பாட்டிதான்.

நாலு மலையாளப் படத்துலகூட நடிச்சேன். அதுலையும் பாட்டி வேஷந்தான். மலையாளத்தில் மம்முட்டிக்கும் பாட்டியா நடிச்சேன்” என கண்ணைச் சுருக்கி அவரின் டிரேட் மார்க் சிரிப்பை காட்டுகிறார். ‘‘கணவன், மனைவியா மட்டும் நடிக்க ஒத்துக்கல. அது எனக்கு பிடிக்கலை” என்றவர், தான் நடித்த படங்களில் சிலவற்றை மூச்சு விடாமல் வரிசைப்படுத்தத் தொடங்கினார்.

தூள், காதல் சடுகுடு, உதிராத பூக்கள், உன்னைச் சரண் அடைந்தேன், கிச்சாவின் காதல், சத்யராஜ் உடன் சுயேட்சை எம்.எல்.ஏ., சரத்குமாருடன் ஏய், பார்த்தி பனுடன் கண்ணாடிப் பூக்கள், அர்ஜுனுடன் ஜெயசூரியா, சிம்புவுடன் கோவில், ஸ்ரீகாந்துடன் பூ, தனுஷுடன் தேவதையைக் கண்டேன், சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே என முடித்தவரிடம் பாடச் சொல்லிக் கேட்டதற்கு, ‘‘மூச்சு வாங்கும் முடியல என்னால” என மறுத்தார் அந்த அதிர வைக்கும் குரலுக்கு சொந்தக்காரி.

‘‘நான் நடிச்ச கடைசிப் படம் சிவகார்த்திகேயனோட மான் கராத்தே. அந்தப் படம் பண்ணும்போதுதான் கடைசியா சென்னைக்கு போனேன். காரிலே டிரைவர் போட்டு சூட்டிங்குக்கு போவேன். அந்தப் படத்த கடலுக்கு பக்கத்துலயே வச்சு எடுத்தாக. ஏய்.. ராயபுரம்.. ஏய் ஏய்..ராயபுரம்… ராயபுரம் பீட்டரு.. என பாடி சட்டென குரலை தாழ்த்தியவர், சிவகார்த்திகேயன் தம்பி என்னை வந்து ஆஸ்பத்திரியில பார்த்துச்சு. உடம்பு சரியில்லாமல் படுத்துட்டேன்.

நடக்க முடியலை. பேசுனா மூச்சு வாங்குது. பிரஷர், சுகர், மூச்சுத்திணறல். என்னால ஒண்ணும் செய்ய முடியாமப் போச்சு. ஆஸ்பத்திரியில சேர்த்துட்டாக. 10 நாள் ஐ.சி.யு.வில் இருந்தேன். நான் உடம்பு சரியில்லாமல் இருக்குற நியூசப்பார்த்து ஜெயலலிதா அம்மா கலெக்டரய்யா போன்ல என்னைக் கூப்புட்டு பேசுனாக. மெட்ராசுக்கு வாங்க இங்க அப்பல்லோவுல வைத்தியம் பார்க்கலாம்னு கூப்புட்டாக. நான் ஒத்துக்கல. வேணாம்மா இங்கய பார்க்குறேன்.

அவ்வளவு தூரம் என்னால வர வசதிப்படாதுன்னு சொல்லிட்டேன். அப்புறம் ஆஸ்பத்திரி செலவை எல்லாம் அவுகளே ஏத்துக்கிட்டாக. என்னால இப்பவும் ஒண்ணும் செய்ய முடியல. நடமாட்டம் இல்லாமல் வீட்டுக்குள்ளே இருக்கேன்” எனக் கண்கலங்கியவர், சுதாரித்து ‘‘அம்மா இறந்தப்ப சேதி கேட்டு ரொம்ப அழுதேன். என்னால அப்ப மெட்ராசுக்கு போக முடியல. இப்பவும் எம்.ஜி.ஆர் அறக்கட்டளையில் இருந்து உதவித் தொகை மாசம் 6 ஆயிரம் வருது” என்று நெகிழ்ந்தவர், ‘‘தனுஷ் தம்பி 5 லட்சம் கொடுத்துச்சு.

விஷால் தம்பியும் பணம் கொடுத்துச்சு. சென்னையில் இருக்குற பத்திரிகையில என்னைப் பத்தி வந்த செய்தியைப் பார்த்துட்டு அவங்க இதை செஞ்சாங்க. சரத்குமார் தம்பி வந்து என்னைப் பார்த்தார். அவரோட சமத்துவ மக்கள் கட்சி மூலமா அந்தத் தம்பி 25 ஆயிரம் தந்துச்சு. சினிமாவுல டைரக்டர் தரணி மூலமா நடிக்க வந்தேன். ‘தூள்’ படம்தான் எனக்கு நல்ல பேரு வாங்கித் தந்துச்சு.

எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் அது. நான் பாடின “ஏய் சிங்கம்போல…” பாட்டை எல்லா இடத்திலையும் போட்டாக. சூட்டிங்கில் என்னை ரொம்ப ஓட விடமாட்டாக. மெத்தை மேல்தான் தாவ விடுவாக. விக்ரம் தம்பியோடயும், ஜோதிகாம்மாவோடயும் அந்தப் படத்துல நடிச்சேன். விக்ரம் தம்பி ரொம்ப பேசாது. ஆனா ஜோதிகாம்மா நிறைய பேசுனாக.  “ஏய் ஆறுமுகம், அம்மா பீச்சு பாக்கனும்ங்குறாங்க.

பீச்சுக்கு கூட்டிட்டுப்போ”, “ஆமாம்.. பீச்சு அடச்சுக்கிடக்கு...” ‘‘பீச்சை அடைப்பாங்களாம்மா ஈஸ்வரி” என தூள் படத்தின் வசனத்தை கொஞ்சம் நம்மிடம் பேசிக் காட்டுகிறார். சிவா தம்பியோட “தமிழ் படம்” படத்துல காமெடி டானா நடிச்சேன். தொப்பி வச்சு டிப் டாப்பா பேன்ட் சட்டையெல்லாம் போட்டு அதுல வருவேன். சூட்டிங் பூராம் கூத்தும் கும்மாளமும் சிரிப்பாத்தான் இருந்துச்சு. தனுசு தம்பியோட ரெண்டு படம், விஷாலு தம்பியோட ரெண்டு படம் நடிச்சேன். தனுசும், சிவகார்த்திகேயனும் ரொம்ப நல்ல குணம்.

ஆனால் சிம்பு தம்பிக்கு கோவம் டக்குன்னு வரும். ஆனால் என்கிட்ட கோபப்படாது. ரொம்ப நல்லா பேசும். அதுவும் ரொம்ப நல்ல தம்பி. விவேக் தம்பியோட 4 படம் நடிச்சேன். அவர் எங்கிட்ட ரொம்ப நல்லா பேசுவாரு. விவேக் தம்பிய எனக்கு ரொம்ப பிடிக்கும். விவேக் தம்பியோட மகன் இறந்ததக்  கேட்டு ரொம்ப கஷ்டப்பட்டேன். பாவம் அந்தத் தம்பி.

வெளிநாடுங்களுக்கும் படப்பிடிப்புக்காக போயிருக்கேன். “லண்டன்” படத்திற்காக வடிவேலுகூட லண்டனுக்குப் போனேன். 15 நாள் அங்கேயே தங்கியிருந்தேன். என்கூட மயில்சாமியும் வந்தார். எல்லாரும் என்னைய நல்லா பாத்துக்கிட்டாக. ஒரு நாளைக்கு எனக்கு 10 ஆயிரம் சம்பளம் தருவாக. தொடர்ந்து 8 நாள் முதல் 15 நாள் வரை கூட சூட்டிங் இருக்கும். மதுரைப் பக்கம் பெருமாள்பட்டிதான் நான் பிறந்த ஊரு. முள்ளிப்பாளையம் நான் வாக்கப்பட்டு வந்த ஊரு. பரவை என் வீட்டுக்காரவுகளோட நான் பிழைக்க வந்த ஊரு.

ஆனால் இந்த ஊரு பேருதான் எனக்கு நிலச்சுச்சு. பரவை முனியம்மான்னா சின்னப் பிள்ளைகூட என் வீட்டக் கையக் காட்டும். எனக்கு கல்யாணம் ஆனப்ப என் வீட்டுக்காரருக்கு 40 வயசு எனக்கு 18 வயசு. நானு அவருக்கு மூனாந்தாரம். அவரு என்ன கவலையே இல்லாமல் நல்லா பாசமா வச்சுக்கிட்டாரு. அவுக சாகும்போது 115 வயசு. 4ம் வகுப்பு வரைதான் நான் கிராமத்துப் பள்ளிக்கூடத்துல படிச்சேன்.

அப்பவெல்லாம் மணல் மேல எழுதச் சொல்லுவாக. புளியங்கொட்டைய வைத்து நம்பர் போட வைப்பாக. அதுனால எனக்கு நல்லா எழுதப் படிக்கத் தெரியும். டியூன் போட்டுக் கொடுத்தால் எழுதிக் கொடுக்குறத அப்படியே பாடிருவேன். சின்ன வயதில் இருந்து கிராமங்கள்ல நடக்குறதை பாட்டா படிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். நாத்து நடும்போது, கதிரு அறுக்கும்போது, வாய்க்கால் வரப்புல நடக்கும்போது, தண்ணி பாய்ச்சும்போதுன்னு நான் பாட்டுக்கு பாடிக்கிட்டே திரிவேன். கோயில் திருவிழாவுக்கு போகும்போதெல்லாம் சாமிய பத்தி
பாடி கொலவை போடுவேன்.

நிறைய தெம்மாங்கு பாட்டு பாடுவேன். மதுரையில இருக்கற பிரபல ராம்ஜி கேசட் நிறுவனத்திற்காக நிறைய பாடல்கள் பாடி பதிவு செய்து கொடுத்திருக்கேன். பாட்டை எழுதிக் கொடுத்து, டியூன் போட்டுக் கொடுத்துட்டுப் போயிருவாக. நான் அப்படியே பாடிருவேன். அவங்க என்னை நிறைய பாடவச்சு என் பேரில் நிறைய கேசட்டுகளை போட்டாங்க. அவுக மூலமா பட்டி தொட்டியெல்லாம் என்பேரு தெரிய வந்துச்சு. கோயில் திருவிழா, கூத்து, மேடைகள்ல பாடணுமா கூப்புடு பரவை முனியம்மாவன்னு சொல்ற அளவுக்கு பிரபலமானேன்.

கருப்புசாமி பாட்டு, தெம்மாங்கு பாட்டுன்னு நிறைய பாட்டுகள பாடியிருக்கேன். ஒரு கேசட்டில் 10ல் இருந்து 15 பாட்டுங்ககூட இருக்கும். ஒவ்வொரு பாட்டும் 20லேர்ந்து 25 நிமிஷம் இருக்கும்.  80 கேசட் வரை வந்திருக்கும்னு நினைக்கிறேன். அதெல்லாம் நான் கணக்கு வைக்கல. சொந்தமா நான் ஒரு குழு வச்சுருந்தேன். பரவை முனியம்மாள் குழுன்னா அப்ப ஃபேமஸ். என் குழுவில் 14 பேர் வரை இருப்போம்.

மேளம், நாதஸ்வரம், ஆர்மோனியம், தபெலா, ட்ரிபிள் காங்கோ, கடசிங்காரி, உருமி, அக்னிச்சட்டி ஆட்டம், கருப்புச்சாமி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம், எல்லாமே என் குழுவில் இருந்தது. ரெண்டு மட்டும் பாடுவோம். 3 மணி நேரம் கூடப் பாடுவோம். காரில் டீமாப் போவோம். கார் வாடகை, மற்ற செலவுகள் என்னுடையது. அவர்களுக்கு தினச் சம்பளம் கொடுப்பேன்.

சாப்பாடு, காபி எல்லாம் என்னுது. மதுரை வானொலியிலும் நிறைய பாடியிருக்கேன். மதுரை வானொலியில் என்னை முதல் குரலாய் வச்சிருந்தாங்க. நிறைய கிராமிய நிகழ்ச்சி பண்ணுவேன். இந்தக் குரலாலதான் எனக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு, பாடுற வாய்ப்பு கிடைச்சுச்சு. அப்பவெல்லாம் என்னைப் போல நிறையப் பேரு பாடுறதுல பிரபலம். என்னை மாதிரி கச்சேரி, வானொலின்னு பாடுவாக. ஆனால் எங்களுக்குள் போட்டி இருக்காது. எனக்கு உள்ள குரல் எனக்கு. பாடியபோது கிடைத்த வருமானத்தில் நான் சுயமா சம்பாதிச்சு வாங்கிக் கட்டுன வீடு இது” என்றார் மிகவும் இயல்பாய்.

மனநோயாளியாக தன்னுடனே வசிக்கும் தன் கடைசி மகனை அழைத்து நம்மிடம் அறிமுகப்படுத்தியவர், ‘‘நடக்குறதே இப்போ சிரமமா இருக்கு எனக்கு, நடிக்க கூப்பிட்டால் என்னால கண்டிப்பா இப்ப முடியாது. 40 வயசில் பாட வந்தேன். 60 வயசில் நடிக்க வந்தேன். இப்ப 79 வயசாச்சு. ஆண்டவன் எனக்கு என்ன கணக்கு போட்டு வச்சுருக்கான்னு தெரியல” என்றவரிடம் விடைபெற்று வெளியில் வந்தபோது, சுவரில் “தூள் திரைப்படப் புகழ் பரவை முனியம்மா இல்லம்” என்ற பெயர் பலகை நமக்கு விடை கொடுத்தது.

படங்கள்: மகேஸ்வரி